1

சிதம்பரத்துக்குப் பலமுறைகள் போயிருக்கிறேன். “சிதம்பர ரகசியம்” என்று சொல்லப்படும் தரிசனமும் பலமுறை கிடைத்துள்ளது. நம்ம நாட்டிலே அதுவும் தமிழ் நாட்டிலே இலக்கியம் பக்தியை வளர்த்ததா? அல்லது பக்தி இலக்கியத்தை வளர்த்ததா என்று சொல்வது ரொம்பவே சிரமமான வேலை. அப்படி ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது இரண்டும்.

இந்தியக் கோயில்களைப் பற்றிப் பார்த்தோமானால் நம்ம பண்பாட்டோடு, கலாசாரமும் கோவில்களைச் சுற்றியே வளர்ந்திருப்பதைக் காணலாம். புராணக் கதைகள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம். அப்படிச் சிதம்பரம் கோயிலைப் பற்றி அறிய வேண்டுமானால் வேத காலத்தில் உபநிஷதங்கள் மூலம் அறிய முடியும். அவை யாவன: “சாந்தோக்ய உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், ஸ்காந்த, ஜாபால தரிசனம், வராஹ இன்னும் சிலவற்றின் மூலம் அறிய முடிகிறது.

புராணங்களை எடுத்துக் கொண்டால் ஸ்கந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சைவம், லிங்கபுராணம் மூலமும் உபபுராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலிருந்தும் ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், தில்லைவன மகாத்மியம், வ்யாக்ரபுர மகாத்மியம் மற்றும் ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அறிய முடியும்.

தற்காலங்களில் நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம், சங்கர திக்விஜயம், சிவலீலார்ணவம், மதுரா விஜயம் போன்றவற்றில் இருந்தும், சபாபதி விலாச நாடகம் போன்றவற்றில் இருந்தும் அறியலாம். இவ்வளவு தொன்மையான ஒரு ஊரைப் பற்றியும் அதன் கோயிலின் மகத்துவத்தைப் பற்றியும் ஓரளவுக்குத் தான் என்னால் சொல்ல முடியும்னு நினைக்கிறேன். மேற்கண்ட புராணங்களையோ, உபநிஷத்துக்களையோ நான் அதிகமாய்ப் படித்து அறிந்து கொள்ளவில்லை. என்னோட அறிவுக்கு அவ்வளவு சீக்கிரமா எல்லாம் முடியாது. மற்றபடி ஓரளவுக்கு நான் படித்தும், கேட்டும், சொல்லியும் அறிந்த தகவல்கள் இடம்பெறும்.

முதன்முதல் சிதம்பரம் பற்றியக் குறிப்புக்கள் இடம் பெற்றது “சிதம்பர மகாத்மியம்” என்னும் புத்தகத்தில். கையெழுத்துப் பிரதியாக இருந்த இந்தப் புத்தகத்தில் தான் முதலில் சிதம்பரம் பற்றியும், அதன் கோவில் பற்றியும் குறிப்புக்கள் காணப் படுகின்றன. வேத வியாசரால் எழுதப் பட்ட “ஸ்கந்த மஹாபுராணத்தில்” உள்ள “சனத்குமார சம்ஹிதை” யை ஒட்டி எழுதப் பட்ட இந்தப் புத்தகம் 26 அத்தியாயங்களைக் கொண்டது. மூத்த தலபுராணம் என்று குறிக்கப் படும் இதன் கையெழுத்துப் பிரதியையும் அதன் குறிப்புக்களையும் பற்றி Mackenzie Collections-A study of Chidambaram சொல்லுவது என்னவென்றால்:
இது வியாக்ரபாதர் ஆசிரமமாக இருந்தது. ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவரின் யோகாசிரமமாகவும், அவர் கற்பித்துக் கொண்டிருந்த இடமாயும் இருந்தது. மற்றும் மாணிக்கவாசகர் முக்தி பெற்ற ஸ்தலம் என்னும் குறிப்பும் உள்ளது.”மற்ற தலபுராணங்களில் எழுதியுள்ளவை அடுத்து வரும்.

புண்டரீகபுர மஹாத்மியம்:
தில்லையைப்பற்றிப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் சொல்லுவது:
12 அத்தியாயங்கள் உள்ள இது இரு பாகங்களைக் கொண்டது. பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகம். பூர்வ பாகம் 9 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முழுதும் கிரந்த எழுத்துக்களால் ஆன பதிப்பு. 3 அத்தியாயங்கள் கொண்ட இரண்டாம் பாகம் “ரகஸ்ய அத்தியாயம்” என்றும், “பாரத்வாஜ சம்ஹிதை” என்றும் சொல்லப் படுகிறது. இது கையால் எழுதப் பட்டுள்ளது. இதன் முக்கியமான பகுதிகளில், “யந்திர லட்சணம்” “சபா லட்சணம்”, “மந்திரபுர சாரம்” பற்றிய வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளது. “சிவ மஹா புராண”த்தில் உள்ள “ஏகாதச ருத்ர சம்ஹிதை”யை ஒட்டி உள்ள இந்தப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் உள்ள ஒரு அத்தியாயம் முழுதும் இந்த க்ஷேத்திரத்தில் உள்ளப் பத்து முக்கிய தீர்த்தங்களைப் பற்றியது.
திலவன மஹாத்மியம்:
ஸ்கந்த புராணத்தில் உள்ள சனத்குமார சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்ட இது 8 அத்தியாயங்களைக் கொண்டது. இதில் பெரும்பாலும் “சிதம்பர ரகஸ்யம்” பற்றியும், அதன் குறிப்புக்கள் பற்றியும், சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள் பற்றியும் கூறுகிறது.
வ்யாக்ரபுர மகாத்மியம்:
இதுவும் ஸ்கந்த புராணத்தில் இருந்து வந்தது. ஆனால் சூத சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்டது. 19 அத்தியாயங்களைக் கொண்டது. இதன் முக்கியத்துவம் எல்லாம் வல்ல அந்த ஆடவல்லானுக்கும், அவனுடைய தேவி காளியாய் வந்து போட்டிக்கு அழைத்ததையும், காளியை அவன் வென்றதையும் குறிப்பிடுவதோடு அல்லாமல், ஆடவல்லானின் முக்கியமான ஒன்பது வித ஆடல் தோற்றங்களைப் பற்றியும் விவரிக்கிறது

இன்னும் சிதம்பரம் குறித்து நிறையப் புத்தகங்கள் உள்ளன . அவை யாவன:ஹேம சபாநாத மஹாத்மியம்: இதிலே தான் முதன் முதல் “நந்தனாரை” பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. திருநீலகண்டரைப் பத்தியும் இதிலே தான் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆகையால் இது பின்னாளில் வந்தது எனக் கொள்ளலாம். “நடேச விஜயம்” வெங்கடேஸ்வர தீட்சிதரால் எழுதப் பட்டது. இவர் மராட்டிய அரசரான ஷாஜி-2 ஆட்சியின் போது அவரால் ஆதரிக்கப் பட்டவர். இவரைத் தவிர ராமபத்ர தீட்சிதரால் எழுதப் பட்ட பதஞ்சலி சரித்திரமும் ஷாஜி-2 ஆட்சியின் போது எழுதப்பட்டது. வ்யாசகாலர் என்பவர் எழுதிய “சங்கரவிஜயம்” என்னும் நூலும், ஆதிசங்கரரும் அவருடைய முதன்மைச் சீடரான பத்மபாதரும் சிதம்பரம் வந்தது பற்றியும், நடராஜத் திருமேனியின் ரகசியம் பற்றித் தெரிந்து கொண்டது பற்றியும் எழுதி இருக்கிறார். இன்னும் நீலகண்ட தீட்சிதர் எழுதிய சிவலீலார்ணவத்திலும் , அனந்தாச்சாரியா எழுதிய “ப்ரபன்ன மந்திரத்திலும்” சிதம்பரம் பற்றிக் குறிப்புக்கள் இருக்கின்றன. பிரபன்ன மந்திரத்தில் சிதம்பரம் கோவிலுக்குள் நடராஜர் சன்னதிக்கு அருகேயே இருக்கும் கோவிந்தராஜரைப் பற்றியும் அவர் எவ்வாறு அங்கே வந்தார் என்பது பற்றியும் இருக்கின்றன.

கங்கா தேவி எழுதிய “மதுரை விஜயத்தில்” சிதம்பரம் கோவில் மாலிக்காஃபூர் படை எடுப்பின் போது சேதமடைந்ததையும், நடராஜர் காப்பாற்றி வைக்கப் பட்டது பற்றியும் குறிப்புக்கள் கிடைக்கின்றன. இதைத் தவிர கிருஷ்ணதேவராயர் காலத்தில் சிதம்பரம் கோவில் செப்பனிடப் பட்டது பற்றியும் அறிய முடிகிறது. இது போல் இன்னும் நிறையக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. கோவிலுக்கு உள்ளேயே சில கல்வெட்டுக்களும் கிடைக்கின்றன. தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் என்பவர் தில்லை வாழ் மூவாயிரவர் பற்றியும் கோவில் நடைமுறைகள், வழிபாடு முறைகள் பற்றியும் எழுதி உள்ளார்.

நடேஸ ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் என்பது அந்தத் தில்லை வாழ் நடேசனும், சிவகாமசுந்தரியும் பேசிக்கொள்ளுவது போல் அமைந்தது. இது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளான சிவபெருமான் மஹாவிஷ்ணுவுக்குச் சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகளையும், பழக்கங்களையும் கூறியது போல் அமைந்தது. இதைத் தவிர,”பூஜா பதஞ்சலம்” என்னும் நூலில் பதஞ்சலி முனிவர் பற்றியும் சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றியும் ஆதாரபூர்வமான குறிப்புக்கள் இருக்கின்றன. சாதாரணமாக சிவன் கோவில்களில் வழிபாட்டு முறைகள் சைவ ஆகமத்தை ஒட்டியே பின்பற்றப் படும். ஆனால் சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகள் “வைதிக” முறையைச் சேர்ந்தது. அது தில்லை வாழ் அந்தணர் மட்டுமே அறிந்த ஒன்று எனவும் அவர்களுக்கு சிவனே நேரிடையாக அந்த உரிமையைக் கொடுத்திருப்பது பற்றியும் பின் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இனி, கோவிலைப் பற்றியும், அதன் அமைப்பைப் பற்றியும், பரிவார தேவதைகள் பற்றியும் சிறுகுறிப்புக்கள் தரப் போகிறேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book