72

தில்லை நடராஜர் ஆடியது ஆனந்தக் கூத்து என்றால் திருவாரூர் தியாகராஜர் ஆடியதோ, தாளத்தை மறைத்துச் சொல்லப் பட்ட அஜபா நடனம். ஆனால் இருவருக்குமே ஆதிரைத் திருநாளே விசேஷ நாளாகச் சொல்லப் படுகின்றது. திருவாதிரைத் திருநாளில் இருவரின் தேர் உலா மிக மிகப் பிரசித்தி பெற்றது. நடராஜரும், தியாகராஜரும் தேரில் மட்டுமே உலா வருவார்கள். அதன் பின்னர் பெரிய அளவிலான அபிஷேகங்கள் இருவருக்கும் நடைபெறும். ஆண்டுக்கு ஆறு முறைகள் மட்டுமே இருவருக்கும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. தில்லையில் ரகசியம் என்று சொல்லப் படும் சிதம்பர ரகசியம் காண 96 கண்கள் உள்ள சாளரம் மூலமே பார்க்க வேண்டும். ஆனால் திருவாரூரிலோ, அப்பனின் திருமேனியே ரகசியம். இது சோமகுல ரகசியம் என்று சொல்லப் படும்.

தில்லை அம்பலத்தைப் பொன்னம்பலம் என்று சொன்னால், திருவாரூரை பூவம்பலம் என்று சொல்லுவார்கள். தில்லையில் நம சிவாய ஓதப் பட்டால் திருவாரூரில் தியாகேசா, ஆரூரா என்றே சொல்லுவார்கள். இருவருக்குமே செங்கழுநீர் மாலை விசேஷமாய்ச் சொல்லப் படுகின்றது. இரு கோயில்களும் ஆயிரங்கால் மண்டபம் கொண்டது. தில்லைக் கோயிலை ஆகாச ரூபமாய்ப் பார்த்தால், திருவாரூரோ, பூமி வடிவாய்ப் பார்க்கப் படுகின்றது. ஈசன் இரு இடங்களிலுமே விண்ணாகி, மண்ணாகி, எல்லாமாய்த் தான் இருப்பதைத் தெரிவிக்கின்றான். இந்த இரு கோயில்களிலும் இருந்த பழைய மூலஸ்தான லிங்கத் திருமேனி, மூலட்டானேஸ்வரர் என்றே அழைக்கப் படுகின்றது. தில்லைக் கூத்தனின் பாத தரிசனமும் விசேஷம், அதே போல் திருவாரூர் தியாகராஜாவின் பாத தரிசனமும் விசேஷம். பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருமே இந்த இரு இடங்களிலுமே பாத தரிசனம் கண்டதாய்ச் சொல்லப் படுகின்றது. தில்லையிலே அதிர வீசி ஆடிய இடப் பாதத்தைக் கண்டால், திருவாரூரில் இருந்து ஆடிய கூத்தைக் கண்டனர். இன்று நாமும் காண முடிகின்றது. திருவாரூரில் கமலாம்பிகையும், நீலோற்பலாம்பிகையும் தேவியர். தில்லையிலே சிவகாமி அம்மையும், மூலட்டான நாயகியும் தேவியர்.

நடராஜர் சேக்கிழாருக்கு “உலகெலாம்” என்று துவங்கும் அடியை எடுத்துக் கொடுத்துப் பெரிய புராணத்தைப் பாடச் சொல்லும் முன்னரே திருவாரூரில் சுந்தரருக்கு, “தில்லை” என்று அடி எடுத்துக் கொடுத்திருக்கின்றார். இப்படி விண் தத்துவத்தையும், மண் தத்துவத்தையும் அடியார்கள் மூலம் இருவருமே பாமர மக்களுக்கு உணர்த்துகின்றனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book