26

அச்சுத ராயன் ஏற்படுத்திய “வைகானச”வழிபாட்டு முறை பற்றி நன்கு விரிவாகவே பார்த்தோம். இதில் முக்கியமான விஷயம் விட்டுப் போய் விட்டது. அதாவது, நந்தி வர்ம பல்லவனால் புதுப்பிக்கப் பட்டுக் கட்டுவிக்கப் பட்ட விஷ்ணுவின் கோவில், அவனுக்குப் பின் 3 அல்லது 4 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த சோழகுல அரசன் 2-ம் குலோத்துங்கனால் நீக்கப் பட்டு, விஷ்ணு அவரின் இருப்பிடம் ஆன கடலுக்கு அனுப்பப் பட்டதாய்ச் சொல்கிறார்கள். இப்படியே பலவருடங்கள் இந்தக் கோவிலில் விஷ்ணு தன் இருப்பிடத்தில் இல்லாமலே இருந்திருக்கிறது.குலோத்துங்கனுக்குப் பின்னர் வந்த பிற்காலப் பாண்டியர் காலத்தில், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய அரசனின் காலத்திலும், கிட்டத் தட்ட 15-ம் நூற்றாண்டு வரையிலும் விஷ்ணு கோவில் முக்கியத்துவம் பெறவில்லை எனத் தெரிகிறது. அரசர்களின் மான்யங்கள் அனைத்தும் நடராஜருக்கே அளிக்கப் பட்டு வந்திருக்கிறது. சிவ-விஷ்ணு பேதம் பார்க்காத பாண்டியர் காலத்தில் மட்டுமில்லாமல், பின்னர் வந்த கிருஷ்ணதேவ ராயரும் நடராஜருக்கே மானியங்கள் அளித்து வந்திருக்கிறார். அச்சுதராயர் காலத்திலேதான் கடலில் இருந்த விஷ்ணுவைக் கண்டு பிடித்து மறுபடியும் பிரதிஷ்டை செய்திருக்கிறார். ஒரு சிலர் இந்த விஷ்ணுவின் அர்ச்சாவதார மூர்த்தம் தற்சமயம் திருப்பதியில் இருப்பதாகவும் கூறுகின்றனர். அவ்வாறு பிரதிஷ்டை செய்யும்போது தற்சமயம் இருக்கும் கோலத்தில், விஷ்ணுவின் சிரம் தெற்கேயும், பாதங்கள் வடக்கேயும் வைத்துப் பிரதிஷ்டை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷ்ணு சந்நிதிக்கு எதிரே ஒரு குறிப்பிட்ட இடம் உள்ளது. அது தான், கமலமத்யம் என்று கூறுகிறார்கள். இந்த இடத்தில் நின்று கொண்டு பார்த்தால் ஒரே சமயத்தில் நடராஜர் தரிசனமும், மகாவிஷ்ணுவின் தரிசனமும் கிடைக்கும். இவ்வாறு தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாய்க் குறிப்பிடுகின்றனர். இதை சிவ வழிபாட்டின் மூன்று முக்கியமான பகுதிகளாய்க் குறிப்பிடுகின்றனர். அவை யாவன:

அத்யாத்மிகி: இம்முறையான வழிபாட்டில் நாம் கடவுளை நம் உள்ளமாகிய தாமரையில் வைத்து வணங்குகிறோம். நம் உள்ளமே ஆகாயம், அங்கே வழிபடும் “ஒளிச்சுடரே” இறைவன் என்று அறிகிறோம்.

ஆதிதெய்வீகி: இம்முறையில் ஒருவன் “நாராயணனே” அனைத்தும் என்று அறிந்து நாராயணனை வழிபடும் அதே நேரத்தில், அந்த நாராயணன் தன் இருதயத்தில் வைத்துப் பூசிக்கும் சிவனும் வழிபாட்டுக்கு உரியவர் என்று உணர்கிறான். இம்முறையில் அவன் “அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு” என்ற பழமொழியின் உண்மையையும் உணரத் தொடங்குகிறான்.

ஆதிபெளதீகி: இம்முறையில் இந்தப் பிரபஞ்சமே அந்த நடராஜரின் ஆளுமைக்கு மட்டுமில்லால் அவனால் ஆட்டுவிக்கவும் படுகிறது என்றும், சகலமும் அவனே, அவனின்றி ஓர் அணுவும் அசையாது! இந்த ஆகாயமும் சரி, சூரிய, சந்திரர்களும் சரி, நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து, மலைகள், மேடுகள், நதிகள், காட்டாறுகள், வெள்ளங்கள், எரிமலைகள், வெயில், வறட்சி, சுபிட்சம், அனைத்துக்கும் காரணன் அவனே என்று புரிந்து கொள்கிறார்கள். இந்த விஷயம் பெரும் ஞானிகள் மட்டுமே அறிய முயற்சித்த ஒன்று. நம் போன்ற சாமானியர்களுக்கும் புரிய வேண்டுமென்று சற்று எளிமையாகவே கொடுக்கிறேன்.

மேற்சொன்ன மூன்று முறைகளையும் பின்பற்றித் தான் சித்சபையில் “சகலஸ்வரூபராக நடராஜரும்”, “நிஷ்கலஸ்வரூபமாக சிதம்பர ரகசியமும்”, “சகல-நிஷ்கலஸ்வரூபமாக ஸ்படிக லிங்கமும்” வழிபாடு செய்யப் படுகின்றன.

இந்தக் கமலமத்யமத்துக்குச் சற்றுத்தள்ளி மண்டபத்தின் நடுவில் துவஜஸ்தம்பம் உள்ளது. பக்கத்திலேயே பலிபீடமும் உள்ளது. இந்த துவஜஸ்தம்பத்தில் தான், ஆனித் திருமஞ்சனம், மார்கழித் திருவாதிரை, பிரம்மோற்சவம் போன்ற திருவிழா சமயங்களில் கொடி ஏற்றுவார்கள். இனி அடுத்து நிருத்த சபைக்குப் போகலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book