31

தட்சிணாமூர்த்திக்கு அடுத்துப் “பல்லிஸ்வரர்” என்பவரின் சன்னதி உள்ளது. பல்லியின் சொல்லுக்குப் பலன்கள் உண்டு என்றும், பல்லி உடலின் எந்தப் பாகத்தில் விழுகிறது என்பதற்குத் தகுந்தாற்போல் பலன் உண்டு என்பதும் மக்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் கெடுபலன்கள் இந்த ஈஸ்வரரின் தரிசனத்தால் விலகும் என்றும் க்ஷேத்ரபாலகர்களில் இவரும் ஒருவர் என்றும் சொல்கின்றனர். அடுத்து வருபவர்

வல்லபகணபதி . சுப்ரமணியர் தாரகன் வதத்துக்குப் போகும்போது இவரை வணங்கி அருள் பெற்றுச் சென்றதாய் ஐதீகம்.

இந்த சன்னதிக்குப் பின் வருகிறது ஒரு சிறிய கோயில். நடராஜர் கோவில் கொள்ளும் முன்பு, இது தான் மூலஸ்தானமாய் இருந்தது எனச் சொல்லப் படுகிறது. லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் ஈசனை, மூலநாதர் எனச் சொல்கின்றனர். பதஞ்சலியும், வியாக்ரமபாதரும் இந்த மூலநாதரைத் தான் முதலில் வழிபட்டு வந்ததாயும், பின்னர் தான் நடராஜ தரிசனம் கிடைக்கப் பெற்று ஆனந்தத் தாண்டவக் கோலத்தைத் தாங்கள் எந்நாளும் கண்டு கொண்டு இருக்க வேண்டும் என்பதால் நடராஜரை இங்கே கோயில் கொள்ள வேண்டினார்கள் என்றும் சொல்கின்றனர். மேலும் இந்த மூலநாதர் ஜைமினி ரிஷியாலும், உபமன்யுவாலும், ராஜா ஹிரண்ய வர்மனாலும் வணங்கப் பெற்றிருக்கிறது. அம்மன் பெயர் உமாம்பிகை. அம்மன் சன்னதியும் பக்கத்திலேயே உள்ளது. இந்த மூலநாதருக்கும் அம்பிகைக்கும் அந்த, அந்தக் கால பூஜைகள், வழிபாடுகள் தீட்சிதர்களாலேயே செய்யப் படுகிறது.

மூலநாதர் கோவிலைச் சுற்றிக் காணப்படுகின்ற இறை ரூபங்களில் குணேச கணபதி, காசி விஸ்வநாதர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், கல்பக விருஷம், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமியும், தையல்நாயகியும், 63 நாயன்மார்கள், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றவர்கள் ஆவார்கள். இதை அடுத்துக் காணப்படுவது, மத்யார்ஜுன க்ஷேத்ரம் என்று சொல்லப் படும் திருவிடைமருதுரின் ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமியின் லிங்கத் திருமேனியும், ப்ருகத்-குஜாம்பிகையும். இந்த மத்யார்ஜுன க்ஷேத்திரத்தில் அம்பாள், சிவனைத் தன் இருதயத்தில் வைத்து, “அதி தெய்வீகி” முறையில் வழிபட்டதால் இந்த லிங்கத் திருமேனியை மகாலிங்கம் எனக்குறிப்பிடுகின்றனர். அடுத்து அருணாசலேஸ்வரரும், தர்ம சாஸ்தாவுக்கும் என ஒரு தனி சன்னதியும் உள்ளது. இதை அடுத்துக் காணப்படும் கல்யாண மண்டபம், யாகசாலையை அடுத்து நாம் கோவிலின் வெளியே வந்து கோபுரங்கள் இருக்கும் திருச்சுற்று வழியாகப் போய் சிவகங்கைக் குளத்தையும் அதன் அருகே இருக்கும் அன்னை சிவகாமியையும் தரிசனம் செய்வோமா?

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book