66


நாம சரியா எழுதினாலும் சில சமயம் சில கேள்விகளால் ஏற்படும் குழப்பம் இப்போது எனக்கும் ஏற்பட்டது. அதிலே முக்கியமான கேள்வியாக குலசேகர ஆழ்வார் காலமும், திருமங்கை காலமும் எப்போ என்ற கேள்வி தான். குலசேகர ஆழ்வாரும் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாளைப் பத்திப் பாடி இருக்கார்னு நானே எழுதி இருக்கேன் தான் இல்லைனு சொல்லலை. திருமங்கை அதன் பின்னரா, முன்னரா என்ற தெளிவு ஏற்படவில்லை. பொதுவாக ஆழ்வார்கள் காலமோ, நாயன்மார்கள் காலமோ கொஞ்சம் குழப்பமாய்த் தான் போகின்றது எனக்கு. ஒருமுறைக்குப் பலமுறைகள் சரி பார்த்த பின்னரும், ஏழாம் நூற்றாண்டா, எட்டா என்பதிலே ஆரம்பித்து, பாடினது அவங்கதானா என்பது வரையில் குழப்பம் வந்துவிடுகின்றது. இம்முறை அப்படிக் குழப்பம் இல்லாமல் எழுதினாலும் கே ஆர் எஸ் குழப்பிவிட்டார். அவர் கேட்ட கேள்வி இதோ கீழே! என்னுடைய பதில் அடுத்து வருகின்றது. இதை
தேவாரம் தளத்தில் இருந்து எடுத்திருக்கின்றேன்.

3. முக்கியமான கேள்வி
//தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்” (குல.தி. 10.2)
என்று பெரிய திருமொழியிலும், குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது//

குலசேகராழ்வார் காலகட்டம் வேறு!
திருமங்கை காலகட்டம் வேறு! திருமங்கை காலத்தால் பிந்தியவர்!

திருமங்கை சொல்லித் தான் பல்லவன் தனிச் சன்னிதி அமைத்தான் என்றால், அதுக்கு முன்பே குலசேகரர் எப்படி திருச்சித்ரகூடம் என்று பாடி இருக்க முடியும்?

தீட்சிதரிடம் இதை வினவினீர்களா
July 18, 2008

//திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் வாழ்ந்த காலத்தில் தில்லை நடராஜப்பெருமான் ஆலயத்திற்குள் திருமாலுக்கு என்று திருமேனி இல்லை. தேவாரங்களில் தில்லையில் திருமால் வழிபாடு இருந்ததாகக் கூறப்படவில்லை. பிற் காலத்தில் நந்திவர்மன் காலத்தில் தில்லைத் திருச்சித்திர கூடம் எடுக்கப்பட்டது.

இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனின் மூத்த மகனாகிய மூன்றாம் மகேந்திரவர்மன் இளமையில் இறந்தான். இரண்டாம் நரசிம்மவர்மன் 728 இல் காலமானான்.அவனது இரண்டாம் மகனான பரமேஸ்வரவர்மன் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து மறைந்தனன். பரமேஸ்வரவர்மனுக்கு வாரிசுகள் இல்லாததால், பல்லவரின் கிளையில் வந்த நந்திவர்மன் கி.பி. 730 இல் பன்னிரண்டாவது வயதில் முடிசூட்டப்பட்டான். இவன் 65 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து 795 இல் மறைந்தனன்.(See Note 9 above.) நந்திவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமங்கை ஆழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் ஆவர்.

வைணவர்களின், குருபரம்பரை, திருமுதியடைவு ஆகியவை களின் கூற்றுப்படி திருமங்கையாழ்வார் கி.பி. 776 இல் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் கி.பி. 767 இல் அவதரித்தவர். (For the dates of Alwars – See Swamikannu Pillai, Indian Ephemeris Volume I Part I Page 489.)

கும்பகோணம் அருகே உள்ள நாதன் கோவில் என்னும் திருமால் தலம் நந்திவர்மனால் எடுப்பிக்கப்பட்டு நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. “நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம்” என்று திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்து அருளினர். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்.”

பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து
புடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த
தில்லைத் திருச் சித்திர கூடம்”
என்று

திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத் திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) என்னும் செய்தி உறுதிப்படுகிறது.”

தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த …..”
என்று

குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தில்லையில் திருமாலின் திருமேனி வைக்கப்பட்டது என்னும் இச்செய்தி மிக முக்கியமானது.
திருமங்கையாழ்வாருக்கும், குலசேகர ஆழ்வாருக்கும் காலத்தால் பிற்பட்டவர் மாணிக்கவாசகர். தில்லையில் திருமாலின் திருக் கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். “வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே” என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.

வரகுணன் – சிவபக்தன்:

மாணிக்கவாசகர் – 863 இல் பல சாத்திரங்கள் அறிந்த சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்தவர். 863க்குப்பின் இரண்டாம் வரகுணனிடம் அமைச்சராகப் பணியாற்றியவர்.//

ஆகவே மாணிக்கவாசகர் காலத்திலே விஷ்ணுவுக்குக் கோயில் நடராஜர் சன்னதிக்குப் பக்கத்திலே இருந்து வந்ததாய்த் தெரிய வருகின்றது அவரின் திருக்கோவையாரில் உள்ள திருச்சிற்றம்பலக் கோவையில் இருந்து.
“புரங்கடந்தானடி காண்பான் புவி விண்டு புக்கறியா
இரங்கி எடந்தாயென்றீ ரப்பத் தன்னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந்தானென்று காட்ட மற்றாங்கதுங்காட்டிடு என்று
வராய் கிடந்தான் தில்லை அம்பல முன் றிலம் மாயவனே!” என்று பாடி இருக்கின்றார். இந்தப் பாடல் தேவாரத்தில் எட்டாம் திருமுறையில் உள்ளது.

அடுத்து ரவிசங்கரின் கேள்வி இது:

//பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும்//

ஏன் போனது ?
தமிழில் பாசுரங்கள் பாடக் கூடாது என்று தீட்சிதர்கள் ஏதாச்சும் தடுத்தார்களா என்ன? அதனால் சண்டை மூண்டு, தனியாக அவர்கள் கைக்குப் போய் விட்டதா என்ன?

இப்போ வைணவர்கள் கைக்குப் போனவிதம் பற்றிக் கொஞ்சம் எழுதப் போறேன். அதற்கு முன்னால் நந்திவர்ம பல்லவனை ஏதோ நான் தான் பரம வைணவன் என்று சொல்லி இருப்பதாய்க் கே ஆர் எஸ் சொல்லி இருக்கும் மகா பயங்கரமான குற்றச்சாட்டுக்குப் பதில் இதோ!
தன் ஆட்சியின் முன்பகுதியில் சைவ, வைணவ சமயங்களில் சமநோக்குடையவனாகவே விளங்கிய நந்திவர்ம பல்லவன், பின்னாட்களில் திருமங்கை ஆழ்வாரின் சகவாசத்தால்தான், வைணவனாக மாறினான் என்றும், “முகுந்தன் திருவடிகளைத் தவிர மற்றொன்றிற்கு இவன் தலை வணங்கவே இல்லை.” என தண்டந்தோட்டப் பட்டயம் கூறுவதாய்த் தெரியவருகின்றது. இவன் காலத்திலேயே திருமங்கை ஆழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் இருந்திருக்கின்றனர். இவனே முதன் முதல் விஷ்ணுவை இங்கே பிரதிஷ்டை செய்தது. பதஞ்சலி கேட்டதும், விஷ்ணு இங்கே வந்து நாட்டியம் பார்த்ததுக்குமான பதில் பின்னால் வரும்.
பணிந்த பல்லவன் எனத் திருமங்கை ஆழ்வார் நந்திவர்ம பல்லவனையே சிறப்பித்துக் கூறி இருக்கின்றார். இந்தக் கோயிலில் தில்லை மூவாயிரவர்களாலேயே வழிபாடுகள் நடந்து வந்தாலும், காலப் போக்கில், பிற்கால வைணவர்களில் சிலர் இதனால் காழ்ப்புணர்ச்சி கொண்டார்கள். அவர்கள் செய்த தொல்லையால், தில்லையில் நடராஜருக்கு வழிபாடுகள் செய்வதோடு மட்டுமின்றி, நாளாவட்டத்தில், கோயிலின் அனைத்து நடைமுறைகளிலும் இடர்கள் நேரிட ஆரம்பித்தன. அனைத்துப் பூஜைகளும் தடைபெற அதனால் மனம் நொந்த இரண்டாம் குலோத்துங்க சோழன், இத்தனைக்கும் காரணம் அங்கே விஷ்ணுவின் மூர்த்தம் கோவிந்தராஜராய்ப் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதும், அந்த மூர்த்தத்திற்கு, தீட்சிதர்கள் வழிபாடுகள் செய்துவருவது வைணவர்களுக்குப் பிடிக்காததாலுமே என்று அறிந்து கொண்டே அந்த மூர்த்தத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினான். இது அவன் அவைக்களப் புலவர் ஆன ஒட்டக்கூத்தரின் உலாவிலும், தக்கயாகப் பரணியிலும் குறிப்பிடப் பட்டுள்ளதாய்த் தெரியவருகின்றது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book