90

சிதம்பரம் கோயில் பற்றிய பல விஷயங்களையும், பல்வேறு விதமான தகவல்களையும் பரிமாறிக் கொண்டோம், இத்தனை மாதங்களாய். இங்கே பூஜை முறைகள் வைதீக முறைப்படியே நடைபெறுகின்றன என்பதையும் பார்த்தோம். ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறும் கோயில்களில் வழிபடுபவர் திருமணம் ஆகாதவராய் இருந்தாலும் வழிபாடுகளைத் தொடர்ந்து செய்யமுடியும். ஆனால் சிதம்பரம் கோயிலில் வழிபாடுகள் செய்யவும், நடராஜரின் கருவறைக்குள் நுழையவும் திருமணம் ஆனால் மட்டுமே தகுதி பெறுகின்றனர். மனைவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. மேலும் சில ஹோமங்கள், யக்ஞங்கள் முறைப்படி செய்து, அதன் மூலம் குருவின் அனுமதி பெற்றே கருவறையில் வழிபாடுகள் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். ஹோமங்களும், யக்ஞங்களும் மனைவி அருகில் இல்லாமல் செய்யமுடியாது. ஆகவே அநேகமாய் தீட்சிதர்கள் அனைவருமே சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ளுகின்றனர்.

அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டாலும் கோத்திரம் பார்ப்பது, பொருத்தங்கள் பார்ப்பது என்ற சம்பிரதாயங்களும் உள்ளன. திருமணத்தில் மணமகனுக்குச் சாதாரணமாய்க் கொடுக்கப் படும் வரதட்சணையோ, இல்லை நகைகளோ அல்லது விலை உயர்ந்த பாத்திர பண்டங்களோ பெரியதாய்க் கருதிக் கொடுப்பதில்லை. அவர்கள் சக்திக்கு உட்பட்டுக் கொடுக்கவும் கொடுக்கலாம், கொடுக்காமலும் இருக்கலாம். இதை ஒரு பெரிய விஷயமாய்க் கருதுவதில்லை. பெண் எடுப்பதும், பெண் கொடுப்பதுமே முக்கியமாய்க் கருதப் படுவதோடு வைதீக சம்பிரதாயங்களுமே முக்கியமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றது. திருமணம் முடிந்ததுமே பெண் மணமகன் வீட்டிற்கு வாழ வந்துவிடுவதில்லை. தற்காலங்களில் பள்ளிப் படிப்பு முடிந்ததுமே பெரும்பாலான திருமணங்கள் நடந்தாலும், பின்னர் மேலே படிக்க விரும்பினாலும் அங்கேயே உள்ளூர் கல்லூரிகளிலேயோ, பல்கலைக் கழகத்திலேயோ படிக்க அனுமதிக்கப் படுகின்றனர். பல தீட்சிதர்களின் பையன்களும், பெண்களும் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, முனைவர் பட்டங்கள் என்று சர்வ சாதாரணமாய்ப் பெற்று இருக்கின்றதையும் கண்கூடாய்க் காணமுடியும்.

சிதம்பரம் கோயில் சிவனுக்கு என்று இருக்கும் கோயில்கள் அனைத்திலும் மிகவும் முக்கியமானதாய்ச் சொல்லப் படுவதன் காரணமே அது இதயப் பகுதியில் இருப்பதால் தான். ஈசனே அங்கே ஆடும் நடனம் ப்ராணாயாம நடனம் என்று தஹரவித்யா கூறுகின்றது. நடராஜரின் ஊன்றிய பாதம் ப்ராணப்ரதிஷ்டையைக் குறிப்பதாயும் சொல்லுகின்றனர். ப்ரணவ சொரூபத்தில் ஆடும் நடராஜரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு குறிப்பும் இந்த உலகத்தின் ஒவ்வொரு இயக்கத்தைக் குறிப்பதாய்ச் சொல்லுகின்றனர். ஏற்கெனவே ஐந்தொழில்களையும் புரிகின்றார் எனப் பார்த்தோம். டமருகம் பொருந்திய கரம் சிருஷ்டியையும், அபயம் அமைந்த கரம் ஸ்திதியையும், அக்னி ஏந்திய கை ஸ்ம்ஹாரத்தையும், முயலகன் முதுகில் ஊன்றிய வலத்திருப்பாதம் திரேதானம் என்னும் மறைத்தலையும், குஞ்சித பாதம் என்னும் இடத்திருப்பாதம் அனுக்ரஹத்தையும் செய்கின்றது என்பதையும் பார்த்தோம்.

அவரின் டமருகத்தின் ஓசையில் இருந்து ப்ராணிகளின் அழைப்பும், அபயஹஸ்தம் காத்தலையும், அக்னி ஹஸ்தம் ஸத்யப்ரமாணத்தையும், தொங்கவிட்டிருக்கும் மற்றொரு கரம் சுட்டிக் காட்டுதலையும், குஞ்சிதபாதம் அபேதானந்த முக்தியையும் சுட்டிக் காட்டுகின்றது. அபயஹஸ்தம் ஆசார்ய பாவம், ஸ்வரூபத்தையும், டமருக் ஒலி மஹா வாக்ய உபதேசத்தையும், அக்னி ஹஸ்தம் அஞ்ஞான நிவர்த்தியையும் குஞ்சிதபாதம் நித்யானந்தப்ராப்தியையும் கொடுப்பதாய் ஆனந்த தாண்டவ உண்மை கூறுகின்றது.

ஈசனின் சர்வ அவய ஸ்வரூபம் ஓங்காரத்தைச் சுட்டிக் காட்டுகின்றது என்பதையும் கண்டோம். அக்னி ஹஸ்தம் “ந” காரத்தையும், பாதாம்புஜங்கள் “ம” காரத்தையும், லம்ப ஹஸ்தம்(தொங்கவிடப்பட்டிருக்கும் கரம்) “சி” காரத்தையும், டமருக ஹஸ்தம் “வா” காரத்தையும், அபய ஹஸ்தம் “ய” காரத்தையும் தோற்றுவிக்கின்றது. இவ்வாறு ஈசன் பல்வேறு தொழில்களையும் புரிந்து கொண்டு இடைவிடாது சந்திரனின் சம்பந்தம் பெற்ற இடாநாடியின் உதவியைக் கொண்டு இடது நாசியில் மூச்சுக் காற்றை உள்ளிழுத்துக் கொண்டும், சூர்ய சம்பந்தம் பெற்ற வலது நாசியால் மூச்சை வெளிவிட்டுக் கொண்டும் அந்த மூச்சை உள்ளிழுத்து கும்பகம் செய்து ப்ராணப்ரதிஷ்டா காலத்தில் வலக்கால் கட்டைவிரலால் ப்ராணபிரதிஷ்டை செய்து கொண்டும், தன் ஆனந்தத் தாண்டவத்தை ஆடி வருகின்றார். இந்த உலகம் இயங்குகின்றது. நாமும் இயங்குகின்றோம். அனைத்தும் அவனே. எல்லா உயிர்களிலும் நிறைந்து நின்று மூச்சுக் காற்றாக நின்றும், வெளி வந்தும், உள்ளிழுத்தும் அனைவரையும் இயக்கும் அந்த ஆட வல்லான் திருவடிப் பாதங்களுக்குச் சரணம் செய்து இதை முடிக்கின்றேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
*************************************************************************************

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book