2

தென்னாற்காடு மாவட்டத்தில், கடலூருக்குத் தென்மேற்கே உள்ள சிதம்பரத்தின் எல்லைகளாய் வடக்கே வெள்ளாறும், கிழக்கே வங்கக் கடலும், தெற்கே கொள்ளிடமும், மேற்கே வீராணம் ஏரியும் அமைந்துள்ளது. -ஆன்மீகத் தத்துவங்களின் படிச் சிதம்பரம் பற்றிக் குறித்திருப்பது என்னவென்றால்:
“இந்த பூமியும், மனித உடலும் சமமாக ரிஷி முனிவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனித உடம்பில் உள்ள “இட” நாடியைப் போன்றது இந்தப் பூவுலகில் உள்ள ஸ்ரீலங்காப் பிரதேசம். “பிங்கள” நாடி என்று இமயமலைப் பிராந்தியத்தைச் சொல்வதுண்டு. மனித உடலில் “இட” நாடிக்கும் “பிங்கள” நாடிக்கும் நடுவில் “சுக்ஷ்ம” நாடி உள்ளதைப் போல் இந்தப் பூவுலகிற்குச் சிதம்பரம் அமைந்துள்ளது.” இது ஆன்மீகப் பெரியார் வாக்கு.

சிதம்பரம் நகரின் மையத்தில் உள்ளது நடராஜர் கோயில். இந்தக் கோவிலின் பூர்வீகம் எவ்வளவு பழமை வாய்ந்தது என்று சொல்ல முடியாது. உபநிஷதங்களிலேயும், புராணங்களிலேயும் ஸ்தல மஹாத்மியங்களிலும் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் கோவில் தோன்றியது எப்படி எனச் சொல்ல முடியாது. இதுவும் தவிர, மற்றச் சிவன் கோவில்களில் பூஜை வழிபாட்டு முறைகள் “சைவ ஆகமம்” முறைப்படித் தான் நடக்கும். ஆனால் சிதம்பரம் கோவிலில் தினசரி வழிபாடு வைதிக முறைப்படி சிதம்பரம் கோவிலுக்கு உரிமையாளர்களான தீட்சிதர்களால் நடை பெறுகிறது. இதுவும் எப்போது ஆரம்பித்தது எனச் சொல்லமுடியாது.

“ஆகம வழிபாடு” என்பது பின்னாட்களில் வந்தது. கி.பி.யில் வந்தது என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த வைதீக வழிபாடு அதற்கும் முன்னேயே தோன்றியது. சிதம்பரம் தீட்சிதர்கள் ஸ்ரீநடராஜராலேயே நேரடியாக அவருடைய வழிபாட்டிற்காகக் கொண்டு வரப் பட்டவர்கள் என்றும், கோவில் வழிபாட்டு முறைப் “பதஞ்சலி முனிவர்” ஏற்படுத்திக் கொடுத்த முறைப்படி நடக்கிறது என்றும் சொல்கிறார்கள். Tamilian Antiquary, Vol.1 and “The Cholas” Prof. K.A.Nilakanda Sastri, இருவரும் எழுதியுள்ள சரித்திர ஆதாரங்களின் படியும், கோவிலின் உள்ளே கிடைத்துள்ள சில கல்வெட்டுக்களில் இருந்தும், கோவிலின் பழமையில் இருந்தும் இது எந்தக் காலத்தில் ஏற்பட்டது எனச் சொல்ல முடியவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book