70

நேற்று தினமலர் பத்திரிகையில் திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செய்த சிதம்பரம் கோயிலின் ஆய்வு பற்றிய ஒரு கட்டுரை வெளியாகியது. அநேகமாய் அனைவரும் படித்திருக்கலாம். எனக்கு அந்த விஷயம் புதியது. ஆகவே பகிர்ந்து கொள்கின்றேன்.
சிதம்பரம் கோயில் பற்றியும், அதைச் சுற்றி நகரில் உள்ள கோயிலைச் சார்ந்த பல்வேறு மடங்கள் பற்றியும் பல்வேறு விதமான சாசனங்கள் இன்னமும் தேடிக் கண்டு பிடிக்கப் பட்டு வருகின்றன. அதில் சிலவற்றின் அடிப்படையில் எழுதப் பட்ட ஒரு கட்டுரையை வைத்தே போன மூன்று பதிவுகள் வந்தன. இப்போது கிடைத்திருப்பது சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற “வண்ணார் மடம்” பற்றிய செப்பேடுகள். இவை இரண்டு செப்பேடுகளாய்க் கிடைத்திருக்கின்றது. மேலும் விஜயநகர அரசர் கால்த்தில் ஏற்படுத்தப் பட்டதாயும் தெரியவருகின்றது. மூன்று ஏடுகளைக் கொண்ட முதல் செப்பேடும், ஒரே ஏட்டுடன் கூடிய இரண்டாவது செப்பேடும் ஒரே காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிய வருகின்றது. இவற்றில் சிவலிங்கம், நந்தி, சூலம், சூரிய, சந்திரர், வீரமணவாளர் தேவியருடன், எல்லாவற்றுக்கும் மேல் துணி வெளுக்கும் கல் போன்றவை சிற்பங்களாய்ச் செதுக்கப் பட்டிருப்பதாய்த் தெரியவருகின்றது.

விஜயநகர அரசர் மெய்க்கீர்த்தியும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுதராயர் காலத்தில் வண்ணார் மடம் புதுப்பிக்கப் பட்ட செய்தியும் இவற்றில் கிடைத்திருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. வண்ணார் தோன்றிய விதமும், அதாவது அதற்கான புராண வரலாறும் இதில் சொல்லப் பட்டிருக்கின்றது. அது பின்வருமாறு:

ஈசனின் மாமனார் ஆன தட்சன் ஈசனை அழைக்காமல் யாகம் செய்ய, அவனையும், அவனுக்கு உதவியாக யாகத்தில் தொண்டாற்றிய தேவர்கள் மற்றும் தேவிகளை அழிக்கவும் ஈசனால் தோற்றுவிக்கப் பட்டவர் ஈசனின் அம்சம் ஆன வீரபத்திரர்.


தேவியரை அழிக்கவேண்டி அன்னையால் தோற்றுவிக்கப் பட்டவளே காளி ஆவாள்.
இருவரும் அவ்வாறே தேவ, தேவிகளை அழித்தனர். இருவரும் அழித்த தேவ, தேவியர் பின்னர் இறைவனாலும், இறைவியாலும் உலக க்ஷேமத்தைக் கருதி மீண்டும் உயிர்ப்பிக்க, வீரபத்திரராலும், காளியாலும் ஏற்பட்ட காயங்களின் குருதி அவர்கள் மீது அழியாமல் இருந்தது. அந்தக் குருதி நீங்க வேண்டி ஈசன் வருணனை மழை பொழியும்படி ஆணை இட வருணனும் அவ்வாறே மழையாகப் பொழிகின்றான். எனினும் குருதிக் கறை ஆடைகளில் தங்கிவிட்டது. ஆகவே அந்தக் கறை நீங்கவேண்டி வீரபத்திரருக்கு ஈசன் ஆணை இட, அவர் மரபில் ஒருவர் தோற்றுவிக்கப் பட்டார். அவருக்கு வீரன் என்னும் பெயர் சூட்டப் பட்டு தேவ, தேவியரின் ஆடைகளை வெளுக்க அவர் அனுப்பி வைக்கப் படுகின்றார். அந்த வீரபத்திரர் வழியிலும், வீரன் வழியிலும் வந்தவர்களே வண்ணார் எனப் பட்டனர். அவர்கள் பூமியில் வந்து அதே தொழிலைச் செய்தனர். இந்த மரபில் வந்த ஒருவரே திருக்குறிப்புத் தொண்டர் ஆவார்.

திருக்குறிப்புத் தொண்டர் பற்றிய கதை அநேகமாய் அனைவரும் அறிந்திருக்கலாம். சிவனடியார் ஒருவரின் துணி ஏதாவது ஒன்றையாவது அன்றாடம் துவைத்துக் கொடுத்து, அவருக்குப் பணிவிடைகள் செய்து, உணவு ஊட்டியுமே தன் உணவை உண்ணும் வழக்கம் திருக்குறிப்புத் தொண்டருக்கு. சிவனடியார்களின் துணியின் மாசு நீங்கினால் தன் பிறவிப் பிணியின் மாசு நீங்கும் என்ற எண்ணம் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர் முன் ஒரு குளிர் காலத்தில் நடுங்கிக் கொண்டே ஒரு சிவனடியார் தோன்றினார். நல்ல குளிர் காலத்தில் நடுக்கும் குளிரில் மெலிந்த உடலும், அழுக்கான, கந்தலான வஸ்திரமும் கொண்டு, தூய வெண்ணீறணிந்து தன் முன் தோன்றிய சிவனடியாரைப் பணிந்து வணங்கினார் திருக்குறிப்புத் தொண்டர்.

அடியாரிடம் திருக்குறிப்புத் தொண்டர் வினவுகின்றார். “ஐயா, தங்கள் திருமேனி இவ்வளவு இளைத்திருப்பதன் காரணம் என்னவோ?” என. ஆனால் வந்தவர் குறுநகை புரிய எதுவும் புரியாத திருக்குறிப்புத் தொண்டர், “ஐயா, தாங்கள் வந்தது என் பாக்கியமே. அடியாரின் ஆடையைத் தோய்த்துச் சுத்தம் செய்து தருவதை நாம் அடியாருக்குச் செய்யும் தொண்டாகக் கருதிச் செய்து வருகின்றோம். ஈசன் எனக்கிட்ட கட்டளை அதுவே எனவும் அறிந்தேன். தாங்கள் தங்கள் ஆடையை என்னிடம் தந்தால், தங்கள் வெண்ணீறு போல் தூய்மையாகத் துவைத்துத் தருவேன்.” என்று சொல்லுகின்றார். அடியார் பெரும் அதிர்ச்சி அடைந்தார். வந்தவர் யார்?? சாமானியம் ஆனவரா?? இல்லை அல்லவா? சாட்சாத் அந்தக் கைலை வாசனே அல்லவா வந்திருக்கின்றான். அவன் ஆடாத ஆட்டமா?? போடாத வேஷமா?? நடிக்காத நாடகமா?? ஆடல்கலையில் வல்லவன் அல்லவா?? ஆட்டுவிப்பவனும் அவனே, ஆடுபவனும் அவனே அல்லவா??

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book