3

பலரும் தெரிந்து கொள்ள ஏதுவாக இப்போ பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதிசேஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் “பதஞ்சலி” என்று ஆனதாய் ஒரு கூற்று. இவரின் அவதார காரணம் குறித்துச் சொல்லப் படுவது யாதெனில்: பாற்கடலில் ஆதிசேஷனின் மேல் சயனித்துக்கொண்டிருந்த விஷ்ணுவின் திடீர் கனம் தாங்க முடியாமல் தவித்தான் ஆதிசேஷன். ஆனால் விஷ்ணுவோ புன்னகை புரிந்து கொண்டிருந்தார். தன் மனதுள்ளே தன் மூச்சுக்காற்று உள்ளே செல்கையிலும், வெளியே வருகையிலும் நடைபெற்ற சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார். மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று.

இவருடைய சம காலத்தினரான புஷ்ய மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் “திருமந்திரம்” என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான். காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:

“பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசிஷ்டரின் மனைவி. கோவையில் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் “திருமூர்த்தி மலைக்குன்றுகள்” இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் “தென் கைலாயம்” என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார். பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும்் ஒருவர்.”

“தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையைக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
“நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!”

சித்தர்களில் ஒருவரான போகர் 7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தனக்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார்.
“அது என்னுடைய தாத்தா!
மேலே ஏறிப் பார்!
ஆனால் என்னைப் பிறப்பித்தவர்
காலங்கி நாதர்!
பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது
பார், இதுவே சரியான வழி!
அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். இங்கே சொல்லப்படுவது மூலாதாரத்தில் இருந்து சஹஸ்ராரம் சென்று பரிபூர்ணமாய் ஐக்கியம் அடைவதைக் குறித்து. இங்கே போகர் சொல்லி இருப்பது தனக்குக் குருவாய் அமைந்து யோகத்திற்கு வழிகாட்டியவர்களைக் குறித்தும், அந்த வழியைக் குறித்தும் சங்கேதமாய்ச் சொல்லி உள்ளார். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள்.”அப்பா நீ தேடினாயே இது தான் அது!” என்று.
குண்டலினி யோகம் படிக்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார். காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடைத்ததும் பிறந்தது “போகர் 7,000”. அதில் பதஞ்சலி பற்றிக் குறிப்புக்கள் கிடைக்கின்றன.

நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பாஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பிறக்கையிலேயே தன் ஆதிசேஷன் உரு மறவாமல் இருக்கவோ என்னவோ, பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர்.

மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார் என்று கண்டுபிடிக்க நினைத்தனர். ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வந்தது தான் அவருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள். என்றாலும் வியாக்கிரபாதர் ஆசிரமமே காலத்தால் மூத்தது என்றும் சிலர் கூற்று.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book