87

அம்பலவாணனின் நாட்டியத்தை முதலில் கண்டு களித்தவர்களில் பதஞ்சலியும், வியாக்ரபாத முனிவரும் என முன்பே பார்த்தோம் அல்லவா? ஆனால் நந்தி தேவருக்கோ தான் தான் முதலில் கண்டு களித்தவர் என்றதொரு பெருமை இருந்ததாம். இடைவிடாமல் தான் அருகே இருந்து பார்ப்பதாயும் நந்தி தேவருக்குப் பெருமை அதிகமாய் இருந்தது. அதன் காரணமாய்க் கொஞ்சம் கர்வமும் உண்டாயிற்றாம் நந்திதேவருக்கு. வியாக்ரபாதருக்கோ, தான் பூக்களைப் பறிக்க என இறைவனைக் கேட்டுப் புலிக் கால் வாங்கியதால், புலித் தோலை அரைக்கசைத்த அந்தப் பொன்னார் மேனியனுக்குத் தாமே அருகில் உள்ளோம், மேலும் நமக்கும் இடுப்புக்குக் கீழே புலித்தோலால் ஆன உடலும், கால்களும் இருப்பதால், ஈசனுக்கு இணையாக நர்த்தனம் ஆடலாம் என்றும் நினைத்தாராம். இருவருக்கும் தங்கள், தங்கள் பலம் அதிகம் என்ற நினைப்போடு, பதஞ்சலியிடம் இளக்காரமும் அதிகம் இருந்ததாம்.

அதிலும் பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையே ஈசன் ஆடிய ஆட்டத்தை நினைத்து, நினைத்து நந்தி எப்போதும் தன் தலையை ஆட்டிக் கொண்டே வேறே இருந்தாராம். (மாடுங்களெல்லாம் அதான் தலையை ஆட்டுதோ??)

இப்படி நந்தி தன் கொம்பை நினைத்துப் பெருமையிலேயும், வியாக்ரபாதர் தன் புலிக் கால்களை நினைத்துப் பெருமையிலேயும் ஆழ்ந்திருந்தனர். ஒருநாள், ஈசன் புதியதொரு நடனமுறையை அறிமுகப் படுத்தப் போவதாய்ச் சொல்லி இருந்தார். அதைக் கண்டு களிக்க தேவாதி தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கூடவே பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதருடன் வந்திருந்தார். நந்தியோ தன் மத்தளத்துடன் தயாராக இருந்தார். இவர்களைப் பார்த்தார் நந்தி.

இருவருடனும் ஈசன் சிதம்பரத்தில் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்போது வியாக்ரபாதர் தன்னுடைய புலிக்காலின் மகிமையைப் பற்றிச் சொல்லி, ஈசனைப் போல் தானும் தாளம் தப்பாமல் ஆட வசதியாக இந்தப் புலிக்கால்கள் இருக்கும் என்றும், அந்தக் காரணத்தினால் தானே ஈசனின் நடனத்தை முழுமையாய் ரசித்ததாயும், ஈசனும் அதைப் புரிந்து கொண்டே அவ்வளவு ஆனந்த நடனம் ஆடியதாயும் சொல்ல, நந்தி சிரிக்கின்றார். “புலி, இது என்ன பெரியவிஷயம்?? பிரதோஷ காலத்தில் என்னோட கொம்புகளுக்கு இடையே ஆடறாரே அதைவிடவா? அவர் ஆடி முடிச்சப்புறம் கூட எனக்குக் கண்ணு முன்னாலே அந்த நடனமே தெரியும். சலங்கை ஒலி கேட்டுட்டே இருக்கும். எனக்காகத் தானே அவர் அப்படி ஆடினார்? அதை நினைவு வச்சுட்டுத் தான் அந்த ஜதிக்கேற்றமாதிரி என் தலையைக் கூட ஆட்டிக்கிறேனாக்கும்?” என்று சொன்னார்.


இருவரும் பதஞ்சலியைப் பார்த்து, “உனக்குக் கொம்பும் இல்லை, கால்களும் புலிக் கால்கள் இல்லை, ஆகவே ஈசனின் ஆட்டத்தையும் உன்னால் எங்கே ரசிக்க முடியும்?” என்று கேலியாய்ப் பேசினார்கள். பதஞ்சலியின் முகம் வாட்டம் அடைந்தது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book