25

ஒரு சிலர் கேட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் முயற்சி செய்து வருகிறேன். என்றாலும் எனக்குத் தெரிந்தவரை ஸ்ரீ ராமானுஜர் தான் ஸ்ரீரங்கம் கோவிலில் “பாஞ்சராத்திர” முறைப்படி வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்தவர் என்றவரையில் தெரியும். அவருக்குப் பின்னர் வந்த ஸ்ரீமத்வேதாந்த தேசிகர் காலத்திலே தான் பிரிவினை அல்லது வேறுபாடு ஏற்பட்டதுன்னு நினைக்கிறேன். இந்த தேசிகர்தான் “மணிப்ரவாளம்” என்னும் வடமொழியும், தமிழும் கலந்த எழுத்து நடையை ஏற்படுத்தினார்னும் நினைக்கிறேன். இது கிட்டத் தட்ட பிரபந்தங்களையே வேதமாக ஏற்கும் ராமனுஜரின் அடியை ஒற்றி நடப்பவர்களுக்கும், பிரபந்தங்கள் மட்டும் போதாது என்று சொல்லும் நிகமாந்த தேசிகரின் அடியை ஒற்றி நடப்பவர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடாகக் கூட இருக்கலாம். நாம் அறிந்தவரையில்,

வைணவத்தில் ஸ்ரீ ராமானுஜர் கூறி இருப்பதாவது:” “ஸ்ரீ” என்னும் மகாலட்சுமியானவள் அந்தப் பரம்பொருளான “நாராயணனி”டமிருந்து பிரிக்க முடியாதவள். அவனுடன் நித்திய வாசம் செய்பவள். ஆகவே “ஸ்ரீ”யும் ஒரு பரம்பொருளே ஆவாள்.” என்பதாகும்.

ஆனால் மற்றொரு பிரிவினர் கூறுவது: “ஸ்ரீ”யும் நம்மைப் போல் ஒரு ஜீவன். அவள் பரம்பொருளும் இல்லை, பரம்பொருளுக்கு நிகரானவளும் இல்லை, வேண்டுமானால் நமக்காக அந்தப் பரம்பொருளிடம் இவள் சிபாரிசு செய்து நம்மைக் கவனித்துக் கொள்ளச் சொல்கிறாள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.” இது மற்றொரு சாரார் கூற்று. இவர்கள்தான் வடகலை, தென்கலை எனப் பிரிந்து இருக்கிறார்கள் என எண்ணுகிறேன். இறைவனை அடைய முயற்சி செய்யவேண்டும், என்று ஒருசாராரும், அவன் பாதாரவிந்தங்களைச் சரணடந்து விட்டால் அப்புறம் அவன் நம்மைக் கவனிக்காமல் போய்விடுவானோ என்று மற்றொரு சாராரும் சொல்வதாக வைத்துக் கொள்ளலாமோ!. கோவில் வழிபாடுமுறை பற்றிப் பலருக்கு அவ்வளவாய்த் தெரியவில்லை. சிதம்பரம் கோவில் வைகானச முறைதான் என்றும், ஸ்ரீரங்கம் கோவில் பாஞ்சராத்திர முறைதான் என்ற அளவிலும் மட்டுமே தெரிகிறது. இதில் காஞ்சிபுரம் கோவில்காரர்கள் வடகலை என்றும் தெரிய வந்தது.

வைகானசம் என்பது என்னவெனில் வேதங்களை அசுரன் தூக்கிச் சென்ற காலத்தில் அவனை அழிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவை நாடினார்கள். மஹாவிஷ்ணுவைத் துதிக்க வேண்டிச் சொல்ல வேண்டிய தோத்திரங்கள் அனைத்துமே வேதங்களோடு சேர்ந்து அசுரன் கையில்போய்விட்டது. மஹாவிஷ்ணுவை எவ்வாறு வழிபடுவது எனத் தெரியாமல் திகைப்புடன் இருந்த அவர்கள் முன்னர் ஒருவர் தோன்றினார். அவரும் மஹாவிஷ்ணுவைப்போலவே இருந்தார். அப்போது அவர்கள் எதிரே மஹாவிஷ்ணு தோன்றி, இவன் வேறு யாரும் இல்லை; என் அம்சமே தான். என்னுடைய நிழல் இவன். இவனை நான் உயிர்ப்பித்திருக்கிறேன். வைகானசன் என்ற பெயரோடு இவன் என் வழிபாட்டு முறையைக் கற்பிப்பான். ரிஷிகளும், முனிவர்களும் இவனுக்குச் சீடனாக இருந்து வைகானச முறையைக் கற்றுக்கொண்டு பரப்பட்டும் என்று கூறினார்.

வைகானசன் தோன்றுவதற்கு முன்பு பிரம்மாவிடம் சென்ற தேவர்களுக்கு வேதங்கள் இல்லாமல் மஹாவிஷ்ணுவை வழிபட என்ன செய்வதெனத் திகைப்பு ஏற்பட்டு அவர்கள் பிரம்மாவை நாட, அவர் வாயினால் மந்திரங்களைச் சொல்லாமல் தன் கைகளாலேயே சைகைகள் காட்டித் தாந்த்ரீக முறையில் வழிபாட்டைச் சொல்லிக் கொடுத்தார். இது ஐந்து இரவுகள் நடைபெற்றது. இதைப் பாஞ்சராத்ரம் என்கின்றனர். இது எங்கள் ஊர்க் கோயில் பட்டாசாரியார் கூறியது. மாறுபட்ட விளக்கங்களும் இருக்கலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book