29

நிருத்த சபைக்கு வந்த நாம் இப்போது அதன் முக்கியமான தரிசனத்துக்குத் தயாராகிறோம். உண்மையில் இந்த நிருத்த சபைதான் மிகப் பழமை வாய்ந்தது எனச் சொல்லப் படுகிறது. ஆதியில் காளியின் வசம் இந்தக் கோயிலில் இருந்தபோது காளி இங்கே தான் வாசம் செய்தாள் என்றும் கூறப் படுகிறது. கனகசபைக்கும், த்வஜஸ்தம்பத்திற்கும் தெற்கே இருக்கும் இந்தச் சபையில் தான் சிவன் காளியுடன் போட்டி போட்டு ஆடித் தன்னுடைய ஆட்டத்திறமையைக் காட்டி ஜெயித்தார். இந்தத் தாண்டவக் கோலம் “ஊர்த்துவத் தாண்டவம்” என்று சொல்லப் படுகிறது. இந்த மூர்த்தி ரூபத்துக்கும் “ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி” என்றே பெயர். அருகாமையில் நாணத்துடன் நிற்கும் காளியின் அழகு கொள்ளையோ கொள்ளை! காணக் கண் கோடி வேண்டும்! சரபருக்கு அருகேயே கோவில் கொண்டிருக்கும் இந்த தாண்டவ மூர்த்தியும், காளியும் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடுத்தபடியாக இந்த வெளிப்பிரகாரத்தில் லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தி, மகாலட்சுமி சன்னதிக்கும், நிருத்த சபைக்கும் நடுவில் காணப்படுகிறார், வடக்கு முகமாய். அடுத்து வருவது மகா லட்சுமியின் சன்னதி. தனியாகக் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தாயாரின் மூல விக்ரஹம் “புண்டரீகவல்லித் தாயார்” என்று அழைக்கப் படுகிறது. உற்சவ விக்ரஹமும், கூடவே இந்தக் கோயிலில் காணப் படுகிறது. நவராத்திரிகளில் விசேஷ அலங்காரங்கள் செய்யப் படுவதாய்க் கூறுகிறார்கள்.

அடுத்துக் காணப் படும் பாலதண்டாயுத மூர்த்தியின் சிற்பம் ஒரு தூணில் காணப் படுகிறது. பழனிக்குப் போக விரும்பிய மக்கள் கொள்ளிடத்தின் வெள்ளப் பெருக்கால் போக முடியாமல் தவித்தபோது அந்தப் பழனி ஆணடவர் இந்தச் சிற்பத்தில் ஆவிர்ப்பவித்துத் தன்னை வணங்குமாறு சொன்னதாய்ச் சொல்கின்றனர். அடுத்து வருபவர் நம் நண்பர் விநாயகர் ஒரு அருமையான வேலை செய்தவர்! என்ன தெரியுமா? மறைந்து இருந்த ஒரு பொருளைக் காட்டிக் கொடுத்தவர். அதுவும் யாருக்கு? சோழ மன்னனுக்கு!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book