22

கனகசபைக்குக் கீழே பக்தர்கள் தரிசனம் செய்யும் இடத்தில் இருந்து சற்று மேலே கனகசபைக்குச் சமமாக ஒரு பெரிய மண்டபம் ஊள்ளது. அதில் சற்றுப் படி ஏறிப் போய் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு பார்த்தோமானால் ஒரே நேரத்தில் நடராஜர் தரிசனமும், கோவிந்த ராஜர் தரிசனமும் கிடைக்கும். இந்தக் கோவிந்தராஜரும் உள் பிரகாரத்திலேயேதான் கிழக்குப் பார்த்துக் கோயில் கொண்டிருக்கிறார். இதை விஷ்ணு பக்தர்கள் “திருச்சித்திரக் கூடம்” என்று அன்புடன் அழைக்கிறார்கள். மூலஸ்தானத்தில் யோகநித்திரையில், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம், பிரம்மாவும் நாபிக்கமலத்தில் இருந்து எழுந்த நிலையில் காணப் படுகிறார். எல்லையற்ற அந்தப் பரம்பொருளின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டுகளிக்கத் தான் அவரும் இங்கே கோயில் கொண்டிருப்பதாய் ஐதீகம். வேறு எந்தச் சிவன் கோயில்களிலும் காணக் கிடைக்காத இந்தக் காட்சி இங்கே மட்டும் தான் கிடைக்கும். இதை முன் வைத்தே தற்காலத்தில் பலகோயில்கள் சிவ-விஷ்ணு கோயிலாகக் கட்டப் படுகிறது. இந்த கோவிந்தராஜரை முதலில் தீட்சிதர்கள் தான் வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள். காலப் போக்கில் மாறி இருக்கிறது. அது பின்னால்.

கோவிந்தராஜப் பெருமாளின் மூலஸ்தான விமானம் “சாத்வீக விமானம்” என்று அழைக்கப் படுகிறது. பலி பீடம், த்வஜஸ்தம்பம் போன்றவை தனியாக உள்ளன. தாயாருக்குத் தனி சன்னதி உள்ளது. தாயாரின் திருநாமம் புண்டரீகவல்லித் தாயார். உற்சவர்”பார்த்தசாரதி” என அழைக்கப் படுகிறார். இந்தக் கோயிலின் உள்பிரகாரத்தில் நரசிம்ம மூர்த்தி, வேணுகோபாலர், விஸ்வக்சேனர், பதஞ்சலி, கண்வர், ஆஞ்சனேய மூர்த்தி ஆகியோருக்குத் தனி சன்னதிகள் காணப் படுகிறது. “சேஷ சயனம்” “ராம பாதம்” காணப் படுகிறது. கோயிலில் பொதுவாக உள்ள சிவகங்கைத் தீர்த்தம் விஷ்ணு பக்தர்களால் “புண்டரீக சரஸ்” என அழைக்கப் படுகிறது. முதன்முதல் வியாக்ரமபாதரும், பதஞ்சலியும் நடராஜ தரிசனமும், ஆனந்தத் தாண்டவமும் காணச் சிதம்பரம் வந்த போதில் இருந்தே கோவிந்தராஜரும் கோயில் கொண்டதாகவும், அவரை முதன் முதல் கண்வ மகரிஷி வழிபாடு செய்து வந்ததாகவும், பிரத்யட்ச தெய்வமாக இந்தக் கோவிந்தராஜர் அவருக்குக் காட்சி கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.

பொதுவாக எல்லா விஷ்ணு கோவில்களிலும் காணப்படுவது போல் இங்கேயும் பிரசாதமாகத் துளசி தீர்த்தம், சடாரி சாதிக்கப் படுகிறது. இறைவனின் பாதங்கள் பதிப்பிக்கப் பட்ட அந்தச் சடாரியைத் தன் தலையில் வைத்துக் கொள்வதின் மூலம் இறைவனே தங்களை நேரில் வந்து ஆசீர்வதித்ததாக இன்புறுகின்றனர். ஸ்ரீராமனின் பாதுகையைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு சென்ற இளவல் பரதாழ்வார், ஆழ்வார்களில் முதல்வன்! அவன் அவ்வாறு செய்து தன் பக்தியை வெளிக்காட்டிக் கொண்டதில் இருந்து இவ்வழக்கம் ஆரம்பித்ததோ என்னமோ! இதை ஸ்ரீராமன் பாதுகை என்றே சொல்கிறார்கள். சிவனும், விஷ்ணுவும் வேறு வேறு இல்லை, அரியும், சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு என்பதை நிரூபிப்பதற்காகவும், பக்தர்களுக்கிடையே உள்ள இந்த வேறுபாடுகளைக் களையவுமே இவ்வாறு கோயில் கொள்ள இறை அருள் பொங்கியதோ என்று தோற்றும் வண்ணம் இந்தக் கோயிலிலே கோவிந்தராஜனும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book