48

இந்தக் கோயிலின் சகல நிர்வாகங்களும் தீட்சிதர்களையே சார்ந்தது. தீட்சிதர்கள் தவிர, மற்றப் பணியாளர்களும் உண்டு. ஓதுவார்கள், மடப்பள்ளிச் சமையல்காரர்கள், சுத்தம் செய்பவர்கள், மற்றப் பணியாளர்கள் என இருக்கின்றனர். முன் காலங்களில் அனைவருக்கும் கோயிலில் இருந்து உணவு கொடுத்து வந்த பழக்கம்போல தற்சமயமும் கொடுத்து வந்தாலும், தற்காலத் தேவையை அனுசரித்து அவர்களுக்குச் சிறிய அளவில் சம்பளமும் கொடுக்கப் படுகிறது. அவர்களுக்கு உள்ளேயே ஏற்படும் வழக்குகளைக் கோவிலில் கூட்டம் கூட்டி விவாதித்து அவர்களுக்குள்ளேயே தீர்த்தும் கொள்கின்றனர். ஒரு பொது மனிதன் அனைத்துத் தீட்சிதர்கள் வீட்டுக்கும் சென்று கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதைத் தெரிவிக்கிறார். கூட்டம் “தேவசபை” அல்லது “கல்யாண மண்டபத்”தில் ஏற்பாடு செய்யப் படும். கட்டாயமாய் தீட்சிதர் குடும்பத்து அனைத்து ஆண்களும் கூட்டத்துக்கு வர வேண்டும் என்பதை ஒரு நியதியாகவே கடைப்பிடிக்கிறார்கள். “கனகசபை”யிலிருந்து ஒரு விளக்கு மிகப் புனிதமாய்க் கருதப் பட்டு எடுத்து வரப் படுகிறது. அந்த விளக்கு வந்தாலே “நடராஜரே” நேரில் வந்ததாய்க் கருதப்படுகிறது.

அவர்களுக்குள் உள்ள தனிப்பட்ட மனமாற்சரியங்களைக் களைந்து விட்டுக் கோயிலின் பொதுவான நிர்வாகச் சீர்திருத்தத்தில் மாற்றங்களோ, முடிவுகளோ ஏகமனதாய்க் கொண்டு வரப் படுகிறது. ஒரு தனி தீட்சிதர் தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம் அதை ஏற்கவோ, மறுக்கவோ செய்யலாம் எனினும் பொதுவாக அனைத்தும் ஏற்கப் படுகிறது. அவை தனியான ஒரு புத்தகத்தில் பதிவும் செய்யப் படுகிறது. கோவிலின் தினசரி நிர்வாகம் மட்டுமில்லாமல் உற்சவ காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வேலைகள்,கோவிலின் தினசரிப் பாதுகாப்பு, இரவுப் பாதுகாப்பு என அனைத்துமே விவாதிக்கப் பட்டு முடிவு எடுக்கப் பட்டு அவைகள் பதிவு செய்யப்படுகின்றன.

கோவிலின் மொத்த வழிபாடும் ஐந்து வகையாகப் பிரிக்கப் படுகிறது. 1.நடராஜர் கோவில், 2. அம்மன் கோவில், 3. மூலஸ்தானக் கோவில், 4. தேவசபை, 5. பாண்டியநாயகர் கோவில் என ஐந்து வகையாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு குறிப்பிடப் பட்ட தீட்சிதர் குழு எனவும் பிரித்துக் கொண்டு செயல்படுகின்றனர். இம்முறையில் அனைத்து தீட்சிதர்களும் அனைத்து இடங்களிலும் பாகுபாடு இன்றிப் பணிபுரிய முடியும். ஒரு முறை என்பது 20 நாட்களைக் குறிக்கும். அந்த நாட்களில் கோவிலின் சாவிகள், நகைப்பெட்டிகளின் சாவிகள் என அனைத்துமே மாறி மாறி ஒவ்வொருத்தர் பாதுகாப்பிலும் 20 நாட்கள் இருக்கும். பொது தீட்சிதர்கள் 9 பேர் கொண்ட நிர்வாகக்குழுவையும் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் ஒருத்தர் காரியதரிசியாக அந்த வருடம் நியமனம் பெறுவார். துணைக்காரியதரிசியை காரியதரிசி நியமிப்பார். கோவிலின் நந்தவனம் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பும் தீட்சிதர்களையே சாரும். இம்முறையில் இவர்கள் சுழற்சி முறையில் எந்தவிதமான வருத்தமோ, தடங்கலோ இல்லாமல் அனைத்து தீட்சிதர்களுமே கோவிலின் நிர்வாகத்திலும், பூஜை முறைகளிலும் பங்கு பெறுகின்றனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book