47

தீட்சிதர்கள் எப்போது இந்தக்கோவிலில் வழிபாடு செய்ய வந்தார்கள் என்று சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும், சரித்திரச் சான்றுகளின் படி ராஜா ஹிரண்யவர்மன் காலத்தில் இருந்து இக்கோவிலில் நடராஜருக்கு வழிபாடுகள் செய்து வருவதாய்த் தெரிய வருகிறது சோழ அரசர்களுக்குப் பட்டாபிஷேஹம் செய்யும் உரிமையும் இவர்களுக்கு இருந்திருப்பதாய்த் தெரிய வருகிறது. ஆழ்வார்களின் பாசுரங்களில் இருந்தும், திருநீலகண்டரின் கதை பற்றிய “சிவ பக்த விலாசம்’ என்ற புத்தகத்தில் இருந்தும், தில்லை தீட்சிதர்கள் கோவிலில் முக்கிய அங்கம் வகித்து வந்தது தெரிய வருகிறது. ஆரம்பத்தில் 3,000/- பேர் இருந்ததாய்ச் சொல்லப் பட்டாலும், தற்சமயம் 200 அல்லது 300 பேர் தான் இருக்கின்றனர். அதுவும் பிறப்பு, இறப்பு விகிதத்தை ஒட்டி ஏறி இறங்குவது உண்டு.

கிருத யுகத்தில் 3,000 பேரும், திரேதா யுகத்தில் 2,000 பேரும், துவாபர யுகத்தில் 1,000 பேரும், தற்சமயம் கலியுகத்தில் 200 பேரும் இருப்பார்கள் எனச் சிதம்பர ரகசியத்தில் சொல்லப் பட்டிருக்கிறதாயும் கூறுகின்றனர். கோவிலின் அனைத்து உரிமைகளும் தீட்சிதர்களையே சார்ந்துள்ளது. கோவிலின் பரம்பரை அறங்காவலர்களும் இவர்களே. இது தகப்பன் வழிச் சொத்து பிள்ளைக்கு என்ற முறைப்படி இல்லாமல் தீட்சிதர்கள் குடும்பங்களில் பிறக்கும் அனைத்து நபர்களுமே உரிமை பெற்று விடுகிறார்கள். தகப்பனும், பிள்ளையும் சம உரிமை அனுபவிக்கும் இந்தக் கோயிலுக்கு எனச் சொத்து எதுவும் தனியாகக் கிடையாது. பல அரசர்கள் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருந்தாலும் சில,பல சொத்துக்கள் அவர்கள் அளித்திருந்தாலும் தற்சமயம் கோவிலுக்கு என எந்தவிதமான சொத்தும் கிடையாது. கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் அளிக்கும் சிறு, சிறு மான்யத் தொகைகளில் இருந்து, பெரும் மான்யத் தொகைகள் வரை சேர்ந்து ஒரு வைப்பு நிதியாக மாறி, அதில் வரும் பணத்தில் இருந்து தினசரி வழிபாடுகள் செய்யப் படுகின்றன. இது தவிர சில “கட்டளை தாரர்”களும் இருக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் பெரும் தொகைகளும் கோவிலின் வழிபாட்டுக்கும், உற்சவங்களுக்கும் பயன்படுகின்றது. பச்சையப்ப முதலியார் ஏற்படுத்திய அறக்கட்டளை, வி.எஸ்.எஸ்டேட், ராஜா தொண்டைமான், புதுக்கோட்டை அவர்களின் அறக்கட்டளை, தருமபுரம் ஆதீனம், முகையூர் சுப்ரமணியபிள்ளை அவர்களின் அறக்கட்டளை, ராஜா சர். முத்தையாச் செட்டியார் அவர்களின் அறக்கட்டளை போன்றவை கோவிலுக்கு நிரந்தரமாக ஒரு தொகை கிடைக்க வழி செய்துள்ளது.

அவற்றின் கணக்கு, வழக்குகள் அந்த, அந்தக் கட்டளை தாரர்கள் நியமிக்கும் நிர்வாகியைச் சேர்ந்தது. அவர்கள் கோவிலுக்குப் பணமாகவோ, பூஜையின்போது தேவைப்படும் பொருளாகவோ கொடுத்துத் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். தீட்சிதர்கள் இந்தக் கணக்கு, வழக்கு பற்றிக் கட்டளைதாரர்களிடம் கேட்டுக் கொள்ளுவது இல்லை. பிரம்மோற்சவங்களுக்கான செலவுகள், ஊரில் உள்ள அனைத்து ஜாதியினராலும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. இது போல மற்ற உற்சவங்களும், சில தனிப்பட்ட உபயதாரர்களாலும், பொதுவாக வசூல் செய்யப் பட்ட பணத்தாலுமே கொண்டாடப் படுகின்றது.

இது தவிர சில பக்தர்கள் தங்கள் பெயரிலோ, குடும்பத்தின் பெயரிலோ,குறிப்பிட்ட நாளில், நட்சத்திரத்தில் அபிஷேஹம், அர்ச்சனை செய்ய என வருஷத்துக்கு ஒரு முறை கொடுக்கும் பணமும் வழிபாடுகளுக்கு உதவுகின்றது. இந்தக் கோயிலில் எங்கேயும் உண்டியலும் கிடையாது. எல்லாச் செலவுகளும் போக மிகுந்திருக்கும் வருமானம் எல்லாத் தீட்சிதர்களுக்கும் பிரித்து அளிக்கப் படுகிறது.பொதுவாக யாரும் சிவன் கோவிலின் வருமானத்தையோ, சொத்தையோ வைத்துச் சாப்பிடுவது இல்லை. சிவன் சொத்து குலநாசம் எனச் சொல்லப் படுவதுண்டு. ஆனால் இந்தக் கோயிலில் சிவனே தீட்சிதர்களில் ஒருத்தன் எனச் சொல்லப் படுவதாலும், கோயிலை தீட்சிதர்கள் தங்கள் குடும்பத்தின் முக்கிய இருப்பிடமாய்க் கருதுவதாலும், இறைவனின் நித்திய வழிபாடுகளை, வீட்டில் செய்யும் பூஜை போல ஈடுபாட்டுடனும், வைதீக முறையிலும் செய்வதாலும் இறைவனே தங்களில் ஒருவன் என்பதாலும் அவனுடன் இருந்து உண்ணுவது தங்கள் உரிமை என்ற நினைப்பும் இவர்களுக்கு உண்டு.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book