46

முன் குறிப்பிட்ட பதிவில் சொன்னாற்போல், திருவாரூர் தியாகேசரால் எடுத்துக் கொடுக்கப் பட்ட வரியான “தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரர் சிறப்பித்துக் குறிப்பிட்டத் திருத் தொண்டத் தொகையில் வருகிறார்போல், தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றிச் சில குறிப்புக்களை இங்கே தருகிறேன். காசியில் இருந்து 3,000/- பேராய்க் கிளம்பியதாய்ச் சொல்லப் பட்ட இவர்கள் சிதம்பரத்தை வந்தடைந்தபோது ஒருவர் குறைந்திருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. திகைத்தவர்களை இறைவன் அந்த ஒருவர் தாமே என உணர்த்துகிறார். கேரளாவின் நம்பூதிரி பிராமணர்களைப் போல் முன் குடுமியுடன் காட்சி அளிக்கும் இந்தத் தீட்சிதர்கள் தங்கள் குலப் பெண்களைத் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்விக்கிறார்கள். வேறு பெண்களை எடுப்பதும் இல்லை, வேறு இடத்தில் பெண்களைக் கொடுப்பதும் இல்லை, இதன் காரணமாகவே “தில்லைப் பெண் எல்லை தாண்டாள்” என்னும் பழமொழி ஏற்பட்டதாயும் சொல்கின்றனர்.

தங்களில் ஒருவராய் நடராஜரைக் கருதும் இவர்களுக்குத் தான் இந்தக் கோயிலில் பூஜை செய்யும் முழு உரிமையும் இன்று வரை உள்ளது. சிதம்பர மகாத்மியம் நூலில் இறைவனே இவ்வாறு நந்தியிடம் கூறுவதாயும் சொல்லுகின்றனர். ஒரு தீட்சிதர் மட்டுமில்லாமல் தில்லையில் கோவிலைச் சுற்றி இருக்கும் தீட்சிதர்களின் மொத்தக் குடும்பமே இந்த இறை பணியில் தங்கள் வீட்டுப் பணி போல் நினைத்து ஈடு பட்டுள்ளது. தங்களின் குடும்பச் சொத்தாக ஒவ்வொரு தீட்சிதர் குடும்பமும் நினைக்கும் இந்தக் கோயிலின் நிர்வாகமும் அவர்களிடம் தான் உள்ளது. கோவிலின் வருமானத்தில் இருந்தே அன்றாட பூஜைகளையும், தங்களின் குடும்பத்தையும் நடத்தி வருகின்றனர். கோவிலுக்கும் வருமானம் என்பது பக்தர்களின் கட்டளைகளில் இருந்து தான். அது போல இறைவனை வழிபடுவதிலும் அவர்கள் தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றைப் போலவே பாவிக்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களில் நடக்கும் “சைவ ஆகம முறை” யில் வழிபாடு இங்கே நடப்பதில்லை. முழுக்க முழுக்க வைதீக முறைப்படி வழிபாடு நடக்கும் ஒரே சிவன் கோயில் இது தான். இங்கே ஒரு விஷயம் சொல்லணும், இந்த சைவ ஆகமத்துக்கும், வைதீகத்துக்கும் வேறுபாடுகள் தேடிக் கொண்டே இருக்கேன். பலவிதமான யாகங்கள், யக்ஞங்கள் செய்ததாயும், இன்றும் செய்வதாயும் சொல்லப் படும் இவர்களை இறைவனுக்குச் சமமாகவும், எப்போது என்று சொல்ல முடியாத காலத்தில் இருந்தே நடராஜருக்கு வழிபாடுகள் இவர்கள் செய்து வந்ததாயும் சொல்லப் படுகின்றது. பொதுவாக இவர்கள் அனைவரும் யஜுர்வேதிகளாய் இருந்தாலும் வெகு சிலர் ரிக்வேதிகளாயும் இருக்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களில் சேவை செய்யும் சிவாச்சாரியார்களில் இருந்து இவர்கள் வேறுபட்டவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற அந்தணர்களோடு திருமணம் போன்ற எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தில்லைச் சிதம்பரத்தானைத் தவிர, இங்கே அவனின் நாட்டியத்தைப் பார்க்கக் கோயில் கொண்டிருக்கும் கோவிந்த ராஜரையும் இவர்களே முதலில் பூஜித்து வந்திருக்கின்றனர். இது திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் ஒன்றில் இருந்து தெரிய வருகின்றது.

“மூவாயிர நான்மறையாளர் நாளும் முறையாய் வணங்க அணங்காய் சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக் கூடசென்று சேர்மின்களே!” என்று திருமங்கை ஆழ்வார் அவர்களும்,
“செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள்
அந்தணர்களொரு மூவாயிரவரேத்த
வணிமணியாசனத்தமர்ந்த வம்மான் தானே!” எனக் குலசேகர ஆழ்வாரும் பாடியுள்ளார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book