84

நட்சத்திரங்களிலே திருவோணத்துக்கும், திரு ஆதிரைக்கும் மட்டுமே திரு என்ற அடைமொழி. இரண்டுமே முறையே மகாவிஷ்ணுவுக்கும், சிவனுக்கும் உரிய நட்சத்திரங்கள். உடனே அவங்க அந்த நட்சத்திரத்திலே தான் பிறந்தாங்களா என்ற கேள்வி எழும். அப்படி எல்லாம் இல்லை. இந்த மார்கழி மாதப் பெளர்ணமி தினத்தன்று ஈசன் ஆனந்தத் திருநடனம் புரிந்ததாகவும், சிரவண மாதத்துத் திருவோணத்தன்று பெருமாள் தன் விஸ்வரூபத்தை மஹாபலிக்குக் காட்டியதாயும் ஐதீகம். அதனாலேயே இருவருக்கும் இந்த இரு நட்சத்திரங்கள் விசேஷமாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. பரிபாடல் என்னும் சங்ககால இலக்கிய நூலிலேயே இந்த ஆதிரைத் திருநாள் சிறப்பு பற்றியும், விழா பற்றியும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. பொதுவாக ஆதிரைத் திருநாள் அன்று சிவனைடியாரான சேந்தனாருக்கு அருள் புரிய ஈசனே அடியாராக வந்து சேந்தனாரிடம் களியும், குழம்பும் வாங்கிச் சாப்பிட்டதாயும், அந்தக் களி ஈசன் மேல் சிந்திக் கிடக்க, கோபம் கொண்ட தீட்சிதர்களுக்குச் சேந்தனாரின் பக்தியை வெளிப்படுத்த வேண்டி ஈசன் தன் தேரை ஓடாமல் தடைப்படுமாறு செய்கின்றார். அப்போது சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி ஓடாது கிடந்த தேரை நிலைக்குக் கொண்டு வருகின்றார் என்று சொல்லுவார்கள். இந்தப் பல்லாண்டு திருவிசைப்பா என்ற பெயரில் ஒன்பதாம் திருமுறையில் கடைசி 29-வது சேர்க்கையில் கோயில் என்ற தலைப்பில் காணக் கிடைக்கின்றன.

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2

நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3

சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4

புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்டகோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5

இந்தக் கதை எல்லாரும் அறிந்த ஒன்று. ஆகையால் நாம் காணப் போவது இந்த ஆதிரைத் திருநாளுக்கு உரிய நடராஜரின் திருமேனி சிதம்பரத்துக்கு வந்த கதை. அதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம். தன் தோல் நோயைத் தீர்க்க வேண்டி ஹிரண்யவர்மன் புனித நீராடியது சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் என்று ஒரு சாராரும், பிரம்மானந்த கூபம் என்னும் தீர்த்தம் என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். இந்த பிரம்மானந்த கூபம் இப்போது கிணறு வடிவில் உள்ளது. எது எப்படியோ கெளட தேசத்தில் இருந்து வந்த மன்னன் ஹிரண்ய வர்மன், சிம்ம வர்மன் என்றும் பெயர் உண்டு. இவன் தான் பல்லவ வம்சத்தை இங்கே நிறுவினான் என்றொரு கூற்றும் உண்டு. இந்த மன்னன் நடராஜர் பால் பக்தி மிகக் கொண்டு, நடராஜரைச் சிலை வடிவில் வடிக்க எண்ணம் கொண்டான். சிற்பிகளிடம் பத்தரை மாற்றுப் பசும்பொன்னிலே, துளிக்கூடச் செம்பு கலக்காமல் சிலை வடிக்கச் சொல்கின்றான். சிற்பிகளும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் முடியவில்லை. சிறிதாவது செம்பு கலவாமல் சிலை வடிக்க முடியவில்லை.

அப்போது நமசிவாய முத்து ஸ்தபதி என்றொருவரை விட்டு வடிக்கச் செய்த செப்புச் சிலையின் வடிவழகு மன்னனின் கண்ணையும் கருத்தையும் மிகக் கவர்ந்தது. எனினும் அது செப்பு என்பதால் சிதம்பரத்தில் அதைப் பிரதிஷ்டை செய்யவேண்டாம் என எண்ணிய மன்னன் தூய பொன்னால் நடராஜத் திருமேனியை வடிக்கச் சொன்னான். இந்த முதல் சிலையை என்ன செய்யலாம் என யோசித்த மன்னனுக்கு இரண்டாவதாய் வடித்துக் கொண்டிருக்கும் சிலையைக் காட்டுவதற்காகச் சிற்பிகள் வந்து அழைத்தனர். சிற்பிகள் முகமோ குதூகலமாய் இல்லை. ஒரே கலவரம் கூத்தாடியது அவர்கள் முகங்களில். என்றாலும் தங்கள் குருநாதர் ஆணை! மன்னனை அழைத்துவர! ஆகவே மன்னனை சிலையைக் காண வருமாறு அழைத்தனர்.

சிற்பசாலையில் சிற்பியோ குழம்பிப் போயிருந்தார். நல்ல சுத்தமான பசும்பொன்னை உருக்கி எடுத்துச் சிலை வார்க்கும்போது எங்கிருந்தோ வந்தார் ஒரு முதியவர். பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேச்சில் கவனமாய் இருக்கையிலே தன் கையிலிருந்த செப்புக் காசுகளை பொன்னைக் குழம்பாய் உருக்கிக் கொண்டிருந்தவற்றில் போட்டுவிட்டு, இவற்றைச் சேர்த்துச் சிலை வடியுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார்.

செப்பு உருகித் தங்கக் குழம்போடு கலந்து, அதை சிலையாகவும் வார்த்தாயிற்று. ஆனால் மன்னனுக்குத் தெரிந்தால்?? மன்னனிடம் சொல்லுவதா வேண்டாமா?? சிற்பி குழம்பிப் போய் இருந்தார். மன்னனும் வந்தான். சிலையைக் கண்டான். தூக்கிய திருவடியையும், ஊன்றிய திருவடியையும் கண்டான். கண் முன்னே அந்தக் கூத்தனே நடனம் ஆடுவதையும் உணர்ந்தான். சிலையைக் கைகளால் தொட்டுத் தடவிப் பார்த்தான். விரிந்த செஞ்சடை, அபய ஹஸ்தங்கள் என அனைத்துமே அவன் மனதில் பதிந்தன. என்றாலும் முழுக்க, முழுக்கப் பொன்னால் ஆனதா? சந்தேகம் கொப்பளிக்கச் சிற்பியை நோக்கினான்.

சிற்பி செய்வதறியாது மன்னனிடம் நடந்ததைச் சொன்னார். மன்னனுக்குக் கோபம் மூண்டது. தலைமைச் சிற்பியையும், உடனிருந்து உதவிய சிற்பிகளையும் சிறையில் இட்டான்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book