86

ராம பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசன் ஆன வீரபாண்டியன் செப்பறையில் புதியதோர் விக்கிரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதை அறிகின்றான். தரிசனத்துக்கு வந்த அவன் கண்களிலே நடராஜர் சிலையின் அழகு கவர்கின்றது. மீண்டும், மீண்டும் எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தித்திக்கும் பேரழகுச் சிற்பம். ஆஹா, இதை வடிவமைத்தவர் யாரோ? கேட்ட வீரபாண்டியனுக்குச் சிற்பியின் அறிமுகம் கிடைத்தது. தன்னுடைய சிற்றரசுக்கு உட்பட்ட கட்டாரி மங்கலம்” என்னும் ஊரிலும், “கரிசூழ்ந்த மங்கலம்” ஊரிலும் உள்ள கோயிலில் இது போன்ற அதி அற்புத ஆடும் கூத்தனைப் பிரதிஷ்டை செய்ய எண்ணினான் வீரபாண்டியன். சிற்பியை அவ்வாறே இரு சிலைகள் செய்யுமாறு ஆணை இட்டான் வீரபாண்டியன். சிற்பியும் அதே போல் இரு அழகிய நடராஜர் சிலைகளை வடிவமைத்தார். அவற்றின் அழகில் மெய்ம்மறந்த வீரபாண்டியன், இனி மற்ற எந்தக் கோயில்களிலும் இது போன்ற சிலைகள் பிரதிஷ்டை செய்யக் கூடாது என எண்ணினான். இந்தச் சிற்பி செதுக்கினால் தானே சிலை? சிற்பியின் கைகளைத் துண்டிக்க ஆணை இட்டான் வீரபாண்டியன். பின்னர் சிற்பியையே கொன்றுவிடும்படியும் ஆணை இட்டான். ஆனால் காவலர்களோ இரக்கம் மீதூறச் சிற்பியின் ஒரு கையை மட்டுமே துண்டித்துவிட்டு உயிரோடு விட்டு விட்டார்கள்.

ராமபாண்டியனுக்கு விஷயம் தெரியவர, வீரபாண்டியன் மேல் கோபம் கொண்ட அவன், வீரபாண்டியனின் இரு கைகளையும் வெட்டி விடுகின்றான். பின்னர் அந்த இரு சிலைகளையும் முறையே கட்டாரிமங்கலத்திலேயும், கரிசூழ்ந்த மங்கலத்திலேயும் பிரதிஷ்டை செய்கின்றான். சிற்பிக்கு மரக்கையையும் பொருத்தித் தர ஆணை இடுகின்றான். மரக்கை பொருத்தப் பட்ட சிற்பி, அந்தக் கைகளோடேயே முன்பை விட அழகான நடராஜர் சிலை ஒன்றைச் செய்கின்றார். இந்த அதி அற்புதச் சிலையின் அழகில் தன்னையே மறந்த அவர், அது சிலை என்பதையும் மறந்து, சிலையின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ள, என்ன ஆச்சரியம்?? அவர் கிள்ளிய வடு கன்னத்தில் பதிந்தே விட்டது. கிள்ளிய அந்த வடுவுடனேயே அந்தச் சிலை தூத்துக்குடி அருகே உள்ள கருவேலங்குளம் என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த செப்பறை, கட்டாரி மங்கலம், கரிசூழ்ந்த மங்கலம், கருவேலங்குளம் ஆகிய நான்கு ஊர்களிலுமே திரு ஆதிரைத் திருநாள் மிகச் சிறப்பாய்க் கொண்டாடப் பட்டு வருகின்றது. இந்தக் கோயில்கள் அனைத்துமே சிவாகம முறைப்படி அனைத்து அம்சங்களும் பொருந்தியவையும் கூட. திருவாதிரைத் திருநாள் அன்று இந்த நான்கு கோயில்களும் விடிய விடியத் திறந்தே இருக்கும். அன்று நான்கு நடராஜர்களையும் சேர்த்து வழிபடுவதை மிகச் சிறப்பாகவும் நினக்கின்றனர். முதலில் செப்பறை, அங்கிருந்து கரிசூழ்ந்த மங்கலம், அங்கிருந்து கருவேலங்குளம், கடைசியாகக் கட்டாரிமங்கலம் என்ற முறையில் தரிசித்தால் பயண நேரமும் சரியாக இருக்கும் என்றும் சொல்கின்றனர்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book