71

குளிர் தாங்காமல் நடுங்கிக் கொண்டிருந்த அடியார், திருக்குறிப்புத் தொண்டர் தன் துணியைத் துவைத்துத் தருவதாய்ச் சொல்லக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவனை செய்துவிட்டு, மேலும் சொல்லுவார்” ஆஹா, இந்த ஒரு கந்தல் தான் என்னிடம் மீதி உள்ளது. இதையும் தங்களிடம் கொடுத்துவிட்டு நான் செய்வது என்னவோ??? ஏற்கெனவே குளிர் தாங்க மாட்டாமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றேனே!” என்று சொல்கின்றார். மன வேதனை திருக்குறிப்புத் தொண்டர் முகத்தில் தெரிய, தன் பக்தன் மனம் வாடுவது பொறுக்காத அந்த கைலைவாசன், சற்று நேரம் சிந்திப்பது போல் பாவனை செய்துவிட்டுப் பின்னர், மாலைக்குள் துணியைத் துவைத்துச் சுத்தமாய் உலர்த்தித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் துணியைக் கொடுக்கின்றார். அப்படியே ஒத்துக் கொண்டு திருக்குறிப்புத் தொண்டர் துணியைப் பெற்றுக் கொள்கின்றார்.

குளிர் தன்னால் பொறுக்க முடியாது என்று அந்தக் கூத்தன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், நீர்த்துறைக்கு வந்து துணியைத் துவைக்கத் தொடங்கினார். ஆரம்பம் ஆயிற்று ஈசனின் திருவிளையாடல். வருணனுக்குக் கட்டளை இட, திடீரென சூரிய ஒளியால் பிரகாசமாய் இருந்த வானம் கார்மேகங்களால் மூடிக் கொண்டது. கும்மிருட்டு சூழ்ந்தது அந்தப் பகல் வேளையிலேயே. தொண்டரின் மனமும் இருள் சூழ்ந்து கலங்கியது. எவ்வாறு துவைப்பது? எங்கே காய வைப்பது??? கலங்கும் வேளையிலேயே திடீரெனக் காற்று, இடி, மின்னல், பெருமழை! பேய்க் காற்று என்பது இதுதானோ??? ஊழிப் பெரும் மழையோ?? அண்டசராசரமும் குலுங்கும் வண்ணம் இடி இடிக்க, மின்னல் கண்ணைப் பறித்தது. மழையோ நிற்கக் காணோமே?? என்ன செய்வது? கலங்கினார் தொண்டர்.

ஆஹா, தவறு செய்துவிட்டோமே?? ஏற்கெனவே உடல் இளைத்து, மெலிந்து இருந்தாரே சிவனடியார்? இருந்த ஒரே மேல் துணியையும் வாங்கிக் கொண்டு துவைத்துக் காய வைக்க முடியாமல் இப்படி மழை பெய்கின்றதே? மழை ஆரம்பிக்கும்போதே வீட்டுக்குச் சென்றிருந்தால் ஒருவேளை இந்தக் காற்றிலே ஓரளவாவது உலர்ந்திருக்குமோ?? தவறு செய்துவிட்டோமோ? அடியாருக்கு, சிவனடியாருக்குத் துரோகம் புரிந்த நம் உயிர் உடலில் தங்கலாமா? இதோ உயிரைப் போக்கிக் கொள்ளலாம். என்று எண்ணிய வண்ணம் துவைக்கும் கல்லிலே தன் தலையைத் தானே மோதிக் கொள்ளத் துவங்கினார்.


125. கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத்
தந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை 1202-4

126. வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்கு
தேன் நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின்
மேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெய்த் தொண்டர்
தான் நிறைந்த அன்பு உருகக் கை தொழுது தனி நின்றார் 1203-4

127. முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளி
அந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் 1204-4


அப்போது ஈசன் தன் பக்தனைச் சோதிக்க விரும்பாமல், அந்தப் பாறையினின்றும் தன் மலர்க்கையை நீட்டி அவரது சிரத்தைத் தாங்கிக் காக்க, நிமிர்ந்த திருக்குறிப்புத் தொண்டரின் கண்களிலே ரிஷபவாகனன் காட்சி கொடுக்கின்றான்.

மேலும் இந்த வண்ணார் மடம் பற்றிய தகவல்களை மீண்டும் சிதம்பரம் செல்லும்போது அறிந்து வரவேண்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book