58


//கூற்றிருக்கு மடலாழிக் குரிசின்முத லோரிறைஞ்சக் கொழுந்தேன் பில்கி
ஊற்றிருக்குந் தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்மன்றத் தொருதா ளூன்றி
வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத்
துண்டமா டப்புலித் தோலுமா டப்பகி
ரண்டமா டக்குலைந் தகிலமா டக்கருங்
கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக்
கண்டனா டுந்திறங் கான்மினோ காண்மினோ. //

மேற்கண்ட குமரகுருபரரின் பாடலுக்கு விளக்கம் கீழே காணலாம். இனி,
இறைவனுக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடத்தப் படுவது எதற்கு எனப் பலரும் நினைக்கின்றனர். சொல்லவும் சொல்கின்றனர். ஆனால் அந்த ஆராதனைகளுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது.

ஈசனை அவர் அமர்ந்திருக்கும் பீடத்தில் இருந்து எழுப்பி, பின்னர் ஆராதனைக்குரிய இடத்தில் எழுந்தருளச் செய்வது தோற்றம் என்னும் சிருஷ்டியையும், இறைவனின் திருமேனியைப் பாலாலும், தேனாலும், சந்தனம் போன்ற வாசனாதித் திரவியங்களாலும், அபிஷேகம் செய்விப்பது, திருமஞ்சன நீராட்டுவது காத்தல் என்னும் திதியையும், இறைவனுக்குக் கறுப்புச் சாந்து அணிவிப்பது, அழித்தல், சம்ஹாரம் என்னும் தொழிலையும், வெண்ணிற ஆடையை ஈசனுக்கு அணிவிப்பது, மறைப்பு அல்லது திரோபாவம் என்னும் தொழிலையும், இறைவனின் திருமேனியை ஊர்வலமாய்த் திருவீதிகளில் பவனி வரச் செய்தலை, அருளல், என்னும் அனுக்கிரகத் தொழிலாகவும், கருதப் படுகிறது. இனி, சிதம்பரம் கோயிலில் சில சரித்திர நாயகர்கள் செய்த திருப்பணிகள் பற்றிய குறிப்புக்கள்.

காலத்தால் முற்பட்டது என்று சொல்லப் படும் சிதம்பரம் கோயிலில் எப்போது கட்டப் பட்டது என்று சொல்ல முடியவில்லை என்ற பொதுவான கருத்து இருந்து வந்தாலும், முதல் முதல் கோயிலில் திருப்பணிகள் செய்து, கோவிலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த மன்னன் ஹிரண்யவர்மன் ஆவான். இந்த அரசன், கெளட தேசத்தை ஆண்டு வந்ததாயும் இவன் பெயர் சிம்ஹவர்மன் எனவும், பின்னர் இவன் பெயரை ஹிரண்யவர்மன் என மாற்றிக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த அரசன் தன்னுடைய உடல் நலத்துக்காக தல யாத்திரை செய்து வந்த காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவன் உடல் நலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்துக்கு நன்றி செலுத்தும் விதமாய் நடராஜ ராஜாவின் சன்னதியைச் சுற்றிப் பல மண்டபங்கள் ஏற்படுத்தியதாய்ச் சொல்லப் படுகிறது.

இந்த அரசன் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லப் பட்டாலும் அதற்கான உரிய சான்றுகள் கிட்டவில்லை. ஆனால் உமாபதி சிவாச்சாரியாரின் கோயில் புராணத்தில் இந்த அரசனைப் பற்றிய குறிப்புக்கள் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இவன் காஞ்சியை ஆண்டு வந்ததாயும் சொல்கிறார்கள். இவனுடைய காலம் கி.பி. 5 அல்லது 6-ம் நூற்றாண்டு என்றும் சொல்லப் படுகிறது. என்றாலும் கி.மு. 2-ம் நூற்றாண்டிலேயே தில்லைத் தலத்தைப் பற்றிய குறிப்புக்கள் பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் போன்றவர்களின் குறிப்புக்களில் இருந்து தெரிய வருவதாய்ச் சொல்கின்றனர். பதஞ்சலி முனிவர் என்று ஒருத்தர் மட்டும் இல்லை எனவும், பலர் இருந்ததாயும் சரித்திர ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆன்மீகவாதிகளோ எனில் காலத்தால் முற்பட்டது எனச் சொல்லுகின்றனர். இந்த நடராஜரின் ஆட்டத்தைப்பற்றிய பல பாடல்கள் பலராலும் பாடப் பட்டிருக்கிறது என்றாலும், குமர குருபரரின் ஒரு பாடலை இங்கே காண்போம்.

கூற்று இருக்கும் அடல் ஆழிக் குரிசின் முதலோர் இறைஞ்சக் கொழுந்து என்பில்கி
ஊற்று இருக்கும் தில்லை வனத்து அசும்பு இருக்கும் பசும் பொன்

மன்றத்து ஒரு தாள் ஊன்றி வண்டு பாடச் சுடர் மகுடம் ஆடப் பிறைத்
துண்டம் ஆடப் புலித் தோலும் ஆடப் பகிரண்டம் ஆடக்
குலைந்து அகிலம் ஆடக் கருங் கொண்டலோடும் குழற் கோதையோடும் கறைக்
கண்டன் ஆடும் திறம் காண்மினோ! காண்மினோ!”

இறைவனின் ஆட்டத்தை வர்ணிக்கும் குமரகுருபரரின் இந்தச் செய்யுள் “சிதம்பரச் செய்யுட் கோவை”யில் இடம் பெற்ற பாடல் ஆகும். இது தவிர, குமரகுருபரர் சிதம்பர மும்மணிக் கோவை, சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை ஆகியவையும் பாடியுள்ளார். இப்பாடலில் இறைவன் தன் ஒரு காலை ஊன்றித் தன் மகுடமும், தன் சடாமுடியில் சூடி இருக்கும் பிறை நிலாவும், புலித் தோலும் ஆடுவதோடு மட்டுமில்லாமல் தன் ஆட்டத்தால் அண்ட பகிரண்டத்தையும் ஆட்டுவிப்பதையும் குறிக்கிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book