16

சித்சபையின் உள்ளே இருக்கும் நடராஜத் திருமேனியையும், சிதம்பர ரகசியம்னு சொல்றது என்னன்னும் பார்த்தாகி விட்டது. இந்தச் சிதம்பர ரகசியம் இருக்கும் பகுதி ஒரு திரையால் மூடப்பட்டிருக்கும். திரையை விலக்கித் தீப ஆராதனை காட்டுவார்கள்.பொன்னாலாகிய ஒரு வில்வமாலை தொங்கிக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு உருவம் ஒன்றும் தெரியாது. பரம்பொருளின் உருவமற்ற தன்மையைப் பிரகடனப் படுத்திக் கொண்டிருக்கும். நடராஜரின் ஆன்மா அங்கே உறைந்துள்ளதாயும் கருதப் படுகிறது. ஆத்மஸ்வரூபமாக இறைவன் அங்கே இருக்கிறார் என்றும் இறைவனின் ஆன்மஒளி உறைந்திருக்கும் இதயம் அது என்றும் சொல்லப் படுகிறது. நம்முள்ளேயும் அந்த ஒளி ஊடுருவி நம்முள்ளேயும் இறைவன் உறைகிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும். அருவமாக நடராஜரும், சிவகாமசுந்தரியும் உறைந்திருக்கும் இடமாய்க் கருதப் படுகிறது. நடராஜர் “சொரூபம்” என்றால் சிதம்பர ரகசியம் “அரூபம்” ஆகும். இதைத் தவிர அங்கே ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் ஸ்படிகலிங்கமோ “ரூபரூபம்” அதாவது, அருவுருவம், உருவமானதும், உருவம் அற்றதும் ஆகும். இப்போ சித்சபையின் உள்ளே இருக்கும் மற்றக் கடவுளரைப் பார்ப்போம்.

நடராஜரையும் சிவகாம சுந்தரியையும் தவிர அங்கே “சந்திர மெளீஸ்வரர்” என்னும் ஸ்படிக லிங்கமும் உள்ளது. இந்த லிங்க ஸ்வரூபமும் தீட்சிதர்களால் தினப்படி பூஜிக்கப் படுகிறது. எப்போதில் இருந்து என்று வரையறுக்கப் படமுடியாத காலத்தில் இருந்தே பூஜிக்கப் பட்டு வருகிறது. இந்த லிங்க ஸ்வரூபத்தின் காலமும் வரையறுக்கப் படவில்லை. இது நடராஜராலேயே உருவாக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. தன் தலையில் தான் சூடிக் கொண்டிருக்கும் இளம்பிறையின் குளிர்ந்த மதுரமான கிரணங்களால் நடராஜர் இதைச் செய்தார் எனச் சொல்லப் படுகிறது. தன்னுடைய பிரதிநிதிகளாக தீட்சிதர்களை நியமித்துத் தினசரி பூஜை செய்யும்படி பணித்தார் எனச் சொல்கிறார்கள்.

சிதம்பரம் கோவிலில் வைதிக முறைப்படி வழிபாடு செய்யப் படுகிறது. மற்றக் கோவில்களின் வழிபாட்டு முறைகளோடு ஒப்பிட்டால் , மற்றச் சிவன் கோவில்களில் சைவ ஆகம வழிபாடு தான் செய்யப் படுகிறது. ஆனால் இங்கோ வைதிக முறைப்படி வழிபாடு. இதுபற்றி முன்னொருமுறை ஒரு நண்பர் சந்தேகம் எழுப்பி இருந்தார். ஆனால் இன்று வரை எனக்கு அதற்கான ஆதாரம் கிட்ட வில்லை. இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி 6 முறைகள் தீட்சிதர்களால். அபிஷேஹம், ஆராதனை செய்யப் படுகிறது, வெள்ளை வெளேரென இருக்கும் ஸ்படிக லிங்கத்தைத் தவிர இன்னொரு நடராஜரின் பிரதியும் இங்கே உள்ளது. அது தான் “ரத்ன சபாபதி”!

கிட்டத் தட்ட நடராஜரின் பிரதியான இந்த நடராஜர் மரகதக் கல்லால் ஆனவர். இவரை தினமும் செய்யும் 6 கால வைதீக வழிபாட்டில் 2-ம் கால வழிபாட்டின்போது பூஜிக்கிறார்கள். சாதாரணமாய்ப் பார்க்கையில் கருப்பாய்த் தான் இருப்பார் இவர். அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து கற்பூர தீப ஆராதனை இவரின் எதிரே காட்டப் படும்போது உதயக் கால சூரியனைப் போல் செக்கச் சிவந்த நிறத்துடன் ஒளிவிட்டுப் பிரகாசிப்பார். இவரைத் தரிசிக்காமல் சிதம்பரம் நடராஜரையும், சிதம்பர ரகசிய தரிசனத்தையும் பார்த்த பேறு கிட்டாது எனவும் சொல்லப் படுகிறது. இவர் வந்த வரலாறு? சிதம்பர புராணம் என்ன சொல்கிறது? நாளை பார்ப்போம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book