54


திருவாரூரில் “திருச்சிற்றம்பலம்” என்று சொல்வதில்லை. மாறாக “ஆரூரா, தியாகராஜா” என்றே சொல்லப் படுகிறது. மேலும் வன்மீகம் என்னும் புற்றில் இருந்து ஈசன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியமையால், இது ப்ருத்வித் தலம் என அழைக்கப் படுவதாயும் அறிகிறோம். திருமாலால் பாற்கடலில் வழிபடப் பட்டு, பின்னர் அவரிடமிருந்து இந்திரன் பெற்று, இந்திரனிடமிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியை வந்து அடைந்து ஆரூரில் கோயில் கொண்ட தியாகராஜருக்கே இங்கே முதல் மரியாதை! தில்லையில் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜரின் அழகை இப்போது சற்று பார்ப்போம்.

“குனித்த புருவமும்,கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே!” என்றார் நாவுக்கு அரசர். இறைவனின் திரு அழகில் மயங்கிய அவர் இம்மாதிரி வர்ணிப்பது மிகை அன்று என்றாலும், அவர் தம் வர்ணனையில் மறைந்திருக்கும் பொருள் என்ன வென்றால்,

குனித்த புருவமும் = பரத நாட்டியத்தில் புருவங்கள் ஏறி இறங்குவதின் மூலம் பாவங்களை வெளிப்படுத்தும் கலை உண்டு அல்லவா? இங்கே இறைவன் தன் புருவங்களைக் குனிப்பதின் மூலம் அடியார்களின் குறைகளைக் கூர்ந்து கேட்டு அறிந்து, தன்னையே சரண் என வந்தவர்களின் குறைகளைக் களையும் விதமாய்ப் புருவம் குனித்துக் கொள்வதாயும்,

கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்= தன்னை அடைக்கலம் என நம்பி வந்தோரை வருக என வரவேற்று அவர்களின் பிழைபொறுக்கும் விதமாய் கருணையுடன் கூடிய சிரிப்பையும்,

பனித்த சடையும்= சிவநெறியாளர்க்கு உரிய ஒழுக்கத்தைக் காட்டும் விதமாய் அமைந்ததாம் அந்தச் சடை

பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்= நெருப்பை ஒத்த வண்ணத்தை ஒத்த இறைவன், தன்னிடம் நெருங்கும் பொருட்களை நெருப்பானது எவ்விதம் எரித்துத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறதோ, அவ்வாறே இறைவனும் தன்னிடம் நெருங்கும் அடியார்களைத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறான் என்னும் விதமாய்

இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்=இறைவன் தன் தூக்கிய திருவடியால் அனைத்து உயிர்களையும் பிறவிக்கடலில் இருந்து விடுவிக்கிறான். ஊன்றிய திருவடியால், இப்பிறவியின் அனைத்துக் கருமங்களான ஆணவம், கன்மம், மாயையை அழுந்தித் தேய்த்து அவற்றை அகற்றுகிறான். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடல் வல்லானின் ஆடல் திருக்கோலத்தைக் காணப் பெறுவோருக்கு வேறு என்ன வேண்டும் இந்த உலகில்? இதைவிடப் பேரானந்தம் வேறே உண்டோ? என்கிறார் அப்பர்.

இறையவன் ஆடல் தெற்கு நோக்கியே இருக்கிறது. தென் திசை யமதர்மனின் திசை என்பர். அந்த யமபயத்தை நீக்கி நம்மைப் பேரருட்கடலில் ஆழ்த்தி நம்மை உய்விக்கவும், தெற்கே இருந்து வீசும் தென்றல் காற்று சுமந்து வரும் தென் தமிழின் மகத்துவத்துக்கும், மணத்துக்காகவும் கூட இருக்கலாம். “சித்தம் போக்கு சிவன் போக்கு” என்பர். இவன் போக்கை யாரோ கண்டார்? தன் கையில் உள்ள உடுக்கையைக் கொட்டிக் கொண்டு இவ்வுலக ஆன்மாக்களின் மாயையை உதறுகிறான். ஏந்திய நெருப்பால் கன்ம மலத்தைச் சுட்டுப் பொசுக்குகிறான். ஊன்றிய திருவடியால் ஆணவத்தை அகற்றுகிறான். தூக்கிய திருவடியால் பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கிறான். அபய ஹஸ்தம் காட்டி உயிர்களுக்கு “அஞ்சேல்” என அபயம் அளிக்கின்றான். தண்ணொளி வீசும் திருமுகத்தினால் அனைவருக்கும், அனைத்துக்கும் “நானே தலைவன்” எனத் தெரியப் படுத்துகிறான். திருமுடியில் சுமந்திருக்கும் கங்கையின் மூலம் அவன் பேராற்றலையும் உயிர்களைத் தடுத்தாட்கொள்ளும் வேகத்தையும் வெளிக்காட்டுகின்றான். பித்தனாகிய அவன் பிறையைத் தன் தலையில் சூடியதின் மூலம், தன்னைச் சரண் என வந்தடைந்தவர்களைக் கைவிடாமல் காப்பான் எனவும் தெரிவிக்கின்றான். ஆடலரசனே சரணம், அவன் திருவடிகளே போற்றி, போற்றி!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book