17

இந்த ரத்னசபாபதியைப் பற்றியும் அவர் எவ்வாறு சிதம்பரம் வந்தார் என்பதும் கீழ்க்காணும் சிதம்பர மகாத்மியம் தல புராணத் தகவல் தெரிவிக்கிறது.

“ஒரு முறை பிரம்மா கங்கைக் கரையில், காசி நகரில் “அந்தர்வேதி” என்னும் இடத்தில் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்தார். அப்போது அவருக்கு வேதங்களை முற்றும் கற்று உணர்ந்த அந்தணர்கள் தேவைப் படவே ஈசனை நாட அவர் தம் பூத கணங்களை வைத்துச் செய்யச் சொல்லப் பூதகணங்கள் பிராமணர்களாய் மாறி அங்கு வந்தனர். பின்னர் இந்தப் பூத கணங்கள் ஏற்கெனவே ஈசன் தன் நடனத்திற்குத் தில்லையைத் தேர்ந்தெடுக்க அவரோடு இருக்க வேண்டி அங்கே சென்றுவிட்டனர். அவர்களே சிதம்பரம் தீக்ஷிதர்கள் எனப்பட்டனர். இந்தச் சிதம்பரம் தீட்சிதர்களையே மீண்டும் தன் யாகத்துக்காக பிரம்மா நாடினார். அவர்களை வரவழைத்தார். அவர்களும் அவர்களின் குருவான வியாக்ரபாதரின் உத்தரவின் பேரில் காசியை வந்து அடைந்தனர். யாகமும் இனிதே முடிந்தது. நடு மதிய நேரம் ஆகவே பின் ஒரு பெரிய சமாராதனை செய்து தீட்சிதர்களை உபசரித்து “வைஸ்வதேவம்” என்னும் விருந்து உபசாரம் செய்ய முடிவு செய்தார் பிரம்மா. ஒவ்வொரு பெரிய யாகத்துக்குப் பின்னும் யாகம் செய்ய உதவும் அந்தணர்களை உபசரிக்கும் முறை அது.

ஆனால் தீட்சிதர்களோ தினமும் சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசனம் செய்து விட்டே பின் தங்கள் உணவை ஏற்கும் பழக்கம் உள்ளவர்கள். காசியிலோ நடராஜர் இல்லை. நடராஜ தரிசனம் கிடைக்காமல் தாங்கள் வரமுடியாது என அவர்கள் தெரிவிக்க செய்வதறியாத பிரம்மா சிவபெருமானின் உதவியை நாடினார். சிதம்பரம் தீட்சிதர்களோ நாங்கள் திரும்பச் சிதம்பரத்துகே போகிறோம். என்று கூறுகிறார்கள். யாகத்தின் பலனே இல்லாமல் போய்விடுமே என்று கலங்கிய பிரம்மாவின் உதவிக்கு அந்தப் பரம்பொருள் செவி சாய்க்காமல் இருப்பாரா? திடீரென ஒரு ஒளி வெள்ளம். யாகத் தீ குபுகுபுவென எரிந்து கொண்டிருந்தது. அதில் இருந்து அந்த ஆதிசிவனே நடராஜ ஸ்வரூபத்தில் தோன்றினார் . திகைத்துப் போன தீட்சிதர்களும், மற்றவர்களும் அந்த நடராஜரைத் துதி செய்து சந்தனம், தேன், பால் போன்றவற்றால் அபிஷேஹ ஆராதனைகள் செய்து அந்த நடராஜரை வழிபட்டனர். காசியிலே தீக்ஷிதர்கள் வழிபட வேண்டி நடராஜராய்த் தோன்றிய அந்த அர்ச்சாவதார மூர்த்தியே பின்னர் அவர்கள் வழிபட்டதற்குப் பின்னர் அப்படியே ரத்தின சபாபதியாக மாறினார். தீட்சிதர்களுக்கே அந்த நடராஜ ஸ்வரூபத்தை அளித்தார் பிரம்மா. தீட்சிதர்கள் திரும்பிச் சிதம்பரம் வரும்போது அந்த நடராஜரையும் தங்களுடன் எடுத்து வந்தனர். அன்று முதல் ரத்தின சபாபதிக்கு தினமும் 2-ம் காலப் பூஜை (காலை 10 மணி அளவில்) செய்யப் படுகிறது. நடராஜர் “மாணிக்ய மூர்த்தி” என்ற பெயரையும் பெற்றார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book