37


கம்ப ராமாயணம் அரங்கேறியது பற்றிய சந்தேகம் சிலர் எழுப்பி இருக்கிறார்கள். நானும் ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியதாய்த் தான் படித்திருக்கிறேன். என்றாலும் என்னிடம் உள்ள குறிப்புக்களில் இங்கே சிதம்பரம் தீட்சிதர்களிடம் அங்கீகாரம் பெறவும் கம்பர் இங்கே தன்னுடைய ராமாயணத்தைப் பாடியதாயும் கூறுகிறது. ஆகவே தான் அதை எழுதினேன். அடுத்து கோபுரங்களுக்குச் செய்த பணிகளைப் பற்றியும், தீட்சிதர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் முன்னர், சிதம்பரம் நகரின் முக்கியத்துவம் பற்றி ஒரு விளக்கம்.
வைஷ்ணவர்களுக்குக் கோயில் என்றால் அது ஸ்ரீரங்கத்தையே குறிக்கும். அங்கே ரங்கராஜனாக அருள் பாலிக்கிறார் விஷ்ணு. சைவர்களுக்கோ கோயில் என்றால் அது சிதம்பரம் மட்டுமே. இந்தப் பிரபஞ்சத்தின் ஐந்து ஆதார சக்திகளில் “ஆகாயம்” சிதம்பரம் தான். இந்தப் பிரபஞ்சமே “விராட புருஷன்” எனக் கூறப்படும் அந்த மகா சக்தியிடம் அடக்கம் என்றால் அந்த விராட புருஷனின் இருதயத்தின் மத்தியப் பகுதி சிதம்பரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. குன்டலினி யோக சாஸ்திர ஆதாரங்களில் இது “அனஹதா” எனக் கூறப்படுகிறது. சிவன் கோவில்களின் தலைமைப் பீடமாகக் கருதப் படுகிறது. மற்றச் சிவன் கோவில்களில் சிவனின் மற்ற சக்திகள் வியாபித்திருப்பதாயும், இங்கே தான் ஆத்ம சக்தி இருப்பதாயும், தினம் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்ததும், எல்லா சக்திகளும் இங்கே வந்து ஒடுங்குவதாயும் கூறுகிறார்கள்.
ஐந்து சபைகளில் இது “கனக சபை” . மற்றதில் திருவாலங்காட்டில் “ரத்ன சபை” மதுரையில் “வெள்ளி சபை”, திருநெல்வேலியில் “தாமிர சபை”, திருக்குற்றாலத்தில் “சித்திர சபை”. இந்தத் திருக்குற்றாலத்தில் சித்திர சபை பரமரிப்புக் குறைவால் சித்திரங்கள் அழியும் நிலையில் உள்ளது. நடராஜரும் அங்கங்கே கொஞ்சம் தழும்புகளோடவே காணப் படுகிறார். சிவனின் முழு சக்தியும், நடராஜ ஸ்வரூபத்தில் இங்கே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது. திருநெல்வேலியில் உள்ளது உண்மையான தாமிர சபை இல்லை எனவும், திருநெல்வேலி மாவட்டத்தின் செப்பறை என்னும் ஊரில் உள்ள நடராஜர் கோயில் தான் தாமிரசபை எனவும் சிலர் கூற்று. செப்பறை குறித்த தகவல் பின்னர் இடம் பெறும்.

மனித உடலில் இதயம் எவ்வளவு முக்கியமோ அப்படி சிதம்பரம் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் நடராஜர் முழு உருவத்துடன் இங்கே ஜீவனுடன் விளங்கிக் கொண்டிருப்பதாயும், இந்த ஸ்வரூபத்தை “அம்சி” எனச் சொல்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களின் லிங்க ஸ்வரூபம், அவ்வாறு இல்லை எனவும் அவை “அம்சரூபா” எனவும் அழைக்கப் படுவதாயும் சொல்கின்றனர்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, அருணாசலம் நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி எனச் சொல்லப்படும் வரிசையில் சிதம்பரம் நடராஜ தரிசனமே முக்தி எனச் சொல்லப் படுகிறது.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book