59

உமாபதி சிவாச்சாரியாரின் கோயில் புராணத்தின் படி சிம்மவர்மன் காஞ்சிபுரத்தை ஆண்டுவந்ததாயும் பல்லவர்களின் முன்னோர்கள் எனவும் சொல்கின்றனர். இந்தச் சிதம்பரம் கோயிலின் கட்டுமானங்கள் எப்போது ஆரம்பித்தது எனச் சொல்ல முடியாதபடிக்குக் காலத்தால் பழமை வாய்ந்ததாகவே சொல்லப் படுகின்றது. பதஞ்சலி முனிவர் எவ்வளவு பழமையானவரோ அவ்வளவு பழமை வாய்ந்ததாய்க் கூறப்படும் இந்தக் கோயிலின் கட்டமைப்பை வைத்துச் சரித்திர ஆய்வாளர்கள் இது பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப் பட்டிருக்கலாம் என்றும், சிவகாமி அம்மையின் கோயில் பதினான்காம் நூற்றாண்டுக்குச் சமீபத்தில் கட்டப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றனர். நூற்றுக் கால் மண்டபம் சோழத் தளபதியான நரலோகவீரனால் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப் பட்டதாயும் சொல்கின்றனர். இது தவிர, சோழ மன்னன் முதலாம் பராந்தகன் இந்தக் கோயிலின் கூரைக்குப் பொன் வேய்ந்ததாகவும் கேள்விப் படுகின்றோம்.

தற்சமயம் சிதம்பரம் கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுக்கள் அனைத்துமே மன்னன் கோபெருஞ்சிங்கன் என்பவனைக் குறித்தே சொல்லப் படுவதாயும், அவன் பல்லவர்களின் பிற்கால அரசன் எனவும், பிற்காலச் சோழர்களுக்கு முன்னால் ஆண்டவன் எனவும் தெரிய வருகின்றது. தெற்கு கோபுரத்தை ஏழு மாடங்களுடன் அவன் கட்டியதாகவும், அது தவிர பல்வேறு பொருட்களையும் தினசரி வழிபாட்டுக்கு அளித்ததாகவும், புஷ்ப கைங்கரியம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும் அறிகின்றோம். பொதுவாகவேச் சோழமன்னர்கள் அனைவருமே சிவபக்தியில் ஊறித் திளைத்தவர்கள் மட்டுமின்றித் தில்லைக் கோயிலில் பெரும் ஈடுபாடும் கொண்டவர்களாகவே இருந்து வந்தனர். சோழ அரசருக்கு முடி சூட்டும் உரிமையும் தில்லை வாழ் அந்தணர்களுக்குச் சொந்தமாக இருந்து வந்தது. மன்னன் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் தில்லைப் பதியில் மறைந்திருந்த திருமறைகளை மன்னன் கண்டெடுத்து, நம்பியாண்டார் நம்பி மூலம் அவற்றைத் தமிழ் நாடெங்கும் ஓதுமாறு பணித்தான்.
இவனைத் தவிர, வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன் என முறையே சோழ அரசர்கள் பலரும் இந்தக் கோயில் திருப்பணியில் பங்கு பெற்றிருக்கின்ரனர். முதலாம் பிராகாரத்தை ஏற்படுத்தியவன் குலோத்துங்க சோழன் என்பதால் அவன் பெயரால் அது “குலோத்துங்க சோழன் திருமாளிகை” எனவும், பின்னர் இரண்டாம் பிராகாரம் அவன் மகன் ஆன விக்கிரம சோழன் பெயரால், “விக்கிரம சோழன் திருமாளிகை” எனவும் அழைக்கப் பட்டு வந்தது. விக்கிர சோழன் இது தவிர, மேற்குக் கோபுர வாசல், கோயிலுக்கு எனத் தேர் ஆகியன ஏற்படுத்தினான். ஒரு தெருவே அவன் பெயரில் விளங்கியது. அவனின் தளபதியான நரலோக வீரன் நூற்றுக் கால் மண்டபம், சிவகங்கைக் குளத்தின் படிக்கட்டுகள் ஒரு பிராகாரம், மண்டபம் ஒன்றும் மற்றும் சிவகாமி அம்மையின் வெளி மதில் சுவர் போன்றவற்றை எழுப்பினான்.

பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் சபாபதிக்கு முக மண்டபம், கோபுரம், சிவகாமி அம்மையின் கோயிலின் மதில் சுவரின் எஞ்சிய பாகம் போன்றவற்றை எழுப்பினான். பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தான் முதன் முதலாக நடராஜருக்கு அன்னப் பாவாடை சாத்தும் வழக்கம் ஏற்பட்டதாய்த் தெரிய வருகிறது. சோழர்களுக்குச் சற்றும் குறைவில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் பிற்காலப் பாண்டியர்களும் சிதம்பரம் கோயிலின் பல கட்டுமானங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

13-ம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய நாட்டை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1, மற்றும் 2 இருவருமே கோயிலுக்கு எனப் பல நந்தவனங்கள், நிலங்கள் போன்றவற்றைத் தானமாய் அளித்தனர். அடுத்து வந்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், தில்லைக் காளி கோயிலுக்கும் திருப்பணி செய்தான். கனகசபையைப் பொன்னால் அபிஷேகம் செய்த அவன் “பொன் வேய்ந்த பெருமான்” என்னும் பட்டப் பெயரையும் பெற்றான். மேற்குக் கோபுரத் திருப்பணியும் செய்த அவன் காலத்தில் துலாபாரம் என்னும் வழிபாடும் ஏற்பட்டது. வீரபாண்டியன், விக்கிரம பாண்டியன் இருவருமே பல திருப்பணிகளைச் செய்தனர் என்றும் தெரிய வருகின்றது. சோழ அரசர்களைப் போலவே இந்தப் பாண்டிய அரசர்களும் தில்லைப் பதியிலேயே தங்கள் மகுடாபிஷேகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அதன் பின்னர் சோழ, பாண்டியர் காலம் முடிந்து விஜயநகர மன்னர்களின் ஆதிக்கம் நடைபெற்றது, என்றாலும் அவர்களும் எதற்கும் சளைக்கவில்லை. கிருஷ்ண தேவராயர் காலம் தொட்டே சிதம்பரம் கோயிலுக்குத் திருப்பணி செய்கின்றார்கள். பல நாடுகளையும் வென்ற கிருஷ்ணதேவராயர் அதைப் போற்றும் வகையில் தில்லை நடராஜருக்கு மூன்று கிராமங்களைப் பரிசளிக்கின்றார். கோயிலுக்கும் விஜயம் செய்து வழிபடுகின்றார். வடக்கு கோபுரத்தைப் பதினாறாம் நூற்றாண்டில் கட்டிய அவர், அந்தக் கோபுரத்தில் தன் உருவத்தையும் பதிக்கச் செய்திருக்கின்றார். அவருக்கு அடுத்து வந்த அச்சுத தேவராயன், 82 கிராமங்களைப் பரிசளிப்பதோடு அல்லாமல் வழிபாட்டு முறையையும், திருவிழாக்களையும் மேம்படுத்தும் வண்ணம் பல பரிசுகளையும் அளிக்கின்றான்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book