75

தில்லைக் கூத்தனை ஹைதர் அலி காலத்தில் மறைத்து வைத்த இடம் பற்றிப் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அனைத்துமே செவி வழிச் செய்திகள் ஆகவே காணப்படுகின்றன. புளியந்தோப்புப் பொந்தில் கூத்தனை ஒளித்து வைத்த இடம் சோழமண்டலத்தைச் சார்ந்த புளியங்குடி என்னும் சிற்றூர் என உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு மஞ்சரி 2-ம் பகுதி சொல்லுவதாய்த் தெரியவருகின்றது. ஆனால் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகரின் “சிதம்பரம்” என்னும் நூலிலோ மலைநாட்டில் ஒளித்து வைத்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. ஆனால் பாண்டியநாடு மட்டும் சும்மா இருக்குமா என்ன? தங்கள் பங்குக்கு அவங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமம் தான் அந்த ஊர் என்றும் கூத்தன் ஒளிந்திருந்த இடம் இதுவே என்றும் அதற்குச் சான்றாக ராஜபாளையம் கடைவீதியை “அம்பலப் புளி பஜார்” என அழைப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்கள். இந்தப் பல்வேறுவிதமான தகவல்களும் ஒரு விஷயத்தை மட்டும் உறுதி செய்கின்றன. அது கூத்தன் தன்னிருப்பிடத்தை விட்டு மறைந்து இருந்தார் என்பதே! தஞ்சை மாவட்டத்துக்காரர்களோ தங்கள் உடையாளூர் ஜமீனில் நடராஜரை வைத்துப் பாதுகாத்ததாய்ச் சொல்கின்றனர்.

ஆனால் மராட்டியர் செப்பேடுகளோ இதைப் பற்றிய தெளிவான குறிப்புகளைக் கொடுக்கின்றன. திருவாரூர்ச் செப்பேடுகள் என அழைக்கப் படும் இவை எழுதிய காலம் சாம்போஜி மன்னன் காலம் ஆகும். மூன்று செப்பேடுகளிலும், வடமொழியிலும், தமிழிலும் எழுதப் பட்டிருக்கின்றது. செப்பேடுகள் எழுதப் பட்ட காலந்தொட்டே வடமொழி, தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதப் பட்டு வந்ததாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. ஆகவே இதுவும் அதைப் பின்பற்றியே எழுதப் பட்டிருக்கலாம். ஒரு செப்பேடு மட்டும் முழுதும் வடமொழியில் எழுதியிருக்கின்றது என்று சொல்கின்றார். செப்பேட்டின் ஒரு பகுதியில் வடமொழியும், மற்றொரு பகுதியில் தமிழிலும் எழுதி இருக்கின்றது.

கி.பி. 1684- எழுதப் பட்ட இந்தச் செப்பேட்டில் கூத்தனின் பெருமையைக் குறித்தும், மன்னனின் குருவான முத்தைய தீட்சிதரால் கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்யப் பட்ட விபரமும் காணக் கிடைக்கின்றது. இந்தச் செப்பேட்டை அளித்ததோ சேரநாட்டுச் சிற்பி எனவும் தெரிய வருகின்றதாம். இதில் வடமொழிப் பகுதியில் காணப் படும் சில சொற்களால் கூத்தன் மறைந்திருந்த இடம் சேரநாடு எனவும் கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. எவ்வாறிருந்தாலும் கூத்தபிரான் சில காலம் தலைமறைவாய் இருக்க வேண்டி இருந்தது என்பது தெளிவு. மேற்கூறிய செப்பேட்டில் கண்டிருக்கும் பாடல் பின்வருமாறு உள்ளதாய்த் தெரிவிக்கின்றார்.

“இயல்வாம சகாத்தம் ஆயிரமோடறு நூற்றாறின்
இனிய ரத்தாட்சி வருடம்
இலகு கார்த்திகை மாதம் இருபத்திரண்டாந்
தேதி சுக்கிரவாரமும்
செயமான தசமியும் அத்த நட்சேத்திரமும்
திகழ்கும்ப லெக்கினமுமே
திருந்துபவ கரணமும் ஆயிஷ்யமான யோகமும்
தினமும் வந்தே சிறப்ப

உயர் ஆகமப் படியின் ஆனந்த நடராசர்
ஒளிபெற நிருத்தமிடவே
ஓங்கு சிற்சபைதனைச் செம்பினால் மேய்ந்திடும்
உண்மையை யுரைக்க வெளிதோ
வயலாரும் வாவிசூழ் புலிசையழகிய திருச்
சிற்றம்பலத் தவமுனி
வையகம் துதி செயக் கும்ப அபிஷேகமும்
மகிழுற முடித்த நாளே”
இந்தப் பாடலின் படி சாலிவாகன சகாப்தம் 1606-ம் ஆண்டு, கி.பி. 1684-ம் ஆண்டு, தமிழ் ரத்தாட்சி வருடம், கார்த்திகை மாதம், இருபத்திரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதியும் ஹஸ்த நட்சத்திரமும் கும்ப லக்கினமும் சேர்ந்த சுபதினத்தில் தில்லையாண்டவர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்த்திய செய்தி செப்புத் தகட்டில் குறிக்கப் பட்டது எனச் சொல்லப் பட்டுள்ளது. மேலும் வடமொழிப் பகுதியில், கேரள தேசத்தில் மலைகளுக்கருகில் உள்ளவரும், மரங்களின் நிழலில் இருப்பவரும், மக்களின் அரசரும், ஆடுபவரும், அருந்தும் குடிநீருக்கருகில் இருப்பவரும் அம்பலம் என்ற சொல்லின் இலக்கணமாய் அமைந்தவரும் ஆன சிவபெருமானுக்குக் கேரளத்தைச் சேர்ந்த சிற்பி கொடுத்த செப்பேடு இது என்று சொல்லப் பட்டிருப்பதாய்த் தெரிவிக்கின்றார்.

இந்த மேற்கண்ட தகவல்களின் படி தில்லைக் கூத்தனைக் கேரளத்தில் சிலகாலம் மலைகளுக்கிடையே மர நிழலில் மறைத்து வைக்கப் பட்டிருக்கவேண்டும் எனவும், தில்லையில் வாழ்ந்து வந்த திருச்சிற்றம்பல முனிவர் என்பவரின் பெரு முயற்சியால் குடமுழுக்கு ஆகம விதிகளின்படி நடத்தப் பட்டிருக்கின்றது என்பதும் புலனாகின்றது. “சிற்சபையினைச் செம்பினால் மேய்ந்திடும் உண்மையினை” என்பதில் இருந்து பொன்னோடுகள் ஒருவேளை அகற்றப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றார்.
இதனை அடுத்து வந்த ஒரு செப்பேடும் உறுதி செய்வதாய் அவர் சொல்லுவதாவது:


சர்வதாரி ஆண்டு மார்கழி மாதம் வெளியே சென்ற நடராஜருக்கு சாம்போஜி மன்னனின் ஆணையின் பேரில் கோபால் தாதாஜி என்பவர் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தியதாகவும் இரத்தாட்சி ஆண்டு கார்த்திகையில் இருந்து ஆடவல்லான் தன் நடனத்தைப் பொன்னம்பலத்தில் தொடர்ந்ததாயும் சொல்லுகின்றார். விபவ ஆண்டு தை மாதம் 27-ம் நாள் வியாழக்கிழமை பெளர்ணமி திதியில், இந்தக் கனகசபை மீண்டும் முழுக்க முழுக்கப் பொன்னால் வேயப் பெற்றுப் புதுப் பொலிவோடு குடமுழுக்கு நடத்தப் பெற்றதாயும் கூறுகின்றார். இது பற்றிய மேலதிக விளக்கங்கள் நாளை காண்போம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book