24

சரித்திரபூர்வமாக இந்தக் கோவில் 2-ம் நந்திவர்மன் காலத்தில் புதுப்பிக்கப் பட்டதாய்த் தெரிகிறது. திருச்சித்திரக் கூடம் என வைஷ்ணவர்களால் அழைக்கப் படும் இது முதலில் தீட்சிதர்களால் தான் வழிபாடு செய்யப் பட்டு வந்துள்ளது. திருமங்கை ஆழ்வாராலும், குலசேகர ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப் பட்ட இந்தக் கோயில், அவர்களால் பாடப் பட்ட திருமொழியிலும் தீட்சிதர்கள் வழிபாடு செய்தது பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. குலசேகர ஆழ்வார் ராமபக்தியில் சிறந்தவர், ராமரைத் தொழுது வருவதே பிறவிப் பெரும்பயன் என நினைத்தவர், இந்தக் கோயில் கோவிந்தராஜப் பெருமாள் ராமர்தான் என மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்திருக்கிறார். அந்த ஸ்ரீராமன் தான் கோவிந்தராஜராக வந்திருப்பதாய் மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்துள்ளார்.

என்றாலும் சிதம்பரம் தீட்சிதர்களைப் பொறுத்தவரை நடராஜருக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துப் பெருமாளை அவரின் பரிவார தேவதைகளில் ஒருவராகவே நினைத்து ஆராதித்து வந்திருக்கிறார்கள். காஞ்சியில் உள்ள சிவ- ஏகாம்பரநாதருக்கு விஷ்ணு பரிவார தேவதை என அங்கே உள்ள ஆதிசைவ குருக்கள் வைத்து வழிபாடு செய்வதைப் போல சிதம்பரத்திலும், நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண வந்த பரிவார தேவதைகளில் ஒருவராகவே விஷ்ணுவை வழிபாடு செய்தனர். கிட்டத் தட்ட 10-ம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது.

கோவிலின் நிர்வாகஸ்தர்களுக்குள் சிவன் கோவிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள், விஷ்ணு கோவிலைப் புறக்கணிப்பதாயும், வழிபாடு சரிவர நடைபெறவில்லை எனவும் குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட்ட காலத்தில் அச்சுத ராயன் என்பவன் காலத்தில் விஷ்ணு கோவில் புதுப்பிக்கப் பட்டதோடு அதன் நிர்வாகம் வைஷ்ணவர்களின் ஆதிக்கத்தில் ஒப்படைக்கப் பட்டது. அத்தோடு நில்லாமல் “வைகானச சூத்ரம்” முறையில் வழிபாடுகள் நடத்தவும் ஆணை இட்டதாய்த் தெரிகிறது. இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்களாய்த் த்வஜஸ்தம்ப மண்டபத்தின் கிழக்கே இருப்பதாயும் சொல்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க நாயன்மார்களில் முக்கியமான நால்வர்களின், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியவர்களில் முதல் மூவரின் பாடல்களில் சிதம்பரம் விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப் படவில்லை எனவும், மாணிக்கவாசகரின் பாடல்களிலேயே விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதாயும் சொல்கின்றனர். மாணிக்கவாசகரின் திருச்சிற்றம்பலக்கோவையில் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாயும் சொல்கின்றனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book