62


அடுத்ததாய் நாம் காணப் போவது, சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே அமைந்திருக்கும், கோவிந்தராஜப் பெருமாள் பற்றிய சில தகவல்கள். ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தை மனதுக்குள்ளேயே கண்டு களித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, பின்னர் தான் தினமும் நேரில் கண்டு ஆனந்திக்க வேண்டியே இங்கே கோயில் கொண்டாரோ எனச் சொல்லும்படிக்கே, ஈசனின் தாண்டவக் கோலத்தைப் பார்த்தபடிக்கு கோவிந்தராஜப் பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒரு கொடிமரம், கருடனுக்கு ஒரு சன்னதி, பலிபீடம் முதலியன உள்ளன. சிறிய ஒரு பிரகாரமும் உள்ளது. நிருத்த சபைக்கு அடுத்து, மகாலட்சுமிக்கு எனத் தனியாக ஒரு சன்னதி உள்ளது. இந்தக் கோயிலை ஸ்ரீவைஷ்ணவர்கள், புண்டரீகபுரம் என அழைப்பதால், அன்னையின் திருநாமம் இங்கே புண்டரீகவல்லித் தாயார் ஆகும். விஷ்ணுவின் சன்னதியையும், இந்த விஷ்ணுவின் கோயிலையும் திருச்சித்திரகூடம் என வைஷ்ணவர்கள் அழைக்கின்றனர். முதன் முதலில் இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் 8-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப் பட்டிருக்கலாம் எனச் சரித்திரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சியின் வைகுந்தபெருமாள் கோயிலைக் கட்டிய இவனே இந்தக் கோயிலையும் எழுப்பியதாயும் ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பர், சுந்தரர், சம்பந்தர் காலத்தில் இங்கே விஷ்ணுவுக்கெனக் கோயில் இல்லை எனவும் சொல்லும் இந்தத் தகவல், மாணிக்கவாசகர் காலத்திலேயே இந்தக் கோயில் எழுப்பப் பட்டிருக்கவேண்டுமென்றும் சொல்கின்றது.

“பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த
செம்பொன்மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்திர கூடஞ்சென்று சேர்மின்களே!” என திருமங்கை ஆழ்வாரும்,

“செந்தளிர் வாய் மலர் நகைசேர் செழுந்தண்சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள
அந்தணர்களோடு மூவாயிரவரேத்த
வணிமணியாசனத்தமர்ந்த வம்மான்றானே!” எனக் குலசேகர ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்வித்திருக்கின்றார்கள் இந்தத் தில்லை கோவிந்த ராஜருக்கு.
ஆனால் தீவிர சைவர்கள் ஆன சோழமன்னர்கள் காலத்தில், 12-ம் நூற்றாண்டில் ஆண்ட 2-ம் குலோத்துங்கன் காலத்தில் விஷ்ணு கோயிலில் இருந்து விஷ்ணு விக்ரஹம் எடுக்கப் பட்டுக் கடலில் வீசி எறியப் பட்டதாயும் தெரியவருகின்றது. பின்னர் அந்த விக்ரஹம், வைஷ்ணவ பக்தர்களால் எடுக்கப் பட்டு, திருமலையின் கீழே திருப்பதிக்குக் கொண்டு வரப் பட்டு, அங்கே ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப் பட்டுக் கோயிலும் கட்டப்பட்டதாய்ச் சரித்திரம் கூறுகின்றது. அதன் பின்னர் வந்த கிருஷ்ணதேவராயரின் குலத்தைச் சேர்ந்த அச்சுதராயன் என்பவன், மகாவிஷ்ணுவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டியதோடல்லாமல், விஷ்ணுவின் விக்ரஹத்தையும் அங்கே பிரதிஷ்டை செய்ய ஆவன செய்தான். இது தவிரவும் வைகானச முறைப்படி கோயிலில் தினசரி வழிபாடுகள் நடத்தவும், அதற்கான நிதி உதவியும் அச்சுதராயனால் செய்யப் பட்டது. பின்னர் வந்த வேலூரை ஆண்ட ரங்கராயன் என்பவனால் கோயில் மேலும் புதுப்பிக்கப் பட்டு, புண்டரீகவல்லித் தாயாருக்கு விமானமும் எழுப்பப்பட்டு, கோவிந்தராஜரின் சன்னதிக்கு முன்னால் இருக்கும் மண்டபமும் புதுப்பிக்கப் பட்டது. 5 கிராமங்களுக்கு வரிவிலக்கு அளித்து, அவற்றின் வருமானத்தை விஷ்ணு கோயிலின் வழிபாடுகளுக்கும் கொடுத்தான்.

தற்காலத்தில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும், விஷ்ணு கோயில் அறங்காவலர்களுக்கும் உள்ள பிரச்னை செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் சுமுகமாய்த் தீர்த்து வைக்கப் பட்டு ராஜா சர் செட்டியார் அவர்கள் விஷ்ணு கோயிலின் திருப்பணிகளையும் செய்து கொடுத்தபின்னர், 1934-க்குப் பின்னர் விஷ்ணு கோயிலின் அறங்காவலர்களுக்கும், நடராஜர் கோயிலின் தீட்சிதர்களுக்கு சுமுகமான உறவே இருந்து வருகின்றது. விஷ்ணு கோயிலின் வழிபாட்டு விஷயங்களில் தீட்சிதர்கள் தலை இடுவதில்லை. வைகானஸ முறைப்படியே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book