78

இந்தக் கோயில் அவ்வப்போது பல்வேறு கட்டடக் கலைகளுக்கு உட்பட்டு வந்திருக்கின்றது. இந்தியாவின் கலாசாரத்துக்கும் வரலாற்றுக்கும் இந்தியக் கோயில்களே பெருமளவும் உதவி வந்திருக்கின்றன. முக்கியமாய்த் தென்னிந்தியாவில் உள்ள சிவ, விஷ்ணு ஆலயங்களின் கட்டுமானங்கள் வரலாற்றுச் சான்றுகளாகவும் விளங்குகின்றன. அவ்வகையில் சிதம்பரம் கோயிலும் பல்வேறு அரசியல் காலத்திலும் அந்த அந்த அரசியல் சூழ்நிலைக்கேற்றக் கட்டிடக் கலையைக் கொண்டு விளங்குகின்றது என்றும் சொல்லலாம்.

முதலில் சரித்திரபூர்வமாய்ப் பார்த்தால் சிதம்பரம் கோயில் பல்லவர்கள் காலத்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலும், பின்னர் வந்த பிற்காலச் சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பனிரண்டாம் நூற்றாண்டு வரையிலும், பாண்டியர்கள் பனிரண்டில் இருந்து பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருப்பதாய்ச் சரித்திரப் பூர்வத் தகவல்கள் இருக்கின்றன. அதன் பின்னர் வந்த விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களும், அவர்களுக்குப் பின்னர் வந்த நாயக்கர்களும் சிதம்பரம் கோயிலுக்குப் பல்வேறு திருப்பணிகள் செய்து வந்திருக்கின்றனர் என்பதையும் பார்த்தோம்.


கோயிலின் அளவு கிழக்கு, மேற்காய் அளந்தால் குறைவாயும், வடக்கு, தெற்காய் அதிகமாயும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். மற்றக் கோயில்களுக்கும் இதற்கும் உள்ள இந்த வேறுபாட்டினால் இந்தக் கோயில் செவ்வக வடிவில் அமைந்திருப்பதாயும் சொல்லப் படுகின்றது. பொதுவாய்ப் புராணங்களின்படி இந்தக்கோயில் விஸ்வகர்மாவால் கட்டப் பட்டது எனவும், ஈசன் தானே கோயிலின் அமைப்பையும், கோபுரங்களின் அமைப்பையும் வடிவமைத்தான் எனவும் சொல்லப் படுகின்றது. மேலும் பதஞ்சலி, வியாக்கிரபாதர் போன்ற முனிவர்களும் விஸ்வகர்மாவாலேயே இந்தக் கோயில் கட்டப் பட்டது எனச் சொல்லி இருக்கின்றனர். என்றாலும் தற்காலத்தில் நாம் பார்க்கும் கட்டிட அமைப்பு பிற்காலச் சோழர்காலத்தைச் சேர்ந்தவையே என வரலாற்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். கோவிந்தராஜரின் கோயில் விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் கட்டப் பட்டிருக்கலாம் என்று அந்த ஆய்வு சொல்லுகின்றது.

இரு பெரும் நதிகளுக்கு இடையில் உள்ள வண்டல் மண்ணால் நிறைந்த பூமியில் கட்டப் பட்டிருக்கும் இந்தக் கோயிலுக்குக் கற்கள் எங்கிருந்து கொண்டுவரப் பட்டன என்பதை நினைத்து ஆய்வாளர்கள் வியக்கின்றனர். சுற்று வட்டாரம் 40 மைலுக்கு எங்கேயும் மலைகளோ அல்லது கற்கள் கிடைக்கக் கூடிய எந்த விதத் தடயமோ இல்லாத சூழ்நிலையில், சுற்றுச் சுவர்களில் ஆங்காங்கே சிற்பங்கள் செதுக்கப் பட்டும், உள்ளே தளங்கள் கற்கள் பதிக்கப் பட்டும் விளங்குவதோடு, ஒரே கல்லினால் செய்யப் பட்ட ஆயிரம் தூண்களைக் கொண்ட பெரிய ஆயிரக்கால் மண்டபத்தையும் கொண்டிருக்கின்றது.

கோயிலின் குளமோ 150 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டு மிகுந்த ஆழத்தோடு பெரிய கற்களால் ஆன நீளப் படிகளையும் கொண்டு விளங்குகின்றது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book