82


இப்போது மீண்டும் கட்டிடக் கலை பற்றிப் பார்க்கலாம். கோயிலின் முக்கிய பாகமும், மத்திய பாகமும் ஆன சித்சபை முழுக்க முழுக்க மரத்தால் ஆனது. அதன் அஸ்திவாரம் கல்லில் போடப் பட்டது. கூரையை முழுக்க தங்கத்தால் மூடி இருக்கின்றனர். விமானம் ருத்ரகோடி விமானம் என்ற பெயரில் வழங்கப் படுகின்றது. சித் சபையின் எதிரே நாம் பார்த்த கனக சபையும் கல்லால் ஆன அஸ்திவாரத்தின் மேலேயே நிற்கின்றது. மரக்கதவுகள், வெள்ளியால் மூடப் பட்டுள்ளன. இந்தக் கூடத்தின் கூரையைச் செப்புத் தகடுகளால் மூடி இருக்கின்றனர். அடுத்த முக்கிய இடமான நிருத்த சபையில் (இங்கே தான் சரபரும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றார் என ஏற்கெனவே பார்த்தோம்) 8 அடி உயரத்தில் உள்ள 56 தூண்கள் சித்திர விசித்திரமான வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப் பட்டு தாங்குகின்றன. தென்னிந்தியாவிலேயே மிக
அலங்கரிக்கப் பட்டு தாங்குகின்றன. தென்னிந்தியாவிலேயே மிக அழகான அபிநய பாவங்களுடன் கூடிய சிற்பங்கள் இங்கே காணப் படுகின்றன.


சிவகாமசுந்தரியின் கோயில் தனியாகக் காணப்ப் படுகின்றது. தனி வாயிலும் உள்ளது . கற்களால் ஆன சங்கிலி இங்கே காணப் படுவதாயும் சொல்கின்றனர். அதை இன்னும் பார்க்கலை. என்றாலும் இவை எல்லாம் பிற்காலங்களில் விரிவு படுத்தப்பட்டவை என்றே சொல்லப் படுகின்றது. அது போலவே பாண்டியநாயகன் கோயிலும். சுப்ரமணியர் சந்நிதியோடு இருக்கும் இந்தக் கோயில் மிகவும் விரிவாக அலங்கரிக்கப் பட்டுள்ளது. கோயில்களின் கட்டிடக் கலையானது நிருத்த சபைக்கு அடுத்தபடியாக இங்கே அதன் உச்சத்தைக் காணலாம். இந்தக் கோயிலின் மத்திய மண்டபம் ஆனது விண்ணூர்தி போன்றதொரு அமைப்பில் சக்கரங்கள், யானைகள், குதிரைகள் துள்ளி விளையாடும் கோலத்தில் காணப் படுகின்றது. இது தவிர அநேக மண்டபங்கள் சிதம்பரம் கோயில் வளாகத்தினுள் காணப் படுகின்றன. அவற்றில் ஒற்றைத் தூண் மண்டபம் ஒன்று நூற்றுக் கால் மண்டபத்துக்கும் சிவகங்கைக் குளத்துக்கும் நடுவில் காணப் படுகின்றது. விநாயகருக்காக ஏற்படுத்தப் பட்டதாய்ச் சொல்லப் படும் இதை திருமூல விநாயக மண்டபம் என்று சொல்கின்றனர்.

கோயிலின் வெளியே மூன்று பக்க மூலைகளில் நான்கு தூண்கள் கொண்ட மண்டபங்கள் இருக்கின்றன. இவை கோயில் திருவிழாக் காலங்களில் பலி பீடங்களாய்ப் பயன்படுத்தப் படுகின்றது. கோயிலின் ஈசான திசையில் 16 தூண் மண்டபம் இருக்கின்றது. நூற்றுக் கால் மண்டபம் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு அடுத்துக் காணப் படுகின்றது. இதன் எதிரே கோயிலின் வெளிப் பிரகாரத்தில் இருக்கும் சிவகங்கைக் குளம் இருக்கின்றது. சோழப் படைத் தலைவன் ஆன நரலோகவீரனால் இது கட்டப் பட்டதாய்த் தெரிய வருகின்றது. கிழக்கு மேற்காக 160 அடி நீளமும் வடக்கு தெற்காக 100 அடி அகலமும் கொண்டு உள்ளது. அஸ்திவாரம்41/2 அடி உயரத்தில் யாளி முகப்புடனும் அமைந்துள்ளது. இது பிற்காலச் சோழர்காலத்தைச் சேர்ந்ததாய்ச் சொல்லப் படுகின்றது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book