33

மேலே நாம் காண்பது சித்சபையின் அற்புதத் தோற்றம். இதுவும் மூலஸ்தானத்துக்கு மேலே இருக்கும் கோபுர ம் என்ற அளவில் இருந்தாலும் இதன் தாத்பரியம் பற்றி நாம் முன்னாலேயே பார்த்து விட்டோம். படம் இப்போத் தான் போட முடிந்தது. இப்போ முக்குறுணி விநாயகருக்கு அடுத்து நாம் காணப் போவது பாண்டியன் “ஜடாவர்மன் சுந்தரனால்” திருப்பணி செய்யப் பட்ட மேலக் கோபுரம். இங்கே நாம் காண்பது கற்ப க விநாயகர் நடனமாடும் திருக்கோலத்தில். இவரை க்ஷேத்திர பால விநாயகர் எனவும் சொல்கின்றனர். இவர் இங்கே வந்ததுக்குச் சொல்லப் படும் காரணம் அல்லது புராணக் கதை என்னவென்றால்:

தில்லை நகருக்கு “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்னும் காரணப் பெயர் உண்டு. எப்போது வந்தாலும் அன்னபூரணியின் அருள் நிறைந்து உணவு கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது. அந்தப் பழமொழியைச் சோதனை செய்யவோ என்னமோ, ஒருமுறை துர்வாச முனிவர் நடு இரவில், தன் சிஷ்யர்களுடன் தில்லைச் சிற்றம்பலம் வந்தடைகிறார். வரும்போதே நல்ல பசி முனிவருக்கு. கோவிலின் அர்த்தஜாம பூஜையும் அப்போது தான் நடந்து முடிந்திருந்தது. ஆகவே துர்வாசரின் பசியைப் போக்க யாருமே முன்வராததால் கோபம் அடைகிறார் முனிவர். அப்போது அன்னை தானே முன் வந்து அவர் பசிப்பிணி தீர்க்க வரவும், துர்வாசர் நடராஜரின் ஆனந்தத் தாண்டவக் கோலத்தைக் கண்ணும் ஆசையைத் தெரிவிக்கிறார்.

ஆனால் தந்தைக்குப் பதில் அங்கே தனயன் தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடவே தன்னை மறந்து கோபமும், பசியும் தீர்ந்து சமாதானம் அடைகின்றார் துர்வாசர்.”

உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப் பட்ட “கற்பக கணேச பஞ்சரத்ன ஸ்தவம்” என்னும் ஸ்லோகத்தில் இதைப் பற்றியக் குறிப்பு இருப்பதாய்க் கூறுகிறார்கள். இந்தக் கோவிலில் இந்த மூர்த்தங்களைத் தவிர ஒரு நந்தியெம்பருமானும், வில்வ மரமும், மிகப் புராதனமானது என்று சொல்லப் படுகிறது உள்ளன. இந்திரன் வல்காலி என்னும் அசுர வதம் செய்யும் முன்னர் நந்தி ரூபத்தில் இந்த விநாயகரை வழிபாட்டுச் சென்றதாயும், இங்கே உள்ள வில்வ மரம் சிவனின் ரூபம் என்றும் சொல்கின்றனர்.

அடுத்துக் காண இருப்பது குமரகோட்டம் அல்லது பாலசுப்ரமணிய சன்னதி ஆகும். நவ வீரர்களுடனும் இங்கே சூர சம்ஹாரத்துக்கு முன் சுப்ரமணியர் இருந்ததாய்க் கூறுகின்றனர். மேலக் கோபுரச் சுவர்களுக்கு உள்பக்கமாய் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த ஆறுமுகன், தன் ஆறுமுகங்களோடும் காணப் படுவதோடு அல்லாமல், தன் இரு மனைவியருடனும் இருக்கிறான். சிங்கத்தின் மேலே அண்ணனான விநாயகர் காவல் செய்ய, அருணகிரிநாதர் தொழ அற்புதக் காட்சி அளிக்கிறான். கந்த சஷ்டியில் “சூர சம்ஹார”ப் பெருவிழா விமரிசையாக இங்கே நடக்கும். அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியும், காணப் படுகிறது. மாணிக்க வாசகர் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி அன்னையை மணந்த திருக்கோலத்திலே இங்கே சொக்கநாதர் வந்ததாய்ச் சொல்லப் படுகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book