21

*சிதம்பரம் கோவிலில் பத்து புனித தீர்த்தங்கள் இருப்பதாய்ச் சொல்லுகிறார்கள். அதிலே கனகசபைக்குக் கிழக்கே சன்னதியின் மத்தியில் அமைந்துள்ள கிணறு ஒன்றைப் “பிரம்மானந்த கூபம்” என்று சொல்கின்றனர். (நான் வெறும் கிணறு என்ற வடிவிலே மட்டும் பார்த்துள்ளேன். அப்புறம்தான் அது ஒரு தீர்த்தக் கிணறு எனத் தெரிய வந்தது.) சிவசக்தி ஸ்வரூபமாகக் கருதப் படும் இது மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தம் எனச் சொல்லப் படுகிறது. துலா மாதம் (ஐப்பசி) பஞ்சமி திதியில் கங்கை இந்தக் கிணற்றில் பொங்கிவருவதாயும் ஐதீகம். கங்கை மட்டுமில்லாமல் மற்றப் புண்ணிய நதிகளும் இங்கே வந்து சேர்வதாயும் ஐதீகம். தை அமாவாசையில் வரும் தீர்த்தவாரித் திருவிழாவின் போது நடராஜருக்கு இந்தப் பத்து தீர்த்தங்களில் இருந்தும் புனிதநீர் எடுத்து அபிஷேகம் செய்யப் படுகிறது. சிவனின் விருப்பத்தின் பேரில் கங்கை இங்கே ஆவிர்ப்பவித்தாள் எனவும் சொல்லப் படுகிறது.

இவற்றைத் தவிர “சண்டேஸ்வர” மூர்த்தியின் சன்னதியும் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டேசரைத் தரிசனம் செய்தால்தான் சிவ தரிசனம் பூர்த்தி அடையும் என்று சொல்லப் படுவதுண்டு. கடவுளுக்கும், பக்தனுக்கும் நடுவே ஒரு தபால்காரர் போல் இவர் செயல்பட்டு நம் கோரிக்கைகளையும், விண்ணப்பங்களையும் கடவுளிடம் சேர்ப்பிக்கிறார் என்றும் சொல்வார்கள். கனகசபைக்குக் கிழக்கே பிரம்மானந்த கூபத்துக்கு அருகே இரு சண்டேஸ்வர மூர்த்திகளைப் பார்க்கலாம். ஒருவருக்கு ஒரு முகமும், மற்றவருக்கு 4 முகமும் உள்ளது. சதுர்முகச் சண்டேசர் பிரம்மா சண்டேசர் எனச் சொல்லப் படுகிறார். பிரம்மாவே சண்டேசராக அனுக்கிரகம் பெற்று இங்கே “சண்டேஸ்வர அனுக்ரக மூர்த்தி”யாகத் தரிசனம் கொடுக்கிறதாய்ச் சொல்கிறார்கள். பொதுவாய்ச் சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து திரும்பும் சமயம் சண்டேஸ்வரர் சன்னதிக்குப் போய் இரு கைகளையும் தட்டிக் காட்டி நான் ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை எனக் கூறிவிட்டுப் போவது வழக்கம். ஆனால் இந்தக் கோவிலில் சிவன் கோவிலாக இருந்தாலும் பிரசாதங்கள் எடுத்துச் செல்லலாம் எனச் சொல்லப் படுகிறது. கோவில் வழிபாடு வைதீக முறையில் நடைபெறுவதாலும் இங்கே பிரம்மாவே சண்டேசர் பதவி பெற்று அமர்ந்திருப்பதாலும் இவ்வாறு செய்யலாம் எனவும் சொல்கிறார்கள். அடுத்து இங்கே பெருமாளும் கோயில் கொண்டிருக்கிறார், அல்லவா? அவர் எவ்வாறு வந்தார் எனப் பார்ப்போம்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book