44

மஹாவிஷ்ணு ஒரு சமயம் ஈசனையும் அன்னையையும் தனக்குப் பிள்ளை வரம் வேண்டிப் பிரார்த்தித்தார். அவருக்கு வரம் அளிக்க இறைவன், அன்னையுடன் நேரிலே வந்தார். இறைவனும் விஷ்ணுவுக்கு வரம் அளித்தார். அப்போது அவர் அன்னையுடனும், ஸ்கந்தனுடனும், சோமாஸ்கந்தனாக வந்திருந்த கோலம் விஷ்ணுவின் மனதை மிகவும் கவர்ந்தது. இந்தக் கோலத்திலேயே தான் பூஜிக்க ஒரு சிற்பம் வேண்ட இறைவனும் அருளினார். அந்த மூர்த்தம் தான் இந்தத் தியாகராஜா இவர் தான் சப்த விடங்கர்களில் முதல்வர். முதல் முதல் விஷ்ணுவிடம் இருந்தவர். இவரின் இந்தக் கோலத்தை மனதிலேயே நினைத்து, நினைத்து, விஷ்ணு, அந்தக் கோலத்துக்கு ஏற்றத் தாளத்தை மனதிலேயே கொண்டு வந்து திரும்பத் திரும்ப நினைக்க இறைவனின் நாட்டியக் கோலம் தென்பட்டது, அவருக்கு. மனதிலே தாளத்தைச் சொல்லிக் கொண்டதாலும் இறைவனின் அந்தத் தோற்றம் தவளையை நினைவுறுத்துவதாயும் இருந்தமையால் இந்தத் தாளத்துடன் கூடிய வடிவுக்கு “அஜபா நடனம்” என்ற பெயர் ஏற்பட்டதாய்த் திருவாரூர்த் தல புராணம் சொல்லுகிறது. சமீபத்தில் கடலூர் மருத்துவர் திரு தி.வாசுதேவன் அவர்கள் அஜபா மந்திரம் என்பதற்கு வேறு வகையில் விளக்கம் அளித்தார். அதாவது மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே வர வர, நாளாவட்டத்தில் அது மனதுக்குள் ஓட ஆரம்பிக்கும். அப்போது வெளிநாட்டத்தை நிறுத்தி நாம் உள்ளே பார்க்க மந்திரம் ஓடுவது தெரியவரும். இது தான் அஜபா ஜபம் என்பது அவர் கொடுத்த விளக்கம்.

பின்னர் அந்த விக்ரஹம் ராஜா முசுகுந்தனுக்கு விஷ்ணு அளித்ததாகவும், அதை இந்திரன் கவர்ந்து கொண்டு சென்றதாயும் இந்திர லோகம் சென்று முசுகுந்தன் விக்ரஹத்தைத் திரும்பக் கேட்கும்போது, ஒரே மாதிரியான 7 வடிவங்களை இந்திரன் காட்டி இவற்றில் உன்னுடையது எதுவெனத் தெரிந்து நீயே எடுத்துக் கொள் என்றதாயும், இறை அருளால் உண்மையான சிலா வடிவை முசுகுந்தன் கண்டறிந்ததாயும் கூறுகின்றனர். அவனுடைய இறை பக்தியை மெச்சியே இந்திரன் 7 விடங்கர்களையும் அளித்ததாயும் அவையே முன் பதிவுகளில் வந்த கோவில்களில் நிறுவப் பட்டதாயும் கூறுகின்றனர்.
சிதம்பரத்தில் நடராஜா விழித்துக் கொண்டு இடைவிடாது ஆடிக் கொண்டே இருக்கிறார். ஸ்ரீரங்கத்திலோ மாறாக ரங்கராஜா நீள நெடுகப் படுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டே இருக்கிறார். என்றாலும் இருவரின் தொழிலும் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் கோயிலைப் பல சிவனடியார்களும், வைணவ அடியார்களும் வணங்கி வந்தாலும் குறிப்பிடத் தக்கவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி, வியாக்ரபாதரின் மகன் உபமன்யு, ஜைமினி ரிஷி, பிருங்கி ரிஷி, இந்திரன், வருணன், போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். சரித்திர பூர்வமாய்ப் பார்த்தோமானால், மன்னன் ஹிரண்ய வர்மன் காலத்தில் இருந்து திருநீல கண்டர், திருமூலர், மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், நந்தனார், போன்ற நாயன்மார்களும், பின்னர் வந்த நாட்களில் உமாபதி சிவாச்சாரியார், அப்பைய தீட்சிதர், ராமலிங்க ஸ்வாமிகள், போன்ற சிவனடியார்களும் குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களும் குறிப்பிடத் தக்கவர்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book