55

இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே, இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே “திரு” என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய “திரு”வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு உரிய “திரு”வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை “ஆதிரையான்” என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும், சோதிடத்திலும் பேசப் படும் 6-வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை “ஓரியன் குழு”வில் சொல்லப் படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப் படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும். வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே காணப்படும்.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும், மார்கழியில் வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆடவல்லான், தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க் கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான திருவிழா, மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப் பட்டதைப் பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85
ஆதிரை நன்னாள் மட்டுமின்றி “அம்பா ஆடல்” என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக் கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர், சிவகாமி, பிள்ளையார், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே ஈசன், அம்பிகை, கணபதி, சுப்ரமணியர், சண்டேஸ்வரர் என்றே சொல்லப் படுகின்றது. மிக்க ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை “ஆடவல்லான்” என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்றுகாலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப் பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவிலிருந்து அதிகாலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும் காட்சியே “ஆருத்ரா தரிசனம்” என்று சொல்லப் படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில் ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலக் கணக்கின்படி டிசம்பர் 15-தேதிக்குப் பின்னர் ஜனவரி 15 தேதிக்குள் வரும் ஒரு நாள் தான் திருவாதிரை நாள் ஆகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது. அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள் ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர்.
இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும்,சேந்தனார் அளித்த களிக்காகவே அன்று களி நைவேத்தியம் செய்யப் படுவது பற்றியும் அடுத்துப் பார்ப்போம். மேலே காணப்படும் “ககன கந்தர்வ கனக விமானம்” படம் கொடுத்து உதவிய திரு கைலாஷி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும், இது உலகளவிலும் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் இங்கே காணலாம்.

தேவாரம் சிதம்பரம் கோயிலில் ஒவ்வொரு காலபூஜையின் போதும் தமிழில் கோயிலின் குறிப்பிட்ட ஓதுவார்களால் பாடப் படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் தீட்சிதர்களே, நன்கு தேவாரப் பாடல்களை இசையுடன் பாடுவார்கள். பிரச்னை என்னவென்றால் நடராஜரின் பொன்னம்பலத்துக்கு அருகே உள்ள மேடை போன்ற “கனகசபை”யில் போய்ப் பாடவேண்டும் எனச் சிலர் கோரிக்கை. ஆனால் அந்த இடத்திலும் வழிபாடுகள் நடைபெறுவதாலும், குஞ்சிதபாதம் அபிஷேகங்கள் அங்கே தான் நடக்கும், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அபிஷேகம், வழிபாடு நடக்கும், என்பதால் ஓதுவார்கள் கூடக் கீழே நின்றுதான் பாடுவார்கள், ஆகவே அங்கேயே நின்று பாடுங்கள் என்பது தான் தீட்சிதர்கள் தரப்பில் சொல்லப் படுகிறது, திரும்பத் திரும்ப. ஆனால் தமிழில் பாடுவதையே தீட்சிதர்கள் அனுமதிக்காதது போல் ஒரு தோற்றம் மீண்டும், மீண்டும் உருவாக்கப் படுவது வருத்தத்துக்கு உரியது. பல வருடங்கள் சிதம்பரம் கோயில் சென்று வருகிற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், அங்கு தேவாரம் பாட எந்தத் தடையும் இல்லை என்று.

நம் தமிழ்நாட்டு அசெம்பிளியிலும் சரி, லோக்சபா, ராஜ்யசபாவிலும் சரி, சபாநாயகருக்கு என்று ஒரு தனி மரியாதை கொடுப்பதோடு அல்லாமல், சபாநாயகர் இருக்கையில் பிரதம மந்திரி கூடவோ, அல்லது அசெம்பிளியில் முதல் மந்திரியோ கூட அமருவது மரபை மீறியது என்பதை அனைவரும் அறிந்திருக்கலாம் , யாருடைய வழிகாட்டுதலில் “சிதம்பர ரகசியம்” தொடரை எழுதுகிறேனோ, அந்த ராமலிங்க தீட்சிதர் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவரும் இதையே உறுதி செய்தார்.

//சிதம்பரம் கோயிலில் ஆறு கால (வேளை) பூஜைகள் நடக்கும். அதில் மாலை ஆறு மணிவாக்கில் ஆதிசங்கரர் தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் நடக்கும் பூஜையை பல முறை அனைவரும் கண்டிருக்கலாம். அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த பூஜை நடக்கும்.. மைல் கணக்கில் கேட்கும் பெரிய இரு காண்டா மணிகள் ‘டாண் டாண்’ என்று விடாமல் ஒலிக்க, வரிசையாக கட்டப்பட்டிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட சிறு மணிகள் ‘கிலுகிலு’ என்று விடாது சப்தமெழுப்ப, இந்த சத்தத்தில் சித்சபையில் நம் காதில் கூட விழாத வேத முழக்கத்தின் இடையில் பூஜை நடக்கும்… திடீரென அனைத்து மணிகளும் வேதங்களும் நின்றுவிடும்… அந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஓதுவார் என்பவர் கணீரென்ற குரலில் தமிழ் பதிகங்கள் பாடுவார்… பிறகு மீண்டும் மணிச்சத்தம் பலமாக ஒலிக்க பூஜை நடக்கும். பிறகு மீண்டும் அனைத்தும் நின்று அமைதியை கிழித்துக்கொண்டு கணீரென தமிழ் பதிகங்கள்… இந்த பதிகங்கள் சத்தியமாக தமிழ்தான்… தேவாரமோ, திருவாசகமோ, சிவபுராணமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கும்!… ஆனால் தமிழ் !

மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் தங்கியிருந்துதான் திருவாசகத்தை எழுதினார். மேலும் நடராஜர் கேட்டுக்கொண்டபடி திருக்கோவையார் பதிகங்களையும் இயற்றினார். நடராஜரே இந்த பதிகங்களை எழுதி அதை கோயில் குளத்தில் வைத்துவிட்டார் என்பது புராணம். குளத்தில் பதிகங்களை கண்ட கூட்டம், மாணிக்கவாசகரை அணுகி அதன் அர்த்தம் என்னவென கேட்க அவர் கூட்டத்தை கோவிலுக்கு அழைத்து சென்று நடராஜரைக் காண்பித்து அந்த பதிகங்களுக்கு அர்த்தம் சிவபெருமானே என்று சொல்லி கோவில் குளத்தில் நடந்து சென்று மறைந்துவிட்டார் என்று சொல்வார்கள். மாணிக்கவாசகருக்கும் தில்லைக்கும் உள்ள நெருக்கம் காரணமாக தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும் மாணிக்கவாசகர் சிலை கனகசபையில் முன்பு கொண்டுவரப்பட்டு அனைத்து பக்தர்களும் ஓதுவாருடன் சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை சத்தமாக பாடுவார்கள்… திருவெம்பாவை தமிழ்தான்… தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்… இது சிதம்பர ரகசியம் அல்ல… வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு… தேர் தரிசனக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட எல்லாருக்கும் இது தெரியும்
மேற்கண்டவை “முகமூடி” என்பவர் ஒரு வருஷத்துக்கு முன்னர் எழுதிய பதிவில் இருந்து எடுக்கப் பட்டது. திரு வெங்கட்ராம் திவாகரும் தேவாரங்கள் பாடப்படுவதாயே கூறி இருக்கிறார். அவரின் அனுமதி கிடைத்தால் அவர் பதிவும் இங்கே போடுவேன். விவாதத்துக்கு அல்ல.

திவாகர் சொல்லுவது!

அருளே வடிவான ஆனந்தக் கூத்தனே!
ஏன் இந்தக் கூத்து?
நான் உன்னைக் காண எப்போது சபையேறி வந்தாலும் பாடுவது திருவாசகமும் தேவாரமும்தானே! உன் ஒளிமிகுந்த முகம் பார்த்து நான் மெல்லமாய் உதடசைத்து பாடும்போதெல்லாம் எனக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி.. அதை நீ கேட்கும்போது உன் கருணை முகத்தில் எனக்கு மட்டுமே தெரியும் உற்சாகம், ‘வாதவூரான் சொல்ல சிற்றம்பலத்தான் எழுதியது’ என்று உன்னால் அம்பல மேடையிலேயே ஆசிர்வதிக்கப்பட்ட தமிழ்ச் செல்வங்களை மனதுக்கினிய பக்தர்களால் பாடப்படும்போது உனக்கு ஏற்படும் உற்சாகத்தை அந்த பக்தர்களுக்கு எப்படியோ உணர்த்திவிடுவாய்..ஒவ்வொரு கால பூசைக்கும் தேவாரத்தைக் கணீரெனப் பாடும்போது ஏற்படும் பக்தி பரவசம் அனவரையும் அள்ளிக்கொள்ளும்படி செய்வதிலும் நீ வல்லவன்தான்! நிற்க! (நீதான் எப்போதுமே கால்கடுக்க, அதுவும் ஒரு காலில் முயலகன் மீது நிற்கிறாயே.. நான் ‘நிற்க’ என்று எழுதியது பழைமையான கடிதம் எழுதும் வழக்குமுறையில்…)

பழைமை என்றதும் நினைவுக்கு வருகிறது. வேதம் பழைமையானதுதானே.. வேத மொழி எனக்கு வேறுபட்டாலும் பழைமையான வேதத்தில் உள்ள பெருமையும், அதன் பொருளும், அதன் உள்ளார்ந்த கருத்துகளும் மிக உயர்ந்தவை என்றே எடுத்துக்கொள்கிறேன். அப்படித்தான் எங்கள் முன்னோர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிவாசகர், நம்மாழ்வார், மற்றும் பெரியோர்கள் பலரும் சொல்லிச் சென்றார்கள். தேவாரம் முழுதுமே வேதத்தின் சாரம் என்று சைவர்களும், நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ் வேதம் என்றும் பலர் எழுதியுள்ளார்கள். எழுதியும் வருகிறார்கள். ஆகையினால் பழைமை போற்றப்படவேண்டும் என்பது கூட அவர்கள் வாய்மூலம் நீ சொல்வது போலத்தான். ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

அம்பலத்துள்ளே நின்று உலகையே ஆட்டிப் படைப்பவனே! ஒரு கேள்வி!

என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வேதபாஷை புரிவதில்லை என்றுதானே முனிவர்கள் மூலம் தெய்வத் தமிழையும் எங்களுக்குப் பரிசாக அளித்தாய்… முத்தமிழின் முதல்சங்கத்தின் முதல்வனாய் இருந்து ‘இறையனார்’ என்று பெயர் கொண்டு முதற்கவிதை படித்தவனும் நீதானே..தமிழுக்கு சொல் கொடுத்தவனே.. ஏன் இந்தக் கூத்து? இன்றைய கூத்து?

யோசிக்க வைக்கிறாய்.. புரிகின்றது கொஞ்சம். ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என நம்பிகளை வைத்து பாடவைத்தது நீதான்!. உமாபதி சிவம் தன் ஆச்சாரியனைப் பின் பற்றி நட்ட நடுப் பகலில் கோயிலை விட்டு ஓடியபோது அவருக்குப் பக்கபலம் போல அவர்கூடவே ஓடிப்போய், அதே தில்லைவாழ் அந்தணர்தம் பூசையையும் மறுத்தவன்தான் நீ! உமாபதி சிவனார் பூசித்த சின்ன ஆனந்த நடராசனுக்குத்தான் முதல் மரியாதை என்று கோயில் கொடிக்கம்பம் மூலம் அந்தணர்களுக்குப் புரியவைத்தவனும் நீதான்!.

ராசராசசோழன் மூவர் பதிகங்களைக் கேட்டபோது, அந்த மூவர் வந்தால் மட்டுமே பெறக்கூடியது அவை என்ற அந்தணர்களுக்குப் புரியும் விதத்தில் அந்த அரசன் மூலம் மூவர் விக்கிரகங்களை செய்வித்து, பிராணாதிஷ்டையும் செய்வித்து, அவர்களையும் தெய்வமாக்கியதோடு, தமிழ்ச் செல்வங்களையும் கொடுத்து அருளினாய்! பின்னால் அச்சுதராயன் காலத்தில் சில அந்தணர்கள் கோயில் கோபுரம் ஏறி உயிர்த்தியாகம் செய்தபோது, காக்க வேண்டிய நீயோ அலட்சியம் செய்தாய்.. ‘பிடிவாதம் பிடிப்போர்க்கு தெய்வம் துணை போகாது’ என்று நீ சொல்வது போலத்தான் பட்டது.

ஆனால் அதே சமயத்தில் அந்த பழைமை மாறாத அந்தணர் குடும்பங்களை இதுநாள் வரை (ஏன், இனியும்!) ஆதரித்து, அரவணைத்து அவர்களின் ஒழுங்கான, இதுவரை தவறாத, ஆறுகால பூசையையும் ஏற்று வருகின்றாய். அவர்களின் அன்புக்கு என்றென்றும் கட்டுப்படுவது போல நடந்து வருகின்றாய்..

மேலும் யோசித்தேன்! அந்தணர்கள் உன் மீது கொண்ட அன்பு அலாதியானது. தன் வீட்டுச் செல்லக் குழந்தையாக, வாராது வந்த மாமணி போல, அவர்கள் உன்னை பாவிக்கிறார்கள். தன் அன்புக் குழந்தையை ஊட்டி வளர்ப்பது போல உன்னைப் பேணி பாதுகாக்கிறார்கள். பழைமையும் தொன்மையுமான வடமொழியில் பூசிப்பது உனக்கு பிடிக்கிறதா என்பதை விட அன்பாக அவர்கள் உன்னை ஆராதிப்பது உனக்கு மிகவும் பிடிக்கிறதாக எனக்குப் படுகிறது. கண்ணனுக்கு கோபியர்கள் போல உனக்கு தில்லைவாழ் அந்தணர்கள் போலும்.. அவர்கள் உரிமை எடுப்பது நியாயம் எனக் கூட உணர்த்தத் தயங்கமாட்டாயோ என்னவோ.. அவர்கள் பூசிக்கும் வேத மொழி கூட நீ தந்ததுதானே..’தென்னாடுடைய சிவனே , எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று வாதவூரார் சொல்ல நீ எழுத, அவர் கையாலேயே தமிழும் வடமொழியுமானாய் என்று கூட எழுத வைத்தவனும் நீதான்.

சரி.. போகட்டும்! எதற்காக இதையெல்லாம் நினைவுபடுத்துகிறாய்? நீ எதைக் கேட்கவேண்டுமோ அதைக் கேட்டுவிட்டுப் போயேன்.. என்று நீ சொல்வது போல படுவதால், என் சிந்தையில் உன் மூலம் வந்த கோரிக்கையை உன்னிடமே கேட்டுவிடுகிறேன்.

எனக்கு, எனக்கென்றில்லை, எல்லோருக்கும் உன் அருள் வேண்டும்..
உன் புகழை உனக்கும் எனக்கும் புரியும் விதத்தில் உன் எதிரே பாடும் அருள் வேண்டும்
உன் திருக்கோயிலின் பழைமையான புனிதம் என்றுமே காக்கப்பட வேண்டும்
உன் பக்தர்களிடத்தே, அவர்கள் அந்தணர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் போக்கினை எதிர்ப்பவர்களாக இருந்தாலும் சரி, ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் வேண்டும்
பழமை பாதுகாக்கப்படவேண்டும்
செந்தமிழ் சிறந்து ஓங்க வேண்டும்
உனக்குப் பிடித்த ‘சிவபோகசாகரம்’ பாடலிலிருந்து ஒரு வெண்பா பாடல்

‘ஈசன் பலகீனன் என்றக்கால் ஆலயத்தில்
மோசம் வந்ததென்று மொழியலாம் – ஈசனே
ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவும் தானானால்
நோக்குவெதென் யாம்பிறரை நொந்து’
ஆக்கி அழித்து அருளும் ஆண்டவனே.. இப்போது அரங்கேறும் கூத்துக்கும் விடை வேண்டும். அதுவும் அனைவருக்கும் பயனுற வேண்டும்!!!

உன் பக்தன்
திவாகர்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book