5

பதஞ்சலியும், வியாக்ரமபாதரும் செய்த இடைவிடாத தவத்தினால் மனம் மகிழ்ந்தார் ஈசன். ஈசனுக்கு அவர்களுக்கு அருளப் பிரசன்னம் ஆனபோது அவர்கள் இறைவனின் ஆனந்தக் கூத்தைப் பார்த்து அனுபவிக்க வேண்டும் என இறைஞ்சவே அந்த ஆதிசிவனும் மனம் இரங்கினார். ஆடத் தயார் ஆனார். ஆனால் இந்தக் காட்டிலா ஆடுவது? ஆட ஒரு மண்டபம் வேண்டுமே? குறைந்த பட்சமாய் ஒரு மேடையாவது இருக்கணுமே? என்ன செய்வது என யோசித்தார்.அங்கே கோயில் கொண்டிருக்கும் காளியின் நினைவு வந்தது. அவள் வேலை என்னமோ முடிந்து விட்டது. ஆனாலும் இங்கே கோயில் கொண்டு மற்றவர்களைத் த்டுத்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் கோபம் தீரவில்லையோ. என்ன செய்யலாம். ஆடவேண்டுமாமே முனிவர்களுக்கு! “ம்ம்ம்ம்ம் இதோ ஒரு வழி! நிருத்த சபை இல்லாமல் என்னால் ஆட முடியாதே”

என முனிவர்களிடம் சொல்லும் அந்த மூலப் பரம்பொருளின் முகத்தில் கள்ளப்புன்னகை. முனிவர்கள் இருவரும் தில்லை வனத்தில் வந்து அங்கே கோயில் கொண்டிருக்கும் காளியின் இடத்தில் ஆடுமாறு வேண்ட இறைவனும் வருகிறார். அப்போது ஒரு ஹூங்காரம்.

ஹூம், என்று கேட்கிறது.

யாரது? என்கிறார் இறைவன்.

அன்னை மகாகாளி தன் வேலைகள் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்த களைப்பில் அங்கே குடி கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள் போலும். அவள் தன்னிலை மறந்து, தான் யார் என்பதை மறந்து ஈசனைத் தடுத்தாள்.

“யாரது அங்கே, இது என்னுடைய இடம். உள்ளே நுழையாதே!” என்கிறாள்.

சொல்வது யாரை என்று அவளுக்குத் தெரியாதா என்ன? கேட்டவருக்குத் தெரியாதா என்ன? அவர் நோக்கமே தனியாய் காளி உருவில் இருக்கும் அன்னையை மாற்றித் தன்னுடன் கோவில் கொள்ளச் செய்ய வேண்டும் என்பது தானே. பிரிவாற்றாமை தாங்கவில்லை போல் இருக்கிறது. ஒரு உடலில் குடி இருந்தவர்கள் தனித்தனியாய்ப் பிரிந்ததும் உலக நன்மைக்கே. இப்போது ஆடப் போவதும் உலக நன்மைக்கே. ஆனால் அதையே ஒரு நாட்டிய நாடகமாக்கிக் காட்டுகிறார்கள் இருவரும். ஏன் அதுவும் நமக்குப் பாடம் புகட்டத் தான்.

காளி தடுத்ததும் இறைவன் என்ன செய்வது என்பது புரியாது போல் நடிக்க, காளி கேட்கிறாள்:”ஏன் வந்தீர் இங்கே?” என.

புன்முறுவல் பூத்த ஐயன சொல்கிறார்: ” ஆடவும், ஆட்டுவிக்கவும் தான்.”

ஆவ்வளவு தான். என்னைப் போல் கோபக் காரியான அந்தக் காளிக்குக் கேட்கவா வேண்டும்? கோபத்தில் குதிக்கிறாள். “என்ன ஆட்டுவிப்பீரா நீர்? எங்கே என்னை ஆட்டுவியும், பார்க்கலாம். அல்லது என்னுடன் இணைந்து ஆடவாவது முடியுமா உம்மால்?”

இறைவனுக்கு வேண்டியதும் இது தானே. “அதற்கு என்ன? இருவரும் இணைந்து ஆடலாம். போட்டி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.” என்று சிரிக்கவேக் காளி கூத்தாடுகிறாள்.

“என்னுடன் போட்டியா? எங்கே பார்க்கலாம்.” அவ்வளவு தான்.

ரிஷி, முனிவர்கள் பார்த்திருக்கப் போட்டி ஆரம்பிக்கிறது. நடுவர்கள் அந்த முனிவர்களும், தேவர்களும் தான். இருவரும் ஆட வேண்டியது. யார் ஆடுவதை யாரால் திருப்பி ஆட முடியவில்லையோ அவர்கள் தோற்றதாய் வச்சுக்க வேண்டியது. இதான் பந்தயம். அந்த உலகையே ஆட்டுவிக்கும் இருவரும் ஆடுகிறார்கள். நடந்தது என்ன?

“வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்

வெளியிலிரத்தக் களியொடு பூதம் பாடப்- பாட்டின

அ்டிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடடக்-களித்

தாடுங்காளீ! சாமுண்டீகங்காளீ!

அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை

நாடச் செய்தாய் என்னை!”

“மூலப் பரம்பொருளின் நாட்டம்ிந்த

மூன்று புவியும் தன் ஆட்டம்:

காலப் பெருங்கள்த்தின் மீதே-எங்கள்

காளி நடமுலகக் கூட்டம்.”

இரண்டு பேரும் ஆடுகிறார்கள். ஆடட்டும். நாளைக்குப் பார்ப்போம் ஆட்டத்தின் முடிவை. இப்போது ஒரு விஷயம். ஆதியில் தில்லையில் இந்த முனிவர்கள் பூஜித்த மூலநாத லிங்கத் திருமேனிக்கான கோயிலும், காளி குடி கொண்டிருந்த கோயிலும் தான் நடராஜர் வரும் முன் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இந்தக் காளி இருந்த இடம் தான் தற்சமயம் “நிருத்த சபை” என அழைக்கப் படுகிறது. ஒரு காலத்தில் காளிக்குச் சொந்தமாய் இருந்த இந்த இடம் தற்சமயம் கோவிலினுள் உள்ளது. அதற்குப் பின்னால் வருவோம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book