41

காளிகா தாண்டவம்: இரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப் பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. திருவாலங்காட்டில் “ரத்தின சபை”யில் ஆடும் ஆட்டம் “காளிகா தாண்டவம்” எனச் சொல்லப் படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப் படுகிறது.

திரிபுர தாண்டவம்: முப்புரங்களையும் தன்னுடைய “அட்டஹாசம்” எனப்படும் சிரிப்பாலும் நெற்றிக்கண்ணாலும் அழித்த இறைவன் ஆடிய ஆட்டமே திரிபுர தாண்டவம் எனப்படுகிறது. 16 கைகளுடன் காணப் படும் இறைவனின் இடப்பக்கம் கெளரியும், வலப்பக்கம் ஸ்கந்தனும் காணப்படுகிறார்கள். திருக்குற்றாலத்துச் சித்திர சபையில் காணப்படுகிறது இந்தத் திரிபுர தாண்டவக்கோலம்.

சம்ஹார தாண்டவம்: எட்டுக் கைகளுடனும், மூன்று கண்களுடனும் காணப் படும் இறைவனின் ஊழிக் கூத்தாக வர்ணிக்கப் படும் இது இறைவன் தனக்குள் இந்தப் பிரபஞ்சத்தை அடக்கும் வேளையில் ஆடப் படும் கூத்தாகச் சொல்லப் படுகிறது. அபஸ்மார புருஷனை அடக்கும் இடக்காலுடனும், வலக்கால் தூக்கிய நிலையிலும், வலக்கைகள் அபய ஹஸ்தத்துடனும், மேலும் சூலம், உடுக்கை,போன்றவற்றுடனும், இடக்கைகளில் மண்டை ஓடு, அக்கினியுடனும் கஜஹஸ்த முத்திரையுடனும் காணப் படுகிறது. வலப்பக்கம் நந்தியும், இடப்பக்கம் கெளரியும் காணப் படுகின்றனர். பிரளய காலத்தில் ஏற்படும் இந்த ஊழிக் கூத்தில் இறைவன் தன்னில் தானே அமிழ்ந்து போய், சகலமும் தானே என்பதை உணர்த்தும் வண்ணம் ஆடுவதாயும், இதுவும் ஒரு வகையான ஆனந்தத் தாண்டவம் தான் என்றும் சொல்லப் படுகிறது.

கெளரி தாண்டவம்: தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தையும், ரிஷிபத்தினிகளின் ஆணவத்தையும் அடக்க பிட்சாடனராய் வந்த இறைவன், தன்னுடன் விஷ்ணுவையும் மோகினி உருவில் அழைத்து வருகிறார். ரிஷி, முனிவர்களின் கர்வம் அடக்கப் படுகிறது. அப்போது இறைவன் மோகினியான திருமாலுடன் ஆடிய ஆட்டமே முதல் ஆட்டம் எனச் சொல்லப் படுகிறது. நாராயணனும், தான் தான், நாராயணியாக இருப்பவளும் தான் தான் என இறைவிக்குப் புரியாதா? உமையொரு பாகத்து இறைவனின் நடனத்தைத் தான் மட்டும் கண்டு களிக்க ஆசைப் பட்டாள் இறைவி, அவளின் ஆசையை நிறைவேற்ற இறைவன் ஆடியது தான் கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது. சைவ ஆகமங்கள் படி இறைவனின் பிரம்மோற்சவத்துடன் இணைத்துச் சொல்லப் படுகிறது இந்தத் தாண்டவம். இதில் நந்தி இறைவனின் வலப் பக்கமும், இடது பக்கம் கெளரியான அம்பிகையும் காணப் படுகிறார்கள். ஆனந்தத் தாண்டவத்தில் இல்லாதபடிக்கு இதில் இறைவனின் இடப்பக்கத்துக் கைகள் ஒன்றில் பாம்பு காணப் படுகிறது.

ஆண்மயில் வடிவில் இறைவன் உறைந்த இடம் மயிலாடுதுறை. இறைவனை அடைய பெண்மயில் உருவில் ஸ்ரீதேவி, சரஸ்வதி துணை புரிய அம்பிகை தவம் செய்த இடம் மயிலாடுதுறை. இறைவியின் தவத்தை மெச்சி அவளை அடைந்த இறைவன், அவளை மகிழ்விக்க ஆடிய ஆட்டமே “கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது என்றும் கூறுகிறார்கள். இந்தக் கோயிலின் இந்தச் சபையை “ஆதி சபை” என அழைக்கிறார்கள்.

சிலர் கஜஹஸ்தம் என்றால் என்ன என நினைக்கலாம். நாட்டிய சாஸ்திரம் எனக்குத் தெரியாது என்றாலும், ஆடலரசனின் இடது கையானது, யானையின் துதிக்கையைப் போல் தோன்றும்படி அபிநயிப்பது தான் “கஜஹஸ்த முத்திரை” என்ற வரைக்கும் தெரியும். சிலருக்கு காளியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை என்று தோற்றுப் போனாள் என்பதை ஏற்க முடியவில்லை. என்ன தான் பெண்ணாக இருந்தாலும் காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்து ஆட முடியாது அல்லவா? மேலும் இதில் ஆணாதிக்கம் என்பதெல்லாம் கிடையாது. இறைவன் அவளை ஆட வேண்டாம் எனவும் சொல்லவில்லை. உன்னால் முடியுமா என்பது தான் கேள்வி! முடியும் என்றாலும் பெண்களுக்கு என ஒரு எல்லைக் கோடு உண்டு என்பதை அன்னை தானாகவே வகுத்துக் கொண்டாள். பண்பு என்பது எல்லைக் கோட்டைத் தாண்டாது என்பதையும் உணர்த்தினாள். இதில் வெற்றி, தோல்வி என்பதை விட பெண்ணின் பெருமையும், அவள் தன்னிலையை ஒருக்காலும் மறக்கக் கூடாது என்பதுமே உணர்த்தப் படுகிறது. சக்தியானவள் ஆக்கும் சக்தியாக வெளிப்படுவதே அன்றி, தன்னையும் தன்னிலையையும் மறந்து அழிக்கும் சக்தியாக மாறக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துவதாய் என் கருத்து. படங்கள் கிடைத்த வரை போட்டிருக்கேன். ஊர்த்துவத் தாண்டவப் படம் கிடைக்கவே இல்லை. திரிபுர தாண்டவத்துக்கு திருக்குற்றாலம் என்று தேடினாலும் கிடைக்கவில்லை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book