52


தில்லைக் கூத்தன் ஆனந்த நடனம் ஆடிய இடம் தில்லையம்பதி என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆகாசத்திலே பரந்து விரிந்த வெளியிலே, அவன் நடனம் தான் நித்தம், நித்தம் நடைபெற்று வருகிறது. இத்தகைய நடனத்தைத் தில்லையிலே ஆடும்போது இறைவன் அப்படியே தன் அம்சத்தோடும், தன் இறைசக்தியோடும் உறைந்த இடம் தான் தில்லைச் சிற்றம்பலம். தானே, அங்கு தன் முழு சக்தியோடு உறைந்த இடத்திலே கோயில் கொள்ள நினைத்த இறைவன், தனக்குத் தானே அங்கே கோயில் கட்டிக் கொண்டதாயும் சொல்லுவார்கள். இப்படி முதலில் இறை சக்தி இருந்து, பின்னர் மூலஸ்தான விமானம் கட்டிப் பின்னர் பிராகாரங்கள், பரிவார தேவதை சன்னதிகள், வெளிப்பிரகாரம், சுற்று மண்டபங்கள், ராஜ கோபுரம் என்று கோயில் கட்டுவது ஒரு மரபு. இம்முறையில் அமைக்கப் பட்ட கோயில்கள் “மகுடாகமம்” என்னும் முறையில் வந்ததாய்ச் சொல்கின்றனர்.

முதலில் கோயிலுக்குத் தேவையான அனைத்து அமைப்புக்களையும், கட்டுமானங்களையும் கட்டி முடித்துவிட்டுப் பின்னர் விக்ரஹப் பிரதிஷ்டை செய்து, அதில் இறை சக்தியை ஆவாஹனம் செய்து வழிபடுவது இன்னொரு மரபு. இவை பின்னர் வந்த கோயில்கள் என்று சொல்லப் படுகிறது. முதலில் சொன்ன முறைப்படியான கோயில்கள் மிகவும் குறைவு. இவற்றில் முதலில் சொல்லப் பட்ட இறைவன் தானாகவே உறைந்து சக்தியுடன் இருக்கும் இடங்கள் மிக, மிகச் சக்தி வாய்ந்த ஸ்தலங்களாய்ச் சொல்லப்படுகிறது. சிதம்பரம் அத்தகைய ஸ்தலங்களில் முதன்மையானது. இறை சக்தியின் அற்புதம், பூரண வீரியத்துடன் வெளிப்படும் இடம் அது. ஆகவே இம்முறையில் குடி கொண்ட கோயில்களில் வழிபடும் முறையை “மகுடாகமம்” என்று சொல்லி இருக்க வேண்டும். இங்கு வழிபடும் முறையும் மகுடாகம முறை என்று சொல்லி வந்திருக்கலாம். அப்போது தில்லையம்பதியிலே வழிபட்டு வந்த இறையாளர்கள் மேற்கொண்ட வழிமுறையைப் பின்னால் வந்த “தில்லை வாழ் அந்தணர்கள்” பின்பற்றவில்லை என்றும் சொல்லப் படுகிறது.

திருக்கைலையிலே இறைவனைக் காணாமல் அவரைத் தேடிவந்த அவர்தம் சிவகணங்கள், காசியிலேயும் இறைவன் இல்லாமல், அவர்தம் ஆனந்தத் தாண்டவத்தையும் காண முடியாமல் பரிதவித்த வேளையிலே இறைவனே, அவர்களைத் தில்லைச் சிற்றம்பலம் நாடி வரச் சொன்னதாயும், இந்தச் சிவகணங்கள் வந்ததும், பூஜை, வழிபாட்டு உரிமைகளை இவர்களிடமே இறைவன் ஒப்படைத்ததாயும், அது முதல் தில்லை வாழ் அந்தணர்களே, வைதீக முறைப்படி பூஜை, வழிபாடுகளைப் பதஞ்சலி தொகுத்துக் கொடுத்த “பதஞ்சலி பத்ததி”யில் மாற்றியதாயும் ஒரு கூற்று இருக்கிறது. முன்னர் செய்து வந்த மகுடாகமமுறை வழிபாடு தமிழா, வடமொழியா என்பது குறித்து, எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book