64

!!!!


தனக்கென ஒரு மகன் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணுவானவர், இறைவனைக் குறித்துத் துதிக்க, தன்னை ஒதுக்கிவிட்டாரோ என நினைத்த தேவியானவள், மனம் வருந்த, விஷ்ணுவுக்குப் பிள்ளைப் பேறும், கூடவே சிவனையும், தேவியையும் வணங்கித் துதிக்கும்படியான கட்டளையும் கிடைக்கின்றது. அப்போது தனக்குப் பிள்ளைப் பேறு அளித்த சிவனையும் குடும்பத்தோடு பார்க்க விரும்பிய விஷ்ணு, அவ்விதமே இறைவனை வேண்ட இறைவன் காட்சி அளித்த கோலமே சோமாஸ்கந்த கோலம். நடுவிலே ஸ்கந்தன் அமர்ந்திருக்க, இரு பக்கமும் தாய், தந்தையர்கள் இருக்கக் காட்சி கொடுத்த அந்த விக்ரகத்தைப் பூஜித்து விஷ்ணு பெற்ற பிள்ளையே மன்மதன் ஆவான். இந்த மகாவிஷ்ணு எந்நேரமும், இறைவனைத் தன் மூச்சிலேயே நிலை நிறுத்தி, இதயத்திலே வைத்து மானசீகப் பூஜை செய்ய, இறைவன், மகாவிஷ்ணுவின் இதயத்திலே ஆனந்த நடனம் ஆடினார். அப்போது அதற்குத் தாளம் விஷ்ணுவின் மூச்சுக் காற்றே, சற்றும் சத்தமே இல்லாத இந்த மூச்சுக்காற்றின் தாளத்திற்கு ஏற்ப இறைவன் ஆடிய நடனமே “அஜபா நடனம்” என்று சொல்லப் படுகின்றது.

பின்னர் மகாவிஷ்ணு இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவிரும்ப, இறைவன், தான் சிதம்பரம் க்ஷேத்திரத்திலே ஆடப்போவதாயும் ஆகவே அங்கே வந்து காணுமாறும் சொல்லத் தன் பரிவாரங்களோடு சிதம்பரத்திலே எழுந்தருளினார் மகாவிஷ்ணு. இவரே இன்றளவும் கோவிந்தராஜர் என்ற பெயரோடு சிதம்பரம் என்று சைவர்களாலும், திருச்சித்திர கூடம் என்று வைஷ்ணவர்களாலும் அழைக்கப் படும் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளார். இருவரும் ஒருவரே என்பதே பெரும்பாலான பக்தர்களின் கூற்றும் கூட. இதை மெய்ப்படுத்துவதே போல் பல பக்திமான்களும் பாடியுள்ளனர், போற்றித் துதித்துள்ளனர் இருவரையும் பற்றி. முதலாழ்வார்களின் பாசுரத்தில் காணப்பட்டபடி,
“அரன் நாரணன் நாமம், ஆன் விடை யுன்னூர்தி,
உரைநூல் மறை உறையும் கோயில் -வரை நீர்
கருமம், அழிப்பு, அளிப்பு கையது வேல் நேமி,
உருவமெரி கார்மேனி ஒன்று”
எனப் பொய்கை ஆழ்வாரும்,

“ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன், நான்முகன், அரன் என்னும் இவரை
ஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே!”
என்று நம்மாழ்வாரும் சொன்னபடிக்குக் காட்சி அளிக்கின்றனர், சிதம்பரத்தில் நடராஜரும், கோவிந்தராஜரும்.

பல மன்னர்களின் திருப்பணிகளாலும், பல பக்தர்களின் பெரும் முயற்சியாலும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்போது ஆரம்பித்தது, எப்போது கட்டப்பட்டது என்று நிர்ணயம் செய்யமுடியாத காலத்தில் இருந்தே இருப்பதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள், நாளடைவில் ஒவ்வொரு பாகமாய்ச் சேர்க்கப் பட்டு, ஒவ்வொரு பாகமும் ஒவ்வொருவரால் கட்டப் பட்டு இன்று முழுப் பூர்த்தி அடைந்த கோயிலாகக் காட்சி அளிக்கின்றது. மாணிக்க வாசகரின் திரு அகவல் ஒன்றிலே அவர் பாடிய வண்ணம்,
“பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய்த் திகழ்ந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!”
என்னும்படிக்கு, இந்தப் பூமியானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம்,ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களையும்,

நீரானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்ற நான்கு குணங்களையும்,

தீயானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களையும்,

வளியென்று சொல்லப் படும் காற்றானது சப்தம், ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும்,

அண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன. இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க் காணப்படுகின்றார்.இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் இங்கே நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம், தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார். திருவீழிமிழலைப் பதிகம் ஒன்றிலே, சொன்னாற்போலே, அரியும், சிவனும் ஒன்றே என்னும் கருத்தைப் பக்தர்களுக்கு நிலைநாட்டவே இவ்விதம் கோயில் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாமோ????

“மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும்பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே!
(இது அப்பர் தேவாரம்)
ஓருருவம் மூவுருவம் ஆன நாளோ
நாரணனை இடப்பாகத்து அடைந்தார் போலும்.”
என்றும்,
“அரியாகிக் காப்பான், அயனாய்ப் படைப்பான்,
அரனாயழிப்பவனுந்தானே!”

என்று அனைத்துமே அவன் ஒருவனே எனச் சொல்கின்றனர். அரியின் இதயத்தில், அரனும், அரனின் இதயத்தில் அரியும் குடி இருக்கின்றார்கள். இருவரும் ஒருவரே என்பதைச் சொல்லும் வண்ணம், “அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு” என்றும் சொல்லுவதுண்டு. சிவன் எந்தவிதமான அடையாளமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம் “அலிங்கம்” எனவும், விஷ்ணு எந்தவிதமான ரூபமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம், “அமூர்த்தி” எனவும் சொல்லப் படுகின்றனர்.

கர்நாடக போர்களின் சமயம் காட்டுராஜா ( மராத்திய மன்னர் )என்பவர் சிதம்பரம் கோயிலில் தன் படையுடன் வந்து தங்கிவிட்டதாக வரலாறு உண்டா ?
மேலும் கோயிலில் நந்தனார் சிலை சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன் கொடிமரத்திற்கு எதிரில் இருந்ததா ?
பதில் தாருங்கள் அம்மா ,
அன்புடன்,
எ.சுகுமாரன் //
மேற்கண்ட கேள்வியைத் திரு சுகுமாரன் என்பவர் கேட்டிருக்கின்றார். சமீபத்தில் சிதம்பரம் சென்றபோது தீட்சிதரிடம் பேசிய வகையில் மேற்படி கேள்விக்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றே தெரிய வந்தது. காட்டு ராஜா (மராத்திய மேலும் மாலிக்காபூர் பற்றியும், அப்போது தான் தமிழ்நாடு வந்த மாலிக்காபூரிடமிருந்து நடராஜரைக் காக்க வேண்டி, தீட்சிதர்கள் போராடியதாயும் தெரிவித்தார். அதற்கான சரித்திரச் சான்றுகள் பற்றி பேராசிரியர் திரு டி.என். சுப்பிரமணியன் அவர்கள் எழுதி இருப்பதாயும் தெரிய வந்தது. மேலும் நந்தனாருக்கு ஒரு போதும் கொடி மரத்திற்கு எதிரே சிலை இருந்ததில்லை எனவும் சொன்னார். தீட்சிதருக்கு 70 வயதுக்குக் கிட்டத்தட்ட ஆகின்றது. ஆகவே கொடி மரத்திற்கு எதிரே நந்தனாருக்குச் சிலை இருந்தாலோ, அப்புறம் அகற்றி இருந்தாலோ, கட்டாயம் தெரிய வந்திருக்கும். மேலும் நந்தனார் சிலை இருந்ததாய்க் கூறப்படும் இடம் விஷ்ணு கோயில் திருப்பணிக்கான கட்டுமானப்பொருட்கள் வெளியிலிருந்து உள்ளே கொண்டுவர வசதிக்காக இடிக்கப் பட்டது. அதைத் தான் இன்று பலரும் நந்தனார் சிலை இருந்ததாகவும், அதை தீக்ஷிதர்கள் அகற்றிவிட்டதாயும் கூறுகின்றனர். விஷ்ணு கோயில் ராஜ கோபுரத்தின் கலசங்களுக்கு அருகே பார்த்தால் பூர்வத்தில்/ ஆதி காலத்தில் இங்கே சிவன் கோயிலாக மட்டுமே இருந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாய் நந்தியின் உருவச் சிலை சுற்றுச்சுவரில் காணப்படும். அந்த இடத்தில் ஏற்கெனவே விஷ்ணு கோயில் இருந்திருந்தால் நந்தி வந்தது எப்படி? சுவரின் பழமையையும், நந்தியின் பழமையையும் கவனித்தால் சாதாரணக் கண்களுக்கே இது தெளிவாய்த் தெரிய வரும்.

இதே போல் விஷ்ணுவிற்குப் பிரம்மோற்சவம் நடத்த தற்சமயம் ஏற்பாடுகள் செய்தது பற்றியும் பேசினேன். அது பற்றி தீட்சிதர் கூறியது தவிரவும், வேறு சில தகவல்களும் கிடைத்தன. நண்பர் சிவசிவாவும் அதே போன்ற தகவல் ஒன்றின் குறிப்புக் கொடுத்திருக்கின்றார். அதைப் போய்ப் பார்த்துப் படித்துவிட்டு அது பற்றி எழுதுகின்றேன்.

கீழே உள்ள கேள்விகள் என்னால் கேட்கப் பட்டவை. அதற்கான பதில்கள் எங்கள் தீட்சிதர் சொன்னது:

//வணக்கம். சிதம்பரம் நடராஜர் கோயிலில், நந்திக்குப் பின்னால் நின்று கொண்டே ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓதவேண்டுமெனக் கூறுவதற்கு என்ன காரணம் என்பதை உங்களால் கூற முடிந்தால் நன்றி உடையவளாய் இருப்பேன். மேலும் அரசகுலத்தினரும், வணிக குலத்தினரும் தவிர, அந்தணர்களால் திருப்பணி செய்யப் பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா? தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்து வந்த நம்பூதிரிகளே என்பதும் உண்மையா? இதற்கான பதிலை உங்களால் கொடுக்க முடிந்தால் நல்லது.

நந்தி குருவாகின்றார் அனைத்துச் சிவனடியார்களுக்கும். மேலும் அனைத்துச்சிவ கணங்களுக்கும் தலைவனும் ஆகின்றார். பதினெட்டுச் சித்தர்களுக்கும் அவரே குரு. அவர் ஈசனிடமிருந்து கற்றுப் பின்னர் சனகாதி முனிவர்கள், சித்தர்கள் நால்வர், அவர்களிடமிருந்து மற்றச் சித்தர்கள், அவர்களிடமிருந்து சிவனடியார்கள் என அனைவரும் வரிசைக்கிரமமாய்ப் பாடம் கற்றதாலே, நந்திக்கு மிஞ்சினவர் யாரும் இல்லை என்பதாலும் நந்திக்குக் கீழே இருந்தே தேவாரம் ஓதுவார்களால் இன்றளவும் ஓதப் பட்டு வருகின்றது. இது அனைத்துச் சிவாலயங்களிலும் காண முடியாது. சிதம்பரம் மட்டுமே கோயில் என்று அழைக்கப் படுவது. ஈசன் தன் ஜீவ சக்தியோடு இங்கே உறைவதாயும், ஈசனே நேரிடையாய்க் கோயில் கொண்டிருப்பதாலேயும், அந்தக் கைலைக்கு இது நிகர் என்று சொல்லுவதாலும் இங்கே நந்திக்கும், ஈசனுக்கும், நடுவே அடியார் நின்று ஓதுவது இல்லை. வழிபடும் உரிமையை ஈசனிடமிருந்து நேரடியாய்ப் பெற்ற தீட்சிதர்களும், அங்கே வழிபாடு மட்டுமே நடத்துவார்கள். தேவாரம் ஓதுவது கீழே நின்று கொண்டு தான். பொதுவாக இது கோயிலின் பரம்பரை ஓதுவார்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் அப்படித் தான் பாடி வருகின்றார்கள் இன்றளவும். பலமுறைகள் நேரிலே கண்டுள்ளேன்.

//மேலும் அரசகுலத்தினரும், வணிக குலத்தினரும் தவிர, அந்தணர்களால் திருப்பணி செய்யப் பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா? தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்து வந்த நம்பூதிரிகளே என்பதும் உண்மையா?.
பல அந்தணர்கள் தங்கள் பெயரையோ, ஊரையோ, கொடுக்கும் பணத்தையோ பற்றி வெளியே சொல்லாமல் திருப்பணிகள் செய்து வருகின்றார்கள். தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்தெல்லாம் வரவில்லை. திருக்கைலையில் இருந்தே வந்ததாய்ச் சொல்கின்றனர். மேலும் ஈசனைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராய்க் கருதுவதால் கோயிலின் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கே உரியதாகவும் சொல்கின்றனர். இனி அடுத்து, விஷ்ணு கோயில் பற்றிய சில தகவல்களுடன் நாளை சந்திப்போம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book