35

சிவகங்கைக் குளத்துக்கு மேற்கே நாம் காணப் போவது “சிவகாம கோட்டம்” என்று அழைக்கப் படும் சிவகாம சுந்தரியின் சன்னதி. இறைவனின் சக்தி மூன்றுவிதப் படுகிறது. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்பவை. சக்தி எல்லாமே ஒன்று என்றாலும் அந்த அந்த நேரத்துக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளணும் இல்லையா? அதனால் நடராஜரை விட்டுப்பிரியாமல் அவருக்கு அருகேயே இருக்கும் சிவகாமசுந்தரியானவளை “இச்சா சக்தி” எனவும், இங்கே தனிக் கோயில் கொண்டு குடியிருப்பவளை “ஞான சக்தி” எனவும், இவளுக்கு அருகேயே துர்கையாக இருப்பவளை, கிரியா சக்தி” எனவும் உள்ளூர் மக்கள் நம்புவதோடு அல்லாமல் சில புராணங்களும் அவ்வாறு சொல்வதாய்க் கூறுகின்றனர். இந்தக் கோயில் சோழர் காலத்தில் இரண்டாம் குலோத்துங்கனால் திருப்பணி செய்யப் பட்டுள்ளது. தசமகாவித்யை பற்றிச் சொல்லும் “ஸ்ரீவித்யா உபாசனா”, இந்தக் கோயிலை பூதேவியின் இருப்பிடம் எனக் கூறுவதாய்த் தெரிகிறது.

சிவகாம சுந்தரியின் அருளாலேயே பதஞ்சலி முனிவர் தன்னுடைய வியாகரணத்துக்கான மகாபாஷ்யத்தை எழுதியதாய்ச் சொல்கின்றனர். ஹயக்ரீவர், அகஸ்த்யர், லோபாமுத்ரை, துர்வாசர், பரசுராமர், ஆதி சங்கரர் போன்றோர் இங்கே வழிபாடு நடத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு வருஷமும் ஐப்பசி மாசத்தில் பிரம்மோற்சவத்தின் போது, சிவகாமசுந்தரிக்குத் திருமண விழாவும் நடராஜருடன் இங்கே நடை பெறுகிறது. வேறெங்கும் காணாத அதிசயமாய்ச் சித்திரகுப்தனுக்கு இங்கே தனியாய் ஒரு சன்னதி உள்ளே நுழையும்போது இடது பக்கமாய்க் காணலாம். சித்திரகுப்தனுடன் கூடவே பிரம்மாவும் இருக்கிறார்.

சிவகாமசுந்தரியை அடுத்துச் சிறிய அகிலாண்டேஸ்வரி சன்னதி காணப் படுகிறது. அதற்குப் பின்னர் துர்கை சன்னதி கிட்டத் தட்ட ஒரு தனிக் கோவில் போல் முக்கியத்துவம் பெற்றுக் காணப் படுகிறது. பராசக்தியின் அவதாரங்களில் ஒன்றான “மஹிஷாசுரமர்த்தினி”யாக வடக்கே பார்த்துக் கொண்டு இங்கே காணப் படும் அம்மனின் காலடியில் மஹிஷன் காணப் படுகிறான். இந்தக் கோயில் துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவளாயும் இருக்கிறாள். நவராத்திரிகளில் இவளுக்குத் தனி அலங்காரம், பூஜைகள் முதலியன உண்டு.

பாண்டியநாயகன் கோவில்: இது ஒரு முக்கியமான கோவில். தென்னிந்தியக் கோவில் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் இது மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப் பட்டிருக்கிறது. ஆறுமுகங்களோடும், அருகில் தன்னிரு மனைவியரான வள்ளி, தேவானையோடும், மயில் வாகனனாய்க் காட்சி தருகிறான் அந்த வேலவன் இங்கே! பாண்டியனின் குலத்தைக் காக்க வந்த கடவுளான கந்தனுக்குப் பாண்டியன் இங்கே தனியே கோயில் எடுத்துச் சிறப்புச் செய்தமையால் இந்தக் கோயில் பாண்டிய நாயகன் கோயில் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். இந்தக் கோயிலின் முன்பாகத்தில் ஷண்முகன் என்ற பெயருடனும் அருள் பாலிக்கிறான் குமரக் கடவுள்.

 

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த, பூஜை செய்த சக்கரமும், சன்னதியும் இங்கே இருப்பதாய்க் கூறுகின்றனர். ஆனால் நாங்க போனப்போ அந்தப் பக்கம் போகவே இல்லை. போய்ப் பார்க்காமல் எழுத முடியாதுனு நான் அதைப் பத்தி எழுதலை. சிவகங்கைக் குளத்தின் வட கரையில் நவலிங்கத்துக்கு அருகே இருப்பதாய்ச் சிலர் கூறுகின்றனர்.
தீட்சிதர்கள் பத்தின கேள்வி ஒன்றுக்கு பதில்: தீட்சிதர்கள் முகலாயர் படை எடுப்பின் போது உயிர்த் தியாகம் செய்ததும், நடராஜரைத் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்ததும் பற்றிக் குறிப்புக்களைத் தேடி ஆராய்ந்தபோது “திண்ணை”யில் அரவிந்தன் நீலகண்டன், எழுதி இருப்பதைப் படித்தேன். மாலிக்காஃபூர் படை எடுப்பு நேர்ந்த சமயத்தில் இது நடந்ததாயும், இது பற்றி “அமீர் குஸ்ரூ தாரிக்-இ-அலை” விவரமாக எழுதி இருப்பதாயும் அவர் சொல்லி இருக்கிறார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்கள் பத்தி ஒரு தனிப்பதிவும் வர இருப்பதால் இந்த விஷயத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book